Sunday, February 14, 2016

கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு


DINAMALAR

தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன.
இன்ஜி., கல்லுாரிகளில், மே முதல் வாரத்தில், மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. ஜூலை, 30க்குள், அரசு ஒதுக்கீடுக்கான இடங்களும்; ஆக., 14க்குள், நிர்வாக ஒதுக்கீடுக்கான இடங்களும் நிரப்பப்படும்.
அதற்கு முன், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அங்கீகாரம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. வரும், 28ம் தேதிக்குள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., கெடு விதித்துள்ளது.
அதனால், 500க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து வருகின்றன. சில கல்லுாரிகள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை படிப்புக்கான மையத்தை மூடவும், சில பாடப்பிரிவுகளை ரத்து செய்யவும் கோரியுள்ளன.
தற்போதைய நிலையில், 60 இன்ஜி., கல்லுாரிகள், பல்வேறு பாடப்பிரிவுகளை ரத்து செய்ய கோரிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., - எம்.பி.ஏ., பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் முன்வராததால், அப்படிப்புகளை தொடர்ந்து நடத்த முடியாது என கல்லுாரிகள் தெரிவித்துள்ளன.
அதேபோல், இன்ஜி., கல்லுாரி வளாகங்களில் தனியாக செயல்படும் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை கல்லுாரிகளை மூடவும், சில கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. அதற்கு, மாணவர் சேர்க்கை குறைவு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமை போன்ற காரணங்களை தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பி.இ., - பி.டெக்.,கில் புதிதாக தொழில் சார்ந்த பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கேட்டுள்ளன. தொழிற்சாலைகளுடன் இணைந்து நடத்தப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024