By இரா. கதிரவன்
First Published : 06 February 2016 05:19 AM IST
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் - எனத் துவங்கும் பாடல் ஒன்று புறநானூற்றில் உண்டு.
பண்பாலும் அறிவாலும் நிறைந்த மனைவி மக்கள், கற்றறிந்த சான்றோர் வாழும் ஊர், அறம் வழுவா நல்லாட்சி தரும் அரசு - தீங்கு செய்யா அரசன் ஆகியோர் அமைந்தமையால், தமக்கு முதுமை எய்தியும், நரை விழவில்லை என, ஒரு புலவர் எழுதிய பாடல். இது அந்தக் கால நிலை...
இன்றைய காலகட்டத்தில், முதியோர் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க எத்தனிப்போம். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில்,மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் சென்றடைந்திருக்கின்றன. இது தவிரவும், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் எல்லோருக்கும் உணவு என்ற உணவுப் பாதுகாப்பினை பெருமளவுக்கு உறுதி செய்கின்றது
.
இந்தச் சூழலில் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில், மக்களின் சராசரி ஆயுள்காலம் 43 ஆண்டுகளாக இருந்தது. இப்போது, மேற்சொன்ன காரணங்களால்,சராசரி ஆயுள்காலம் 62-ஐ எட்டியிருக்கிறது.
இன்றைய தினம், பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண் - பெண் இரு பாலரும் வேலைக்குச் செல்லுதல் - குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பது - கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பது, நகரமயமாதல் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடும்பங்கள் இடம் பெயருதல் மற்றும் முக்கியமாக உலகமயமாதல் காரணமாக வேலை செய்யும் ஆண் - பெண் இரு பாலரும் புலம் பெயருதல் போன்றவை, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த மாற்றங்கள், வயோதிகத்தை அடைந்தவர்கள் பால் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காண முற்படுவோம்.
முதியோர்களை மூன்று முக்கிய பிரிவினர்களாக பிரிக்கலாம்.
அவர்களது பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிப்பவர்கள்.
கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிப்பவர்கள்.
ஆணோ அல்லது பெண்ணோ தனியாக வசிப்பவர்கள்.
மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்புப்படி, இந்திய மக்கள்தொகையில், 1960-ஆம் ஆண்டு மக்கள்தொகையில் ஐந்து சதவீத மக்கள் 60 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள். 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகையில், சுமார் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள்.
இந்த வயோதிகர்களில், சுமார் 20 சதவீதம் பேர் கணவன் - மனைவி என்ற இருவர் மட்டும், வேறு துணை ஏதுமின்றி வாழ்கின்றனர். மேலும், ஐந்து சதவீதம் பேர் எந்தத் துணையும் இன்றி தனித்து வாழ்கின்றனர்.
ஆக, தற்போதைக்கு சுமார் 10 கோடிக்கும் மேல் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களில் கணவன் - மனைவி மட்டுமோ அல்லது துணையின்றியோ வாழ்வோரின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியைத் தாண்டும். வயோதிக தம்பதியினர், தனித்து வாழும் முதியோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர் என எவரும் இல்லாதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் என்ற பிரிவினராக இருக்கின்றனர்.
சில பொதுவான விஷயங்கள்: ஒரு குறிப்பிட்ட வயதினைத் தாண்டி வசிக்கின்ற எல்லோரையும் முதுமை பீடிக்கின்றது. முதுமையில் கணிசமானவர்கள் எதிர்கொள்ளும் சில பொதுவான பிரச்னைகள்: மற்றவர்களால் உதாசீனப்படுதல், பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, தளர்ச்சியுறும் உடல்நலம், குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுதல், பிறரோடு ஒன்ற முடியாத நிலை, பிறர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகுதல், வாழ்க்கையில் பிடிப்பின்மை அல்லது அலுப்பான சூழல்.
முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. எனவே, முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொள்ளுதல் முக்கியம். தவிரவும், முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இரு முக்கியப் பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதல், அது தொடர்பான பிரச்னைகள்.
இதன் காரணமாக, இவர்கள் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் வீட்டில் சிறைவாசம்போல் முடங்கிக் கிடத்தல், வீட்டில் சிறு சிறு வேலை செய்ய இயலாமை, மளிகை, கறிகாய், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு அற்றுப் போகுதல், எழுதப் படிக்க இயலாமை உள்ளிட்ட பிரச்னைகள். இந்தப் பிரச்னைகள் அனைத்தும் உடல் சார்ந்தவை. இவர்களைச் சுற்றி இருப்பவர்கள், அக்கறையோடு சிறு சிறு உதவிகள் செய்தால்கூட, ஓரளவு இப்பிரச்னைகளை முதியோரால் சமாளிக்க இயலும்.
அடுத்தது, மனம் சார்ந்த பிரச்னைகள்: பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கபடுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை போன்றவை ஏற்படுத்தும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும்.
இவர்களது மிக முக்கிய தேவை என்பது, அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவைதான். ஆனால், முதியோர் அனுபவிக்கும் பிரச்னைகளில் மிகக் கொடுமையானது,அவர்கள் அனுபவிக்கும் தனிமைதான்.
உதாரணத்துக்கு, ஒரு பெரிய நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர், தனிமையில் பேச்சு துணைக்கூட இன்றி இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது இருத்தல், தனது சுக, துக்கங்களை மனம் விட்டு பேச முடியாது இருத்தல் போன்ற விஷயங்கள் அவர்களை கொடுமைப்படுத்துகின்றன.
வேலைக்கார ஆள் அல்லது வீட்டுக்கு வரும் விற்பனை பிரதிநிதி ஆகியோரோடு மட்டுமே பேசக்கூடிய அவல நிலையில் இருக்கும் முதியவர்கள், இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளம். வாரம் ஒரு நாளோ அல்லது மாதம் ஒரு நாளோ, அயல் நாட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பு ஒன்றுதான், அவர்களுக்கு எங்கோ ஒரு மகன் அல்லது உறவினர் இருக்கிறார் என்பதற்கான ஒரே அடையாளம்.
தவிரவும், இவர்களின் இந்தப் பிரச்னைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாதபோது, அவற்றுக்கு தீர்வு என எதுவும் கண்ணில் தெரிவதுமில்லை. நகரங்களோடு ஒப்பிடுகையில் கிராமங்களில் நெஞ்சில் கொஞ்சம் ஈரம் ஒட்டிக் கொட்டிருப்பது என்னவோ உண்மை.
வயோதிகர்களை அவர்கள் தனிமையில் இருந்தால்,அவர்களை வீட்டில் எட்டிப் பார்ப்பது, பேச்சுக் கொடுப்பது, சிறு சிறு உதவிகள் செய்வது என்ற பழக்கம் நம் கலாசாரா ரீதியாக இன்னும் கிராமங்களில் மறையாமல் இருப்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டுக்காரரைத் தெரியாது என்று கூறுவது போலி கெளரவம்.
முதியோரின் இத்தகைய பிரச்னைகளை அரசு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது. அதனால் சில சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. முதியோருக்கு உதவ முற்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் மற்றும் சலுகைகள் தருவது, முதியோர் பிரச்னைகள் - தீர்வுகள் குறித்த தகவல் திரட்டுதல் மற்று ஆய்வு ஆகியனவற்றுக்கு உதவி, ரயில் பிரயாணம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் சலுகைகள் என்ற விஷயங்களில் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.
முதியோர் படும் இன்னல் குறித்து சராசரி மனிதர்கள் என்ன செய்ய முடியும்? நாளை நமக்கு முதுமை வரும்போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதேபோல இன்று நம் முன் நடமாடும் முதியோரை நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை அனைவரும் மனதில் பதித்துக் கொள்ளும்போது, நம்மைச் சுற்றியுள்ள முதியோர், நமக்கு அன்னியர்களாகத் தெரிய மாட்டார்கள்.
நாம் எங்கோ சந்திக்கும் ஒரு முதியவர் அல்லது மூதாட்டியின் உடல் நலம் விசாரிப்பதோ அல்லது பேச்சுக் கொடுப்பதோகூட அவர்களுக்குப் பெரும் ஆறுதல் தரும். அதுகூட முடியவில்லை என்றால், ஒரு சிறு புன்னைகைகூட அவர்களுக்கு நிம்மதி தரும்.
பெரும்பாலான முதியோர்கள் ஏங்குவது நிச்சயமாக பணத்துக்காக அல்ல. அவர்களின் தேவை கொஞ்சம் அன்பு, கரிசனம், நல்லதாக நான்கு வார்த்தைகள், முடிந்தால் கொஞ்சம் உதவி அவ்வளவுதான். இதனை செய்யும் திறன் நம் எல்லோரிடமும் இருக்கிறது.
முதுமை ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment