Thursday, February 11, 2016

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!


vikatan.com
செல்போன் வெடித்ததால் படுகாயம், உயிர் பலி என்கிற கவலைக்குரிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. இரு வாரங் களுக்கு முன்பு, சென்னை வியாசர்​பாடியைச் சேர்ந்த ஒருவர் இரவு நேரத்தில் செ​ல்போனை சார்ஜ் போட்டு​விட்டுத் தூங்கிவிட்டார். அதிகாலையில் அந்த செல்போன் வெடித்ததில், வீடே தீப்பிடித்தது. அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து, மதுராந்தகம் அருகே செய்யூர் பகுதியில் செல்போன் வெடித்ததால் பள்ளி மாணவன் ஒருவனின் கண் பாதிக்கப்பட்டது.

செய்யூரைச் சேர்ந்த கூலித்தொ ழிலாளி எட்டியப்பன் - மனைவி வெண்ணிலா. இவர்களின் மூன்றாவது மகன் தனுஷ். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை தனுஷ் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, போன் வெடித்துச் சிதறியது. கண் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான் தனுஷ். வெண்ணிலாவிடம் பேசினோம்.
“போன வாரம் என் பையன் ஸ்கூல் போய்ட்டு வந்தான். நான் சமையல் செஞ்சிட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள விளையாடிட்டு இருந்தான். அப்போ, டமார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போய் பார்த்தா கண், முகம், கை எல்லாம் ரத்தம். உடனே அவனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனோம். அப்புறம் தான் தெரிஞ்சுது செல்போன் வெடிச்சதுல, கண் பார்வை பறிபோய் இருக்குனு. எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. இங்கே ஆபரேஷன் பண்ணினாங்க. இப்போ, கொஞ்சம் பார்வை கிடைச்சிருக்கு. பழைய மாதிரியே கண்பார்வை வருமான்னு தெரியல” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் வஹிதாவிடம் பேசினோம். “பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பையனை இங்க கொண்டு வந்தாங்க. செல்போனை முகத்துக்கு நேர வைத்துப் பார்த்துட்டு இருக்கறப்போ போன் வெடிச்சதுல, அதன் துகள்கள் கண்ணுக்குள்ளே போயுள்ளன. அதனால பார்வை பறிபோய் இருக்கிறது. வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்தும், இடது கண்ணில் விழித்திரையும் கிழிந்தும் உள்ளன. முதற்கட்ட சிகிச்சையில், கருவிழி பாதிக்கப்பட்டிருந்த கண்ணில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றுக் கருவிழி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் அதில் லென்ஸ் பொருத்த முடியும். இடது கண்ணில் விழித்திரையும் தைக்கப்பட்டது. அந்த அறுவைச்​சிகிச்சைக்குப் பிறகு, தனுஷுக்கு 4 முதல் 5 மீட்டர் வரை பார்வை கிடைத்துள்ளது. சார்ஜ் போட்டிருக்கும் போனைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியன், “செல்போன் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சந்தைகளில் தரமில்லாத எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதுபோன்ற விபத்துகளுக்கு அதுதான் முக்கியக் காரணம். சார்ஜரில் வோல்டேஜ் அதிகமாகும்போது, அதை முறைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விலை குறைவான சார்ஜர்களிலும், செல்போன்களிலும் இருப்பதில்லை. எனவே, அவை வெடித்துச் சிதறுகின்றன. எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்கிற அளவீடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று சர்வதேச வரையறை உள்ளது. அப்படி எந்த முறையும் இந்தியாவில் இல்லை. அரசும் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற விஷயங்களில் இனிமேலாவது அரசு கவனம் செலுத்தவேண்டும். தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணமும், அதுபற்றிய விழிப்பு உணர்வும் மக்களுக்கு வரவேண்டும்’’ என்றார்.
இன்றைக்கு, பெரும்பாலானோர் கடைகளுக்குச் சென்று தரத்தை ஆராய்ந்து பொருட்கள் வாங்குவதில்லை. பேனா, மொபைல் என என்ன வாங்குவதாக இருந்தாலும், ஆன்லைன் ஷாப்பிங்தான். ‘குறைந்த விலையில் பவர் பேங்க்’ என்று முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்த ஒருவர், அந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார். சிறப்பான பேக்கிங்கில் பவர் பேங்க் வந்து சேர்ந்தது. பல மணிநேரம் சார்ஜ் போட்டுள்ளார். ஆனால், சார்ஜ் ஏறவே இல்லை. சந்தேகப்பட்டு பவர் பேங்க்கை உடைத்துப் பார்த்தபோது, அதில் 7 பேட்டரிகள் இருந்தன. அதில் ஒன்று மட்டுமே நிஜமான பேட்டரி. மற்றதெல்லாம் மண் நிரப்பட்ட கூடு. இணையத்தில் பொருள் வாங்குவது தவறல்ல. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெருள்தானா என்பதை உறுதிசெய்து அதை வாங்க வேண்டும். 

மொத்தத்தில், செல்போனில் எச்சரிக்கையாக இருங்கள்.

- மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: ப.சரவணகுமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024