Wednesday, February 17, 2016

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க மோடிக்கு ஜெ. வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி | கோப்புப் படம்

2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன், ஈரோடு பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கலாம் என்ற பரிந்துரையையும் தெரிவித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 22 முதல் 25 தேதி தமிழக அரசு பரிந்துரைத்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், மத்திய அரசு எந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறது என்பது குறித்து தமிழக அரசுக்கு பதில் அளிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் தமிழக மக்கள் பெரும் பயனடைவர்.

எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் எது என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024