Tuesday, February 23, 2016

குடிநீர் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்ப்பதா? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

குடிநீர் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்ப்பதா? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

DAILY THANTHI

புதுடெல்லி,
டெல்லிக்கு குடிநீர் தடைபட்ட பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு, கோர்ட்டு உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள் என்று டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
குடிநீர் நிறுத்தம்
அரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர், இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லிக்கு தண்ணீர் வினியோகமாகும் முனாக் கால்வாயை முற்றுகையிட்டு டெல்லிக்கு தண்ணீர் விடுவதை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டெல்லியில் கடுமையான முறையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் தண்ணீர் வராமல் மக்கள் மிகவும் அவதியுற்றனர்.
இதையடுத்து டெல்லி மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘ஜாட் இனத்தவரின் போராட்டத்தினால் டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மந்திரி ஆஜர்
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
டெல்லி மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், தனது வாதத்தில், ‘அரியானாவில் நடைபெறும் போராட்டத்தினால் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடுமையான தண்ணீர் பஞ்சம் டெல்லியை பாதிக்கும் ஆபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட மந்திரி கபில் மிஸ்ரா இந்த கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார்’ என்று கூறினார்.
ஏ.சி. அறை
இதையடுத்து தலைமை நீதிபதி மிகுந்த கோபத்துடன், ‘இதுபோன்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட மந்திரி கோர்ட்டு அறையில் அமர்ந்து இருக்கிறார். அரியானா சென்று அந்த மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதை விட விஷயத்தை கோர்ட்டுக்கு எடுத்துக் கொண்டு வருவது சுலபமாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? ஏ.சி. அறையில் ஓய்வெடுத்துக் கொண்டு கோர்ட்டு உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள். எல்லாவற்றையும் தட்டில் வைத்து தரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
இது டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையிலான நிர்வாக பிரச்சினையாகும். அங்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தி டெல்லிக்கு தண்ணீர் கொண்டு வரும் வழியை பாருங்கள். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினார்.
நோட்டீசு
இதையடுத்து இந்த மனுவை தயவு செய்து தள்ளுபடி செய்ய வேண்டாம் என்றும், நிலைமையை உத்தேசித்து மறுபரிசீலனை செய்யுமாறும் ராஜீவ் தவான் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், டெல்லிக்கு குடிநீர் வினியோகத்தை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அரியானா மாநில அரசை கேட்டுக்கொண்டனர்.
அரியானா மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இன்றே குடிநீர் வினியோகத்தை தொடங்க முயன்று வருகிறோம்’ என்றார்.
இதையடுத்து அரியானா அரசு இந்த விவகாரம் குறித்து இரு நாட்களில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024