Thursday, February 18, 2016

ஊழியரல்லர் பணியாளரே!


Dinamani

By சமதர்மன்

First Published : 18 February 2016 01:51 AM IST


ஊதியம், பணி இந்த இரண்டு சொற்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொற்பமான ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு பணியினை செவ்வனே செய்து முடிக்கும் செயலே ஊழியம் ஆகும். ஊழியம் என்னும் சொல் சேவை எனவும் பொருள்படும்.
அதேவேளையில், ஒரு கணிசமான தொகையை மாத ஊதியமாக பெற்றுக் கொண்டு ஒரு வேலையை செய்வது பணி ஆகும். அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் பணி இத்தகையதே.
எனவே, அரசு வேலை செய்யும் கடைநிலைப் பணியாளர் முதல் மேல்நிலை அதிகாரி வரையிலும், துவக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரையிலும் உள்ள அனைவரையுமே அரசுப் பணியாளர் என்றே வகைப் படுத்த முடியும்.
அரசுப் பணியாளர்களுக்கு உரிய அகவிலைப் படி உயர்வு உ ள்பட பல பண பலன்களை அரசு பட்டியலிட்டு வழங்கியே வருகிறது. தனியார் நிறுவனப் பணியாளருக்கோ அல்லது சுயதொழில் புரிவோருக்கோ இத்தகைய பண பலன்கள் சாத்தியமற்றவையே.
அரசுப் பணியாளர்களை அரசு செல்லப் பிள்ளைகள் போல நடத்தி வந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து அரசுக்கெதிராக போராடவே அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களும் முன் வருவது அரசிடமும் பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
சம்பளம், சலுகைகளை மட்டும் உயர்த்திக் கேட்கும் இவர்கள், ஊதிய உயர்வுக்கு ஏற்ப பணியை அரசு அதிகப்படுத்தினால் ஏற்றுக்கொள்வதில்லை. தனியார் நிறுவனங்கள் பணிச் சுமையைக் கூட்டிய பின்பு தானே ஊதிய உயர்வினை அறிவிக்கின்றன.
அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களுக்கென இருக்கும் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், அரசு கீழ்க்கண்ட சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்தி நிர்வாகத்தை துரிதப்படுத்தலாம்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் அலுவலகம் வருவதை உறுதி செய்யவும், அலுவலகம் அல்லது பள்ளி முடியும் முன்பே வீட்டிற்கு செல்வதைத் தடுக்கவும் பயோ - மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறையை நடைமுறைப் படுத்தலாம்.
ஆண்டுதோறும் அரசளிக்கும் 100 நாள்களுக்கும் மேற்பட்ட விடுமுறைகளை அனுபவித்த பிறகும், போலியான மருத்துவக் காரணம் காட்டி கணக்கு வழக்கு இன்றி விடுப்பு எடுக்கும் அரசுப் பணியாளர்களால் நிர்வாகத் தேக்கம் ஏற்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாம்.
அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களின் பணிச் செயல்பாட்டைக் கண்காணிக்க அலுவலகம் மற்றும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தலாம்.
அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட குறைந்த அளவில் பணி செய்வோரைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அரசுப் பணியாளர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது பெரும்பாலான நேரங்களில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட வெறும் ஆணையாகவே இருப்பதால், சம்பளப் பிடித்தம், பதவி இறக்கம், பணி நீக்கம் என குற்றத்திற்கு ஏற்ப உடனடி தண்டனையை அரசு வழங்கலாம்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை பொத்தாம்பொதுவாக முதலில் பணியில் சேர்ந்தோருக்கே முன்னுரிமை என 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பாணியில் வழங்காமல் தகுதி, திறமை உள்ள அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கலாம். இது அரசுப் பணியாளர்களிடையே போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்யும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
திறமையுடன் செயல்படும் அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கலாம். இதன்மூலம் திறமையற்ற அதிகாரிகள் உருவாவதைத் தடுக்கலாம்.
பணி நிரந்தரம் என்னும் கொள்கையைக் கைவிட்டுவிட்டு, தகுதி இருக்கும் வரையில் மட்டுமே ஒருவருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனையை அரசே பணியிடத்தில் நடத்தி மருத்துவ தகுதியற்றவர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் (VRS) ஓய்வளிக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கையூட்டு மற்றும் கிம்பளம் பெறுபவர்கள் ஆதாரத்துடன் பிடிபடும் பட்சத்தில் அவர்களைப் பாரபட்சம் பாராமல் உடனடியாக பணி நீக்கம் செய்யலாம்.
அரசின் இது போன்ற நியாயமான நடவடிக்கைக்கு எதிராக கோஷம் போடும் அரசுப் பணியாளர் சங்கவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
லஞ்ச லாவண்யத்தில் திளைத்த அரசு அலுவலர்கள் தகுந்த ஆதாரத்துடன் பிடிபடும் வேளையில், அவர்கள் அதர்ம வழியில் சேர்த்த சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்.
சரி.. இது ஒரு புறம் இருக்க.. விஷயத்துக்கு வருவோம்.
மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டில், மக்களுக்குரிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவை இங்கு அதிகமாக உள்ளது; ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தீர்வு காணப்பட வேண்டிய கோரிக்கை மனுக்களுடன் பொது மக்கள் கூட்டம் அலைமோதும் வேளையில், நிலைமையின் தீவிரத்தை உணராமல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஊழியரல்லர், வெறும் பணியாளரே.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...