Monday, February 22, 2016

களம் புதிது: விருது வென்ற விவசாயி!

Return to frontpage

இதை ஆண்களால் மட்டும்தான் செய்ய முடியும், பெண்கள் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்ற கற்பிதம் விவசாயத் துறையையும் விட்டுவைக்கவில்லை. நாற்று நடுதல், களையெடுத்தல், கதிர் அறுப்பு என்று பல்வேறு விவசாய வேலைகளில் பெண்கள் ஈடுபட்டாலும் விவசாயத்தை முழுமையாக செய்துமுடிக்கும் திறமையும் தெளிவும் ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கும் என்ற எண்ணத்தைத் தன் மகத்தான வெற்றியால் தவிடுபொடியாக்கியிருக்கிறார் பிரசன்னா. நெல் சாகுபடியில் தமிழக அளவில் முதலிடம் பெற்று, சிறந்த விளைச்சலுக்கான விருது பெற்றிருப்பது இவரது விவசாய திறமைக்கு ஒரு சோற்றுப் பதம்.

மதுரை திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னாவுக்கு 32 வயது. முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் படிப்பும் முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டியவர் ஏன் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார்? இதற்கான விடையை பிரசன்னாவே சொல்கிறார்.

“விவசாயம்தான் எங்கள் குடும்பத் தொழில். அதனால் ஓடியாடி விளையாடுகிற வயதிலேயே என் பெற்றோருடன் வயலில் இறங்கி, கூட இருந்து உதவுவேன். வயல்களைச் செழிப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே எனக்கு வந்துவிட்டது. அதோடு விவசாயத்தை இப்படித்தான் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்ற ஆசையும் வந்தது. என் கணவர் பத்மநாபன் என்னை மனைவியாக ஏற்க முக்கியமான காரணமே, நான் வயல் வேலையில் ஆர்வம் காட்டியதுதான்” என்று சொல்லும்போதே பெருமிதத்தில் மின்னுகின்றன பிரசன்னாவின் கண்கள்.

பல லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறும் டெல்டா பகுதியில், திட்டமிட்டு விவசாயம் செய்யும் பெரும் நிலச்சுவான்தார்கள்கூட நெல் விளைச்சலில் பிரசன்னாவின் சாதனையை நெருங்க முடியவில்லை. நம் பாரம்பரிய விவசாய முறைகளை விட்டுவிடாமல், காலத்துக்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிற நேர்த்தியும்தான் பிரசன்னாவுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

“விவசாயம்தான் என் தொழில்னு முடிவு பண்ணிட்ட பிறகு, அதில் என் தனித்துவத்தைக் காட்ட வேண்டாமா? ஒவ்வொரு வருஷமும் மாநில அளவில் நெல் விளைச்சலில் சாதனை படைக்கிறவர்களுக்கு விருது தருவதோடு ஐந்து லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் தருவதைக் கேள்விப்பட்டேன். எப்படியாவது இந்த விருதை வாங்கியே ஆகணும்னு உழைச்சேன். என் கணவர் அதுக்கு பக்க பலமா இருந்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மூணு முறையும் தோல்விதான் எனக்குப் பரிசா கிடைச்சுது. அதுக்காக விவசாயத்தை விட்டுட முடியுமா என்ன? அந்தத் தோல்விகளையே அனுபவமா ஏத்துக்கிட்டு, எங்கே எல்லாம் சறுக்கல் நடந்திருக்குன்னு பார்த்து, அதையெல்லாம் சரிபடுத்தினேன்” என்று சொல்லும் பிரசன்னா, தன் நான்காவது முயற்சியில் வாகை சூடிவிட்டார்!

சின்னப்பட்டி கிராமத்திலிருக்கும் தனது வயலில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்தார். வயலில் ஆட்டுக்கிடை அமைத்து, ஏற்கெனவே விதைத்திருந்த தக்கைப் பூண்டு செடிகளை மடக்கி உழுது உரமாக்கினார். மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து, தான் வளர்த்த கால்நடைகளிலிருந்து கிடைத்த உரத்துடன் மண் புழு உரத்தையும் சேர்த்து இட்டார். விதையைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, நாற்றுகளுக்கான இடைவெளிவரை அனைத்தையும் திட்டமிட்டுச் செய்தார். சீரான இடைவெளியில் களை எடுத்தார். களைகளின் வேர்கள் அறுபட்டு வயலிலேயே விழுந்ததைல் அவையும் உரமாகின. இடையிடையே உரங்களும் இட, இந்தப் பணிகள் அனைத்தையும் வேளாண் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். எதிர்பார்த்தபடி பயிர் செழிப்பாக வளர்ந்தது. ஒரு குத்து நாற்றில் 49 சிம்புகள் உருவாயின. இவை தரமான, அதிக எண்ணிக்கையான மணிகள் கொண்ட மகசூல் அளிக்கும் கதிர்களாக உருவாயின. இதே நேரத்தில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதல் தென்பட, வேப்பெண்ணெய் மூலம் அதையும் சமாளித்தார்.

“‘நீர் மறைய நீர் கட்டு’ என்று சொல்வார்கள். அதை நான் மிகச் சரியாகப் பின்பற்றியதால், குறைந்தளவு தண்ணீரில் நல்ல விளைச்சலைத் தர முடிந்தது. வேளாண் அதிகாரிகள் பலர் நடுவர்களாக இருந்த நிலையில், கதிர் அறுவடை நடந்தது. ஒரு ஹெக்டேரில் 16,115 கிலோ மகசூல் கிடைத்தது. எதையும் சரியாக திட்டமிட்டுச் செய்தால் சாதிப்பது எளிது” என்று அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார் பிரசன்னா.

மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ், “ஏனோதானோ என்றில்லாமல் விவசாயத்தை முழுமையாக நம்பினார் பிரசன்னா. அனுபவம் மிக்க விவசாயிகளைவிட மிக நேர்த்தியாகத் தொழிலை மேற்கொண்டதுடன், இயற்கை விவசாயத்தை நம்பியதால் சாதனை அவருக்கு வசமானது. 150 பேரை பின்னுக்குத் தள்ளி, இந்த விருதைப் பெற்ற முதல் பெண் பிரசன்னாதான்” என்றார்.

விவசாயத்திலும் சாதிக்கலாம்!

உயர் கல்வி படித்துவிட்டு வேலையில்லை என்று புலம்பிக்கொண்டிருப்பதை விட நம் அனைவரின் உயிர் வளர்க்கும் வேளாண் தொழிலில் ஈடுபடலாம் என்கிறார் பிரசன்னா. “நலிந்துவரும் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் உண்டு. விவசாயம் பொய்த்துப் போவதும் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளும் நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் என்ற இலக்குடன் செயல்பட்டால் விவசாயத்தில் வெற்றி நிச்சயம். பல்வேறு தொழில்களில் செய்யும் முதலீட்டில் 10 சதவீதம் இருந்தால்போதும் விவசாயத்துக்கு. சொந்த நிலம் இல்லாவிட்டாலும், விவசாய நிலங்களை வாடகைக்கும் ஒத்திக்கும் மிக எளிதாகப் பிடித்து தாராளமாக விவசாயம் செய்யலாம். இளைஞர்கள், இளம்பெண்களின் பார்வை மாறினால் விவசாயத்தால் நாடும் செழிக்கும், நாமும் நலம் பெறலாம்” என்கிறார் பிரசன்னா நம்பிக்கையுடன். ஜெயித்தவர்கள் சொல்வது பொய்க்காது!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...