Saturday, February 6, 2016

உற்சாகம் களை கட்டலாம்! உயிரை பறிக்கலாமா?- தலையங்கம்

Logo

சென்னை, பிப்.5-


ஒரு தனி மனிதனின் உற்சாக கொண்டாட்டத்தில் ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் பறிபோய் இருக்கிறது. அந்த குடும்பம் வாழ்க்கையே கேள்விக்குறியாகி நடுத்தெருவில் வந்து நிற்கிறது.

ஈரோடு தொழில் அதிபர் முகமது சபீக் போதையில் போட்ட ஆட்டம் தான் இதற்கு காரணம்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முகம்மது சபீக் கண்காட்சி அரங்கம் அமைத்து இருக்கிறார். அதற்காக நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த முகமது சபீக் இரவு முழுவதும் குடித்து கும்மாளமிட்டுள்ளார்.

போதை இறங்காத நிலையில் சொகுசு காரை கிளப்பி கொண்டு நந்தம்பாக்கம் புறப்பட்டார்.

ஆள் அரவம் அடங்கிய அதிகாலை நேரத்தில் அண்ணா சாலையில் ஒரு வழிப்பாதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை விரட்டி இருக்கிறார். போதையில் மிதந்தவருக்கு கார் பறந்தது தெரியவில்லை.

எதிரே பணி முடித்து டூ விலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வாலிபர் கெவின்ராஜ் என்பவர் மீது கார் மோத – ஆங்கில சினிமா காட்சிகளை போல் டூவிலர் உடைந்து நொறுங்கி பறந்தது.

கெவின்ராஜ் உடலும் கூடவே அந்த ரத்தில் பறந்து ரோட்டோர கம்பியில் உயிரற்ற உடலாய் விழுந்து தொங்கியது. அடுத்ததாக ஒரு லாரி மீது மோதிய வேகத்தில் அந்த லாரியின் சக்கரங்கள் கழண்டு லாரியும் கவிழ்ந்தது.

ஆனால் விலை உயர்ந்த காரில் இருந்த பாதுகாப்பு கவசத்தால் தொழில் அதிபரும், அவரது நண்பரும் தப்பித்துக் கொண்டார்கள்.

விலை மதிக்க முடியாத ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோய் விட்டது.

வழக்கு – விசாரணை போன்ற சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது.

ஒன்றிரண்டு ஆண்டுகள் வரை வழக்கு விசாரணை நீடிக்கலாம். இறுதியில் சில ஆண்டு தண்டனையோ அல்லது சில ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம். ஒரு தொழில் அதிபருக்கு இதெல்லாம் தூசு தட்டி விட்ட கதைதான். ஆனால் கெவின்ராஜை இழந்த குடும்பத்துக்கு...

ஒரே மகனை பறிகொடுத்து விட்டு அந்த குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது. சாகும் காலம் வரை நமக்கு சோறுபோட்டு காப்பான் என்று நினைத்த மகனை சாகடித்து விட்டனர். அதோடு அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி – எதிர்கால வாழ்க்கை எல்லாவற்றையுமே சாகடித்து விட்டனர்.

தொழிலதிபர் வழக்கில் இருந்து மீண்டு விடுவார். ஆனால் அந்த குடும்பம் துயரத்தில் இருந்து மீளுமா?

இதே போல் போதையில் வாகனம் ஓட்டுவதும், விபத்துகள் நிகழ்வதும் அதிகரித்து வருகிறது. அவர்கள் உயிரை இழப்பது மட்டுமல்ல. அடுத்தவர் உயிரையும் பறித்து விடுகிறார்கள். அடுத்தவர் உயிரை பறிக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது?

‘குடித்து விட்டு வாகனம் ஓட்டாதே’ என்று வீதி வீதியாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன பயன்?

பாமரன் குடித்து விட்டு தள்ளாடினால் அறிவில்லாமல் குடித்து சீரழிகிறான் என்கிறோம். படித்தவர்களும், பணக்காரர்களும் அறிவிருந்தும் இப்படி அறிவீனமாக நடந்து கொள்வதை என்னவென்பது?

மது பழக்கம் என்பது எல்லா தரப்பு மக்களிடையேயும் பரவி இருக்கிறது. குடிப்பது தப்பு என்று சொல்லவும் முடியாது. சொன்னால் ஏற்கவும் மாட்டார்கள். குடித்தாலும் நிதானம் இழந்து விடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது.

வசதி இல்லாதவன் குடித்து விட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கிறான். வசதி படைத்தவன் குடித்துவிட்டு கண்மூடித்தனமாக அடுத்தவன் உயிருக்கு உலை வைக்கிறான். குடிப்பது, கும்மாளம் போடுவது அவரவர் உரிமை. அதை யாரும் தடுக்கப்போவதில்லை. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவது, வெளியே நடமாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அது அவர்களுக்கும் நல்லது. அவர்களால் அடுத்தவர்களுக்கும் தொல்லை நேராது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024