Wednesday, February 3, 2016

சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் -லட்சுமணர் மீது வழக்கு! தள்ளுபடி செய்த பீகார் கோர்ட்

பாட்னா: கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பிய அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பீகாரில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை சீதாமாரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளது

 நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசாரணைக்கு வருவதுண்டு. ஆனால் ராமாயணம், மகாபாரதக் கதையை முன்வைத்து வழக்குப் போடுவது அதிகரித்து வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங் என்பவர், சீத்தாமரி மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்குதான் தற்போது வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. இதிகாச காவியமான ராமாயணத்தில் ராமரின் மனைவியான சீதா முன்னர் ஜனகபுரியை ஆட்சி செய்த ஜனக மகாராஜாவின் மகளாக மிதிலை நகரில் பிறந்ததாக காணப்படுகிறது. அந்த பழங்கால மிதிலை நகர் தற்போதையை பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீதையின் நினைவாகவே இந்த மாவட்டத்துக்கு பிற்காலத்தில் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சீதையின் கணவர் ராமர். ராமரின் தம்பி லட்சுமணர். சிற்றன்னை பேச்சை மீறாமல் 14 ஆண்டுகாலம் ராமர், தன் மனைவி சீதையுடன் வனவாசம் போகிறார். வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராமர், அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், இராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக அவதூறு பேசியதை அறிந்த இராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கர்ப்பிணிப் பெண். வனத்தில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அங்கு சீதைக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். இதை கண்டித்துதான் சீதையை காட்டுக்கு ராமரும், அவர் தம்பி லட்சுமணரும் கொண்டு போனது தவறென்றும், அண்ணன் தம்பியர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் சந்தன்குமார் வழக்குப் போட்டுள்ளார். சீத்தாமரி மாவட்ட தலைமை நீதிபதி ராஷ்பிஹாரி முன்பு, சந்தன்குமார் சிங்கின் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஷ்பிஹாரி, " வாதி சந்தன்குமார் சிங் தாக்கல் செய்துள்ள மனுவானது , உண்மைக்கு மாறான பல சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

 இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சந்தன்குமார்சிங்கின் உறவினர்கள் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, வழக்கைத் தொடுத்த சந்தன்குமார்சிங், இந்த வழக்கை மேல்முறையீடுக்கு கொண்டு போகும் மனநிலையில்தான் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், இந்த வழக்கை கீழ் கோர்ட்டுக்கு கொண்டு போனதற்கே, சந்தன்குமார்சிங்கிற்கு எதிர்ப்புகள் கிளம்பி விட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மிரட்டலுக்கு உள்ளானார். கோர்ட்டுக்கே பாதுகாப்புடன்தான் போய் வரவேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது வீட்டுக்கும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் எஸ்.பி.யிடம் சந்தன்குமார் மனு கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/court-finds-case-against-lord-ram-laxman-beyond-logic-sq-245920.html

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024