Friday, February 26, 2016

எது பெண்ணுரிமை?


By சந்திர பிரவீண்குமார்

First Published : 25 February 2016 04:27 AM IST

dinamani

அழகான இயற்கை வளங்கள் சூழ்ந்த பனிமலைகள் நிறைந்த ஒரு பகுதியில், திரைப்படத்தின் காதல் பாடல் ஒன்றின் படப்பிடிப்பிற்காக நாயகனும், நாயகியும் ஆடிப் பாடுகிறார்கள். நாயகனின் உடலில் குளிருக்கு ஏற்ற ஆடைகளும் காலணிகளும் முழுமையாக மூடியிருக்கின்றன.
ஆனால், நாயகியோ அரைகுறை ஆடையுடன் ஆடிப் பாடுகிறார். அநேகமாக, இன்று வெளிவரும் படங்களில் இத்தகைய காட்சிகள் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன.
பெண்கள் வளர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறப்படும் நிகழ்காலத்திலும் பெண்களுக்கு ஏற்படும் இழிவுகள் குறைந்து விடவில்லை. மாறாக, நவீன காலம் என்ற பெயரால் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
பெண்களை போகப் பொருள்களாக மட்டும் சித்திரித்த காலம் போய், அவர்களை நேரடியாகவே மட்டம் தட்டும் திரைப்படப் பாடல்களும் வசனங்களும் உலா வருகின்றன. வளர்ச்சி அடையும் பெண்களை அவதூறாகப் பேசும் சக ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சில நேரங்களில் சக பெண் ஊழியர்களும் அவதூறு பரப்பும் கொடுமை. பாலியல் வக்கிரங்கள் தொடர்கின்றன. நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் கூட முறையாக இல்லை. பெண்களுக்கு மரியாதை தரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், வரதட்சணையால் பெண்கள் பாதிக்கப்படும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
மது என்ற அரக்கன், பல பெண்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்திருக்கிறது. இப்படி, பாலின சமத்துவத்தை அனைத்து வழிகளிலும் நிலைநாட்ட வேண்டிய தேவை இன்று அதிகமாகவே உள்ளது. ஆனால், முக்கிய விவகாரங்களில் மயிலிறகு போல் மென்மையாக வருடி விட்டு, மத நம்பிக்கைகளில் பெண்ணிய அமைப்புகள் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம்?
அண்மையில், கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி ஒருவர் உத்தரவிட்டபோது, சில அமைப்புகள் பெண்ணுரிமை பேசி, அந்த உத்தரவுக்குத் தடை கோரின. அதேபோல், சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பெண்கள் நுழைவதற்கு ஆதரவாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
திரைப்பட சுவரொட்டிகளை பள்ளிக்கூட வளாகச் சுவரில் ஒட்டக்கூடாது என்று அனைத்துக் கட்சியினரும் போராடியிருக்கிறார்கள். காரணம், அந்தச் சுவரொட்டிகளில் காணப்படும் அரைகுறை ஆடை காட்சிகள் மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது என்பதற்காகதான்.
ஆனால், அத்தகைய அரைகுறை ஆடைகளை, பாரம்பரியத்தைக் காக்க வேண்டிய கோயில்களில் அணிய அனுமதிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை.
ஆண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும்போது, பெண்களுக்கு எதிரான உத்தரவு என்ற வாதத்தில் வலு இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆடைக் கட்டுப்பாடு பெண்களின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கிறது என்பதை இந்த இயக்கங்கள் எப்போது உணரப் போகிறார்கள்?
குறிப்பிட்ட வயதுக்கு மேல், ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களானாலும் சரி, அவர்களது பாலினத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் பழக விடுவது மரபு. அதன் காரணம், எதிர் பாலினத்தவருடன் பழகக் கூடாது என்பதல்ல.
ஒரே பாலினத்தினருடன் பழகுகையில், எப்படி உடை உடுத்துவது, எப்படி பேசுவது, பழகுவது போன்ற விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால், நாட்டின் பண்பாடு காப்பாற்றப்படுவதோடு, பாலியல் கொடுமைகளையும் தவிர்க்க முடிகிறது.
வழிபாட்டு நம்பிக்கை கொண்ட பெண்களின் நடவடிக்கைகள் காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஆன்மிகம் தழைத்து வருவது கண்கூடு. இல்லத்தில் இருக்கும் ஆண்கள் மறந்துவிட்டாலும், நம்பிக்கைகளையும் சடங்குகளையும் நினைவூட்டுவது நமது நாட்டில் வாழும் பெண்களின் குணம். மறந்துபோன பல சடங்குகள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பது அவர்களால்தான்.
ஆலயம் தொழுவதை அன்றாடக் கடமையாகக் கருதும் அந்தப் பெண்களைக் கொச்சைப்படுத்துவது நியாயமா? சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் போராடுகின்றன. காலத்துக்கேற்றவாறு பழக்க வழக்கங்களை மாற்றுவது இயல்பானதுதான்.
ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை ஆன்மிகப் பெரியவர்களும், இறை நம்பிக்கை கொண்ட பெண் அமைப்புகளும்தான் மேற்கொள்ள வேண்டும். மாறாக, இறைமறுப்பு கொள்கை கொண்ட அமைப்புகள் தீர்மானிப்பது வீண் சர்ச்சைகளுக்கே வழிவகுக்கும்.
நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை பெண்ணிய அமைப்புகள் உதாசீனப்படுத்துவதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும்.
பெண்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்பது இந்தியப் பண்பாடு. அதன் குறியீடாகவே கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றுக்கும் பெண் அடையாளங்கள் தரப்பட்டுள்ளன. அந்தக் கடவுள்களில் ஒருவரான சரஸ்வதியை எம்.எஃப்.ஹுசைன் என்ற ஓவியர் நிர்வாணமாக வரைந்தார். அதை எதிர்த்து, பெண்ணுரிமை இயக்கங்கள் பொங்கியெழவில்லை. சில மத அமைப்புகளைத் தவிர, யாரும் கேள்வி கேட்கவில்லை.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்பதும், அதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் துறவியான பிரக்யா சிங் தாக்குர், காவல்துறை தன்னை நிர்வாணப்படுத்தி விசாரித்ததாக நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
அந்த மனித உரிமை மீறலைக் கண்டித்து பெண்ணியம் பேசும் எந்த அமைப்பும் வாய் திறக்கக் கூட இல்லை. பாதிக்கப்பட்டவர் ஹிந்து மதப் பெண் துறவி என்பதால் மெளனமே பதில். அண்மையில், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பெண்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இடம்பெற்றதைக் கண்டித்து, மாணவர் அமைப்புகளைத் தவிர யாரும் போராட முன்வரவில்லை.
பெண் சின்னங்களாக மதிக்கப்படுகின்ற திரௌபதி, பார்வதி, ஆண்டாள் ஆகியோரை கேவலப்படுத்தி, புத்தகங்கள் எழுதப்பட்டபோது, கண்டனம் கூட கிடையாது. இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.
நவீன காலத்தில் பெண்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த நேரத்தில், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதோடு, பெண் உருவம் தாங்கிய சின்னங்களையும், குறியீடுகளையும் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். அது மதம், இனம், மொழி என எந்தப் பிரிவில் அடங்கியிருந்தாலும் பெண்கள் போற்றப்பட வேண்டும் என்பதுதான் நியாயமான பெண்ணுரிமையாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024