Sunday, February 7, 2016

கண்ணா இவர்களையும் காப்பாற்று!


Dinamani


By ஜோதிர்லதா கிரிஜா

First Published : 06 February 2016 05:20 AM IST


பல்லாண்டுகளுக்கு முன்னால், கல்கி இதழில் ஒரு சிரிப்புத் துணுக்கு வந்தது. எழுதிப் படமும் வரைந்தவர் அமரர் சாமா. அரைகுறை ஆடையணிந்து தெருவில் சுற்றும் பெண்களைப் பார்த்தபடி, மகாபாரத திரெளபதி கவலையுடன் கண்ணா இவர்களையும் காப்பாற்று என்று வேண்டிக்கொள்ளுவார்.
இந்நாளில் சில பெண்கள் கால்களில் எதுவுமே அணியாதது போல் தோல் நிறத்து ஒட்டுறைகளை (லெக்கின்ஸ்) அணிந்து செல்வதைப் பார்த்தால் திரெளபதி கண்ணனைக் கூப்பிட மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இத்தகைய பெண்களைக் கண்ணனாலும் காப்பாற்ற முடியாது என்று அவருக்குத் தெரியும்.
அண்மையில், "டீன் ஏஜ்' பெண்களுக்கான பனியன்கள் மிகவும் அருவருப்பான வாசகங்களைத் தாங்கி வருகின்றனவே, பெண்ணுரிமை அமைப்புகள் இவற்றைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? எனும் வாசகர் ஒருவரின் கேள்விக்கு, அசிங்கத்தைத் தாங்கிக்கொள்ளுவது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தவிர, இதையெல்லாம் தடுக்க முயல்வது பெண்ணியத்துக்கு எதிரானது எனும் துக்ளக் ஆசிரியர் சோவின் பதிலில் ஒலிப்பது நையாண்டி மட்டுமன்று; கசப்பும் வேதனையும் கூட அதில் ஒலிக்கின்றன.
பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பேசுவதையும், எழுதுவதையும் கவனிக்கும்போது அப்படித்தான் என்னைப்போன்ற பெண்ணுரிமைவாதி
களுக்கும் தோன்றுகிறது.
இதுபோன்ற வக்கிரமான வாசகங்கள் உள்ள பனியன்களைத் தயாரிப்பவர்களும் கண்டனத்துக்கு (ஏன் தண்டனைக்கும்) உரியவர்களே. முக்கால் நிர்வாணப் படங்களுடன் ஏடுகளை வெளியிடும் பத்திரிகைக்காரர்களும் கூடத்தான்.
இருக்க வேண்டிய அடிப்படைக் கூச்சநாச்சங்களைக் கூடத் துறந்து விட்டுச் சில பெண்கள் இப்படி அலைந்து கொண்டிருப்பதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் பல தரத்தினராவர். இவர்களில் இப் பெண்களின் பெற்றோரும் அடங்குவர்.
நம் பெண்களில் சிலர் ஏனிப்படித் தரந்தாழ்ந்து போயினர் என்பதற்கான பல காரணங்களிடையே கூட்டுக் குடும்பங்கள் குலையத் தொடங்கி உள்ளதால் கவனிக்கவோ, கண்டிக்கவோ, வழிகாட்டவோ வீட்டில் பெரியவர்கள் அற்றுப் போனதும் ஒரு காரணமாகும்.
கண்ணியமாக உடையணியும் பெண்களையும், சின்னஞ்சிறு அறியாச் சிறுமிகளையும் கிழவிகளையும்கூடச் சில ஆண்கள் விட்டு வைப்பதில்லை என்கிற கசப்பான உண்மையையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.
எனவே, அவர்களின் தவறான நடத்தைக்குப் பெண்களின் உடையைக் காரணம் காட்ட முடியாது என்கிற வாதத்தைச் சில பெண்ணியக்காரர்கள் முன்வைப்பதை புறந்தள்ளவும் முடியாது. ஆனால், இது விவாதத்துக்கு மட்டுமே சரியாக இருக்கலாமே தவிர, இதில் விவேகம் துளியும் இல்லை.
கண்ணிய உடையணிபவர்களே சீண்டப்படும் போது, வெளிப்பாடாக உடையணிபவர்கள் இன்னும் அதிக ஆபத்தைத் தாங்களாகவே தேடிக் கொள்ளுகிறார்கள் என்கிற வாதத்தில் பெண்ணியக்கவாதிகள் என்ன தவற்றைக் காண்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
சில நாள்களுக்கு முன்னால், அனைத்திந்திய மாதர் இயக்கத்தோடு தொடர்பு உடைய ஒரு தலைவி, Youlook sexy (நீ செக்ஸியாகத் தோன்றுகிறாய்) என்று ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் கூறினால் அதை ஒரு compliment (பாராட்டு) ஆக எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது பெண்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது என்று திருவாய் மலர்ந்தார். இதைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
செக்ஸி என்பதற்குக் கண்ணியமான பொருளும் உள்ளதோ என்றறியச் சில அகராதிகளைப் புரட்டினால், எல்லாவற்றிலுமே, பாலுணர்வைத் தூண்டும்படியான என்கிற பொருளே தரப்பட்டிருந்தது. இத்தகையப் பாராட்டுக்கு நன்றி கூறி ஒரு பெண் புன்னகை செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: "தன் மனைவியைத் தவிர வேறு பெண்மணி ஒவ்வொருத்தியும் ஓர் ஆணுக்கு அன்னையாகவே தோன்ற வேண்டும். பால் வேற்றுமையைப் புறக்கணித்துவிட்டு, ஆண்களுடன் பழகத் தெரிந்து கொள்ளாத அமெரிக்கப் பெண்கள் உண்மையான முன்னேற்றத்தை அடையப் போவதில்லை... அமெரிக்க ஆண்கள் பெண்களை வணங்கித் தலை தாழ்த்தி, அவர்கள் முதலில் அமர ஆசனம் அளிக்கிறார்கள்.
அதே மூச்சில், "ஓ உன் விழிகள் எவ்வளவு அழகானவை' என்று ஒரு பெண்ணின் அழகைப் புகழ்கிறார்கள். இந்த அளவுக்கு ஆடவர்க்கு எப்படித் துணிச்சல் வந்தது? பெண்களாகிய நீங்கள் இதை அனுமதிக்கலாமா? இத்தகையச் சொற்கள் ஆண் -பெண்களை இழிவு நோக்கியே இட்டுச் செல்லும்'.
}விவேகானந்தரின் இந்த அறிவுரையை, மேற்சொன்ன பெண்ணுரிமை இயக்கத் தலைவி பிற்போக்குத்தனம் என்பாரோ?
ஆண்களைத் திருத்த வேண்டும்தான். அதற்கான முயற்சிகளும் தேவையே. ஆனால், அது மெத்தக் கடினம். எனினும், நல்ல ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள்.
அவர்களின் கண்ணியத்தையும் நாசமாக்கும் இழி செயலை, தங்களின் தவறான நடையுடைபாவனைகள் வாயிலாக பெண்கள் செய்யக் கூடாது. சம உரிமை என்பதன் பெயரால் பெண் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
ஒரு பெண் எதிர்ப்பட்டால், விலகி வழி விட ஓர் ஆணுக்குத் தோன்றும்படி அவள் உடையணிந்திருக்க வேண்டுமேயல்லாது, விரசமான சொற்களை அவளை நோக்கிச் சொல்லும் வக்கிரத்தை, அவளது தோற்றம் விளைவிக்கக் கூடாது.
சில நாள்களுக்கு முன், ஒரு பெண்ணுரிமைவாதி "இருட்டில் உலாவுவது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உரிமையா?' எனும் கேள்வியை எழுப்பி அந்த உரிமை பெண்களுக்கும் உண்டு என்று வாதிட்டார். சில வாதங்கள் கேட்பதற்கு மட்டுமே சரியானதாக இருக்கும். நடைமுறை என்கிற ஒன்றையும் நினைத்துப் பார்க்கும் அறிவு நமக்கு வேண்டும்.
ஆண்கள் அனைவரும் திருந்திய பின் (அதாவது அத்தைக்கு மீசை முளைத்து அவள் சித்தப்பா ஆனதன் பிறகு), இது போன்ற அசட்டுத்தனங்களைப் பெண்கள் செய்யட்டும்.
மேலும், இது போன்ற உடைகள் ஆரோக்கியத்துக்கு ஊறு செய்பவை. இவற்றைத் தயாரிப்பதையும் அரசு தடை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024