நடை அழகு
பிறந்த குழந்தை தானாகவே புரண்டு படுத்து, பிஞ்சுக் கால்களை மடித்துத் தவழத் தொடங்குவதைக் காட்டிலும் நெகிழச் செய்வது தத்தித் தத்தி நடக்கத் தொடங்கும் தருணம்தான். நடை அத்தனை மகத்துவமானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை உலகின் பெருவாரியான மக்கள் நடையின் மூலமாகத்தான் பயணித்தனர். நடப்பது என்பது சுவாசிப்பதைப் போன்ற இயல்பான செயல்பாடு. அதை நீரிழிவு வரும் நிலையிலோ வந்த பிறகோ மருத்துவர் சொன்ன பிறகும்கூட செய்யத் தயங்கும் அளவுக்கு மனச் சோம்பலுக்கு ஆளாகிவிட்டோம் நாம்.
நட ராஜா!
எரிக்கப்படாத கலோரிகள் உடல் பருமனை அதிகரித்து மாரடைப்பு, நீரிழிவு, மூட்டு வலி, மறதி உள்ளிட்ட நோய்களுக்கு இட்டுச்செல்லும். கலோரிகளை எரிக்கச் சிறந்த வழி நடை. ஒரு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால் 415 கலோரிகள் எரிக்கப்படும். 6 இட்லியில் கிடைத்த கலோரிகளை ஒரு மணி நேர நடை மூலம் சமன்படுத்தலாம். ஒரு மசாலா தோசையில் 415 கலோரிகள் உள்ளன. மதிய சாப்பாட்டில்1200 கலோரிகள். சாப்பாட்டுப் பிரியராக இருந்தால் நிச்சயம் காலையும் மாலையும் இரு மணிநேரம் நடந்தாக வேண்டும்.
அரசியல் நடை
அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பல்வேறு விதமான தொழிலாளர்களும் நீதி கேட்டோ, நிதி கேட்டோ, ஓட்டு கேட்டோ நடைப் பயணம் மேற்கொள்கின்றனர். சட்டத்தை மீறி உப்பு காய்ச்ச நடந்தது, பூதானம் கோரி நடந்தது, மதுவிலக்குக்காக நடப்பது என்று நடைப் பயணம் சாத்வீகப் போராட்டங்களின் வழிமுறையாகவும் அமைகிறது. கோட்டை நோக்கி, முதல்வரின் வீடு நோக்கி, பிற நாட்டுத் தூதரகங்களை நோக்கி ... என நடைப்பயணங்கள் தொடர்கின்றன.
வீர நடை, விழிப்புணர்வு நடை
மிடுக்கான நடை எனபது ராணுவத்தினரின் வழக்கமான பயிற்சிகளில் ஒன்று. என்.சி.சி. போன்ற தேசிய மாணவர் படையினரும் ஆண்டில் ஒரு நாள் சாலை அணிவகுப்பு என்ற பெயரில் சில கிலோ மீட்டர்கள் நடக்கின்றனர். புற்று நோய், சர்க்கரை நோய் விழிப்புணர்வு போன்ற சமூக, மருத்துவ நோக்கங்களுக்காக மாரத்தான் நடைக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கலோரி எதிரி அல்ல
கலோரி என்றாலே உடல் நலத்துக்கு எதிரிபோலப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது நம் உடலுக்கு அத்தியாவசியமான ஆற்றல். உணவுப் பண்டங்கள் அனைத்திலும் வெவ்வேறு சதவீதத்தில் கலோரிகள் உள்ளன. அன்றாடம் நாம் செய்யும் வேலைகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவது கலோரிதான். வேலை செய்யச் செய்ய கலோரிகள் எரிக்கப்படும். எரிக்கப்படாத கலோரி கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரித்துவிடும். நமது அன்றாடச் செயல்களின் மூலம் 60% கலோரிகள் எரிந்துவிடும். மீதமுள்ள கலோரிகளை எரிக்கக் கூடுதல் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி தேவை.
ஆன்மிக நடை
ஆதி சங்கரர், மத்வாசாரியர், ராமானுஜர், விவேகானந்தர், சிவானந்தர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார், சைவ மடாதிபதிகள், ஆசார்ய துளசி உள்ளிட்ட ஜைன தீர்த்தங்கரர்கள், சீக்கிய மத குருக்கள்,இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் உள்ளிட்டவர்கள்,அன்னை தெரசா, சத்ய சாய் பாபா உள்ளிட்டவர்கள் நடந்தே தம் பணிகளைச் செய்தனர். பக்தர்களும் திருவிழாக்களை ஒட்டியும் பிரார்த்தனையின் பேரிலும் பாதயாத்திரை செல்கிறார்கள்.
வியர்த்தால் எடை குறையுமா?
உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும்போது மீண்டும் குளிரூட்டவே வியர்வை சுரக்கிறது.ஆக, வியர்த்தால் எடை குறையாது என்கின்றனர் நிபுணர்கள். நம் உடலில் 450 கிராம் எடையைக் குறைக்க 3500 கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஆனால் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நீரின் எடை மட்டுமே குறைகிறது.
சரியான நடை
நடப்பது இயல்பானதுதான் என்றாலும் எல்லோரும் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. முதுகெலும்பு நேராக இருக்க, கைகளை முன்னும் பின்னும் வீசி, பாதங்களைத் தரை மீது அழுத்திப் பதித்து நடக்க வேண்டும். என்னதான் டிரெட் மில்லில் நடைபயின்றாலும் காற்றோட்டமான வெளியில் சுறுசுறுப்பாக நடப்பதற்கு இணையாகாது. இறுக்கமான உடை அணிந்தோ, பளு தூக்கிக்கொண்டோ, மிகவும் நிதானமாகவோ நடந்து பயனில்லை. நடக்கும்போது பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
வியர்வை நச்சுக் கொல்லி
வியர்வையை வைத்து கலோரி எரிவதைக் கணக்கிட முடியாது. ஆனால் அது உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. விறுவிறுப்பாக நடந்து வியர்க்கும்போது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தோல் மீது படிந்திருக்கும் கழிவுகள் அகலும், சிறு நீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கப்படும், சளி காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.
நோய் அகற்ற நடை…
தினந்தோறும் 30 நிமிட விறுவிறுப்பான நடை மாரடைப்பு, வலிப்பு, நீரிழிவுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க உதவும். தசைகளுக்கு வலு சேர்க்கும், அதிகாலை சூரிய ஒளியில் நடப்பதன் மூலம் வைட்டமின் டி கிடைத்து எலும்புகள் வலுப்பெறும்.
வாழ்க்கையோடு கலந்தது…
இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 26 கோடியே 30 லட்சம். எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் புகுத்தப்பட்டாலும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே இன்றும் நாம் சோற்றில் கைவைக்க முடியும். நாற்று நடுதல் முதல் நீர்ப் பாசனம், களை பறித்தல், அறுவடை வரை விவசாயிகள் தினசரி 15 கி.மீ. நடக்கிறார்கள். அதுவே அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும் ஆதாரமாகிறது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பேசிக்கொண்டே சராசரியாக நாள் தோறும் 40 கி.மீ. நடக்கிறார்கள்.
No comments:
Post a Comment