Thursday, February 18, 2016

சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...


சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...
Dinamani

By தி. இராசகோபாலன்

First Published : 17 February 2016 01:28 AM IST


பொழுது விடிகின்றபோது, ஒரு கையில் செய்தித்தாளும், மறுகையில் ஒரு குவளைக் காப்பியுடனும் விடிகின்றது. தலையங்கத்தைப் படித்துவிட்டுத்தான், பத்திரிகையின் மற்ற அங்கங்களுக்குப் போவது வழக்கம். காரணம் தலையங்கம்தான், நாட்டின் போக்கினையும் ஏட்டின் போக்கினையும் காட்டும். ஆனால், அண்மைக்காலமாகத் தலையங்கத்தை முந்திக்கொண்டு சின்னஞ்சிறார்களின் தலைகள், கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்குகின்றன அல்லது கிணற்றில் மிதக்கின்றன.
ஆனந்தப்பட்டுப் படிக்க வேண்டிய பத்திரிகைகளைக் கலங்கிய உள்ளத்தோடும், கசிகின்ற கண்களோடும் படிக்க வேண்டிய அவலநிலை யாரால் ஏற்பட்டது?
சென்ற தலைமுறையில் பிள்ளைகளுக்கு இரவு உணவு ஊட்டிய பின்பு, அவர்களைப் படுக்க வைத்து, அவர்கள் தலைமாட்டில் உட்கார்ந்து, அர்ச்சுனன் - அபிமன்யு போன்ற வீர புருஷர்களுடைய கதைகளைச் சொல்லி, அவர்களைத் தூங்க வைத்த பாட்டிமார்கள் இன்று எங்கே? வீர சிவாஜியின் தாய் ஜீஜீபாய் தாய்ப்பாலை ஊட்டும்போதே, ரஜபுத்திர வம்சத்தினுடைய வீர வரலாற்றையும் சேர்த்தல்லவா ஊட்டினாள்!
ராஜாளிப் பறவை கூட்டிலே இருக்கின்ற குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கின்றவரைதான், உணவுப்பொருள்களைத் தேடிக்கொண்டு வந்து ஊட்டும். இறக்கைகள் வளர்ந்த பிறகு தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகக் கூட்டிலேயிருக்கும் அக்குஞ்சுகளைத் தனது இறக்கையால் அடித்துக் கீழே தள்ளும். கீழே விழுந்து கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறு பறவை, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முதல் முறையாக இறக்கையை விரிக்கும். அன்றிலிருந்து அது தன் இறக்கையால் வாழத் தொடங்கும்.
யானைகள் தம்முடைய கன்றுகளுக்குத் தண்ணீரில் நீந்தி வரும் பயிற்சி வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு கன்றுகளைத் தண்ணீரில் தூக்கிப் போட்டு, அவை தத்தளிக்கும்போது, துதிக்கையை நீட்டிக் காப்பாற்றும். இப்படியொரு பறவையும், யானையும் ஊட்டுகின்ற தன்னம்பிக்கையை, நம்முடைய பெற்றோர்கள் ஊட்டினால், ஏன் இத்தனை தற்கொலைகள்?
பகத் சிங்கின் பூதவுடலை இரவோடு இரவாக சட்லெஜ் நதிக்கரையில் வைத்து எரித்துவிட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பஞ்சாபிய தாய்மார்கள், விரைந்தோடி பகத் சிங்கின் ஈமப்படுக்கையில் இருந்த சாம்பலை எடுத்து வயிற்றில் பூசிக் கொண்டார்களே ஏன்? மாவீரன் பகத் சிங் போன்ற குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டும் என்பதற்காக அல்லவா? அத்தகைய தாய்மார்களின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா? இந்திய நாட்டிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபடாத ஓரினம், சீக்கியம் இனம் என்று குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டது எவ்வளவு பொருத்தம்?
ஒரு காலத்தில் பாஞ்சாலங் குறிச்சியில் வாழ்ந்த தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்குப் பாலாடை மூலம் பாலூட்டும்போது, பாஞ்சாலங்குறிச்சி மண்ணையும் கரைத்து ஊட்டியது, வீரக் குழந்தைகளாக வளர வேண்டும் என்பதற்குத்தானே?
முன்காலத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் நீதிபோதனை என்றொரு பாடவேளை இருக்கும். எந்தப் பாடத்தை மாணவர்கள் மறந்தாலும், நீதி போதனைப் பாடத்தை மறக்கமாட்டார்கள். அது வயிற்றுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் அன்று; வைர நெஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுத்த பாடமாகும். அந்த வகுப்புகளைக் கல்வியாளர்களே காணாமல் அடித்துவிட்டார்களே!
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்பொழுதாவது - ஏதாவதொரு முனையில், ஒருமுறை தற்கொலை முயற்சி தோன்றத்தான் செய்யும் எனச் சொல்லுகின்றனர் பெரிங் போன்ற உளநூல் வல்லுநர்கள். துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும் என்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.
ராமாயணத்தில் சீதாபிராட்டிக்கே அப்படியோர் அனுபவம் ஏற்பட்டது. தம்முடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அசோகவனத்தில், மாதவிக்கொடியைத் தூக்குக் கயிறு ஆக்கியபோது ஆச்சாரியனான அனுமன், ராமபிரான் பெயரைச் சொல்லிச் சீதையைக் காப்பாற்றினான். இதிலிருந்து ஆசிரியப் பெருமக்கள் நினைத்தால், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இளம்பிள்ளைகளுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது தெரிகிறது அல்லவா? ஆனால், இன்று, சில ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் மாணவர்கள் தற்கொலைக்கு உள்ளாவது, இந்நாட்டின் அவலம் அல்லவா?
வயல்களில் நாற்று நடுவதற்குப் பெரும்பாலும் ஆண்களை விட மாட்டார்கள். பெண்கள் தாம் நடவு நடும் வேலையைப் பார்ப்பார்கள். ஏன் தெரியுமா? ஆடவர்களுடைய சூட்டுவிரலைப் பசும் நாற்றுகள் தாங்காது என்ற காரணத்தால், நடவு நடும் வேலை பெண்களிடம் விடப்படுகிறது. பயிர்கள்கூட வாடக்கூடாது, வதங்கக்கூடாது என்று சிந்தித்த பரம்பரையில் வந்தவர்கள், உயிர்களை வாட விடலாமா? மடியவிடலாமா?
மாணாக்கர்களுடைய அறிவைச் சாணை பிடிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அவர்களுடைய நெஞ்சுறுதியைக் கல்நாரால் இழுத்துக் கட்ட வேண்டியவர்கள் கல்வியாளர்கள். வைரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும்முறைமையடி பாப்பா என்று மகாகவி பாரதி பாடியதைப் படிப்பித்திருப்பார்களேயானால், இன்று மாணவிகள் கிணற்றிலே மிதந்திருக்க மாட்டார்களே!
இளம்பிள்ளைகளுக்கு உயிரின் அருமைப்பாட்டை ஹாலந்து நாடு (இன்றைய நெதர்லாந்து) எப்படிக் கற்பித்திருக்கிறது தெரியுமா? ஹாலந்து நாடு கடல்மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு. அதனால் கடல்நீர் உள்ளே வந்துவிடாமல், போல்டர்ஸ் (மதகுகள்) வைத்துத் தடுத்திருக்கிறார்கள். ஒருநாள் இரவில் பீட்டர் என்ற சிறுபையன், அந்த மதகு வழிப்பாதையில் வருகிறான். அப்பொழுது ஒரு போல்டரில் ஒரு துவாரம் ஏற்பட்டு, அதன் வழியே கடல்நீர் நகரத்துக்குள் வரத் தொடங்கியது. இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. ஓசை எழுப்பி யாரையும் சுப்பிட முடியாது.
அந்தச் சின்ன துவாரத்தில் தன் கட்டை விரலைச் செருகி, இரவு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுக்காமல் காத்துவிட்டால், பொழுது விடிந்ததும் மக்களுக்குத் தெரிய வந்துவிடும் என்று தீர்மானித்துக் கட்டைவிரலைச் செருகிவிட்டான்.
குளிர்மிகுந்த நாட்டில், விடியும்வரை பீட்டர், வைரமுடைய நெஞ்சோடு மதகருகே உட்கார்ந்துவிட்டான். பொழுது விடிந்தவுடன் மக்களுக்கு உண்மை தெரிய வரவே, பீட்டரைப் பாராட்ட வேண்டுமென்று, அவனைப் போய் ஆர்வத்தோடு அரவணைத்துத் தூக்க முயன்றனர். ஆனால், பீட்டர் குளிரில் விறைத்துப்போய் பிணமாய் விழுந்தான்.
உயிர் போவதாக இருந்தால் இப்படி அல்லவா போக வேண்டும் என்று உலகத்திற்குக் காட்டிவிட்டு இறந்தான். அவனுடைய தியாகம் என்றென்றைக்கும் நினைக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஹாலந்து அரசு, அவனுக்கு அங்கே ஒரு சிலை எழுப்பிக் கெளரவித்திருக்கிறது. உயிரின் விலை இன்னதென்பதை அந்தச்சிலை, இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்திக் கொண்டே அங்கு நிற்கிறது.
உலகத்தில் 16 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நிகழ்வதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாரதத்தில் மற்ற மாநிலங்களில் பசி, பட்டினி, வறுமையால் தற்கொலைகள் நிகழ்கின்றன. தமிழகத்தில், கல்விச்சாலைகளில் மன அழுத்தங்களாலும், வல்லுறவுகளாலும் நிகழுகின்றன.
அதுவும் ஒரு குடும்பத்தில் ஏற்கெனவே இரண்டு, மூன்று பேர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களேயானால், அக்குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது இயல்பாய் நடக்கிறது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சி, தற்கொலை முயற்சிகளுக்கு உந்து சக்தி ஆகிவிட்டது.
தற்கொலைக்குக் காரணமான பாலியல் பிரச்னைகள் சென்ற தலைமுறையிலும் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல் தற்கொலை அளவுக்குக் கொண்டு சென்றதில்லை. பருவக்கோளாறுகளினால் கல்லூரி வளாகங்களில் நிகழ்ந்த சின்னஞ்சிறு குற்றங்கள், பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் போயின் மறைக்கப்பட்டன.
ஆனால், இன்றைக்குக் குற்றங்களைத் தொடர்ந்து செய்வதற்கென்றே இணையதளங்களும், வலைத்தளங்களும், கட்செவி அஞ்சலும் துணை செய்கின்றன. நிகழ்ந்த தவறுகளைப் படமெடுத்து, அதனைப் பாதிக்கப்பட்டவருக்குக் காட்டி, ஊரறிய, உலகறிய அவற்றை உலாவவிட்டுவிடுவேன் எனும் பயமுறுத்தல்களினால் தற்கொலைகள் மிகுதியாக நடக்கின்றன.
பெரிங் என்ற உளவியல் வல்லுநர், அமெரிக்க ராணுவத்தில் அடிக்கடி தற்கொலைகள் நிகழ்வதைக் கள ஆய்வு செய்தார். அதில் ராணுவத்தின் துறைசார்ந்த பொருள்களாலேயே, தற்கொலைகள் புரிந்து கொள்வதாகக் கண்டறிந்தார். தரைப்படை வீரர்கள் தாங்கள் ஏந்தியிருக்கும் துப்பாக்கிகளாலேயே சுட்டுக்கொல்கின்றனர்.
கடற்படை வீரர்கள் கப்பல்களில் கட்டியிருக்கும் கயிறுகளாலேயே தூக்குப் போட்டுக் கொள்கின்றனர். வான் படைவீரர்கள் உயரத்தில் இருந்து குதித்து மாண்டு போகிறார்கள் எனக் கண்டறிந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால், மாணாக்கர்கள் கல்வி நிலையங்களை நடத்துகின்ற, கல்வி கற்பிக்கும் கல்வியாளர்களாலேயே, தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்வதாகக் கருத வேண்டியிருக்கிறது.
ஆக, தற்கொலைக்கு மிகுதியான காரணம், இளைஞர்கள் மனத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் எனலாம். இந்த மன அழுத்தங்கள் மாணாக்கர்கள் மனத்தில் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஏற்கனவே உருவாகியிருந்தால் அதனைப் போக்குகிறவர்களாகக் கல்வியாளர்கள் திகழ வேண்டும்.
மாணவப் பருவத்தில் வகுப்பறைகளில் செவிமடுத்த சில செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த ஜான் எஃப் கென்னடி முதன் முதலில் செனட் தேர்தலுக்கு நின்று தோற்று, சோகமாக - சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தார். அப்பொழுது தன் பிள்ளையின் மன அழுத்தத்தைப் புரிந்துகொண்ட அவருடைய தந்தை ஜோசப் கென்னடி, அவரை எப்படித் தேற்றினார் தெரியுமா?
கோடீஸ்வரராகிய ஜோசப் கென்னடி மகனைத் தழுவிக்கொண்டு, மகனே, இந்தச் சின்ன தேர்தலில் தோற்றதற்கா கவலைப்படுவது? கவலைப்படாதே மகனே! என்னிடத்தில் இருக்கும் டாலர்களை வைத்து ஒரு புதிய அமெரிக்காவையே உருவாக்கி, உன்னை அதற்கு ஜனாதிபதி ஆக்குகிறேன், போ! என்று மகனின் மன அழுத்தங்களுக்கு மருந்து தடவினார் அந்த மாமனிதர்.
"சிறுபிள்ளையிட்ட வேளாண்மை, வீடு வந்து சேராது' என நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சிறு பிள்ளைகள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராமல் போனால் தப்பில்லை. ஆனால், இன்று சிறு பிள்ளைகளே வீடு வந்து சேருவதில்லையென்பதுதான் பிரச்னை.
கல்விப்பயிரை வளர்க்கும் கல்விப் பாத்திகளுக்குச் சென்ற பிள்ளைகள் வீடு வந்து சேராமல், காடு சென்றால், சுடுகாட்டுக்குச் சென்றால் மனக்குயில்கள் அழாதா?!
"துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும்.'

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024