தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. பொது உடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். திராவிட இயக்கங்களும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவைதான். எம்.ஜி.ஆர். தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்த பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூகம் அமைவதற்குத்தான் போராடினர்.
தனது படங்களில் பொதுவுடமைக் கொள்கைகள் தொடர்பான கருத்துகளையும் பாடல்களையும் எம்.ஜி.ஆர். இடம் பெறச்செய்வார். ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆரின் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களுக்கு வரிவடிவம் தந்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பாட்டுக் கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான ‘ஜனசக்தி’ யில் அவர் எழுதிய பாடலான ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி..’ பாடலை தனது ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பாடல் வரிகளில் திரைக்கு ஏற்றவாறு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போவதை தீர்க்க தரிசனத்துடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல அமைந்துவிட்ட அந்த வரிகள்தான்... ‘நானே போடப் போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்... நாடு நலம் பெறும் திட்டம்...’
அதற்கேற்ப, நாடு நலம் பெறும் திட்டங்களை இயற்றக் கூடிய இடத்தில், 1977-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வராக ஆகிவிட்டார். எதேச்சையாக இருந்தாலும் அதை முதலில் சொன்ன பெருமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு உண்டு.
எம்ஜிஆருக்கு உள்ள வசீகர சக்தி எல்லோரும் அறிந்ததுதான். அதற்கான பல நிகழ்ச்சிகளில் உதாரணத்துக்கு ஒன்று.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பால தண்டாயுதம். திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக, அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக தாக்கி பேசியவர். பாலதண்டாயுதம் என்றில்லை; திமுகவில் இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்த கவியரசு கண்ண தாசன் உட்பட பலரும் குறிவைத்து எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்தே பேசுவார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்களைப் பொறுத்தவரை சரிதான். ‘அறிஞர் அண்ணாவால் முகத்தை காட்டினாலே 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று பாராட்டப்பட்ட எம்ஜிஆர்தான் திமுகவின் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறார். எனவே, எம்ஜிஆரை தாக்கி அவரை விமர்சனம் செய்வதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்தி விடலாம்’ என்பது அவர்கள் கணக்கு. அப்படித்தான் பால தண்டாயுதமும் எம்ஜிஆரை விமர்சித்து வந்தார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவ ரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின் சிலையை நிறுவுவதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரமுகர்களிடம் நிதி திரட்டினார் பாலதண்டாயுதம். ஓரளவு நிதி சேர்ந்திருந்தது.
‘எம்.ஜி.ஆரிடமும் நிதி கேட்கலாமா?’ என்று பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய தனது கடுமையான விமர் சனங்கள் அவரது மனதில் நிழலாடி தயக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் எம்.ஜி.ஆரை சந்தித்து ஜீவாவின் சிலைக்கு நிதி கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்தித்தார். ‘தனக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ என்று தயங்கிபடி சென்ற பாலதண்டாயுதத்தை அகமும் முகமும் மலர மகிழ்ச்சியுடன் வரவேற்றார் எம்.ஜி.ஆர்.
வந்த விவரம் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சி. மனபூர்வமாக நன்கொடை வழங்கு கிறேன் என்றார். பாலதண்டாயுதத்துக்கும் மகிழ்ச்சி ஒருபுறம். அதோடு, தான் பல சந்தர்ப் பங்களில் தாக்கி பேசியும் அதுபற்றிய விவரமே தெரியாதவர் போல தன்னுடன் எம்.ஜி.ஆர். இன்முகத்துடன் பழகியதால் வியப்பு மறுபுறம்.
‘‘சிலை வைக்க உங்கள் கணக்குப்படி எவ்வளவு செலவாகிறது?’’ எம்.ஜி.ஆர். கேட்டார்.
குறிப்பிட்ட தொகையை சொல்கிறார் பால தண்டாயுதம்.
‘‘அந்த தொகைதான் என் நன்கொடை’’ - இது எம்.ஜி.ஆர்.
பாலதண்டாயுதத்துக்கு இன்ப அதிர்ச்சி. பின்னர், அவரிடம் ‘‘நான் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். என் படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் கம்யூனிச கொள்கைகளையும் சொல்லி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொதுவுடமை கொள்கை உடன் பாடே. சிறந்த பேச்சாளரான நீங்கள் உங்கள் பேச்சால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆற்றலை என்னை தாக்கு வதில் வீணடிக்கிறீர்களே? பொதுவுடமை கொள் கையை பரப்புவதில் நீங்கள் மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்த்துகள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
அவரது உயர்ந்த குணத்தையும் பண்பையும் அறிந்து நெகிழ்ந்த பாலதண்டாயுதம், அன்று முதல் எம்.ஜி.ஆரை தாக்குவதை நிறுத்தியதோடு மட்டுமல்ல; அவரது குணநலன்களை நண்பர் களிடம் புகழ்ந்தார்.
அதோடு மட்டுமல்ல; திமுகவில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய பின் கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ‘‘ஊழலை எதிர்க்கிறார்; லஞ்சத்தை எதிர்க்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மீது ஒரு துரும்பு பட்டாலும், ஒரு கீறல் பட்டாலும் தமிழ்நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக பிரகடனப்படுத்துகிறேன்’’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பாலதண்டாயுதம் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது அவர் அன்பு கொண்டார்.
மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.
அதிமுக தொடங்கிய 7 மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் 1973 மே 20-ம் தேதி நடந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தன. அதிமுக வேட்பாளரான மாயத் தேவர் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930 ஓட்டுக்கள் பெற்று பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் திமுக 3-வது இடத்தையும் பெற்றன. இந்திரா காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இந்த பிரம்மாண்டமான வெற்றி அகில இந்தியாவையும் எம்.ஜி.ஆரை திரும்பிப் பார்க்க வைத்தது!
No comments:
Post a Comment