Tuesday, February 23, 2016

தேவை புரிதல் மனப்பான்மை

தேவை புரிதல் மனப்பான்மை

By  ச. கந்தசாமி
First Published : 23 February 2016 01:09 AM IST
DINAMANI


பதினெட்டு வயதுக்குள்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்குச் சட்டம் தடை விதிக்கிறது. தடை மீறிச் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவார்களானால் அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு அபராதம், தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்'. இவ்வாறு, சமுதாய நன்மைக்காக இங்கு இல்லாத சட்டங்கள் இல்லை.
 ஆனால், காவல் துறையினரின் மெத்தனம், கடமைப் புறக்கணிப்பு, கையூட்டு இவைகளால் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய மக்கள் அற்பமாகவும், சட்டத்தை மீறுவது தவறில்லையெனவும் நினைக்கிறார்கள். "மீறுதல் இயல்பே' எனவும் நினைத்து வாழப் பழகிவிட்டார்கள்.
 "குடும்ப கெளரவம், சமூகத்தில் மதிப்பு, பொதுமக்களிடம் அந்தஸ்து, தலைமை ஸ்தானம்' என்ற போலிப் பெருமைகளைத் தக்க வைப்பதற்காகச் சில அவசியமில்லாத பழக்க வழக்கங்கள், அநாவசியத் தேவைகள், மிதமிஞ்சிய ஆசைகளுக்கும் பலர் ஆட்பட்டு விடுகிறார்கள். 
 வீட்டிலுள்ள அத்தனை பேர்களுக்கும் தனிதனியாக உடைகள், செருப்புகள் (காலணிகள்) இருப்பது போலத் தனித்தனி வாகனங்கள், தனித்தனி கைபேசிகள், குடைகள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருப்பதைப் பெருமையாகக் கருதும் குடும்பங்களும் உண்டு. இவ்வாறு வாழ்வது "கெளரவத்தின் அம்சம்' எனவும் பெருமைபட நினைக்கிறார்கள்.
 "பணத்தை எதில் முதலீடு செய்யலாம், எதற்குச் செலவழிக்கலாம்? என்ன பொருள்கள் வாங்கலாம்?' என்ற தெளிவேதும் இல்லாமல், கண்ட கண்ட பொருள்களையெல்லாம் வீட்டில் வாங்கிக் குவிக்கும் பலர் கடை கடைகளாக அலைந்து திரிவர். 
 சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவது கண்டு பூரித்துப் போகும் பெற்றோர்களும் பலர் இருக்கிறார்கள். "வாழ்க்கை, அமைதி, உண்மையான மகிழ்ச்சி, அவசியத் தேவைகள் எவை?' என்பதைப் புரிதலின்றி வாழும் மக்கள் நிறைந்த சமூகத்தில் சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதெல்லாம் விலக்கி வைக்கப்படுகின்றன.
 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துவர, பள்ளி முடிந்து வீடுகளில் கொண்டு சேர்க்க அனைத்துத் தனியார் பள்ளிகளும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்பாட்டுக்கு வைத்துள்ளன. தனியாகக் கட்டணங்களையும் வசூல் செய்கின்றன. 
 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கட்டணப் பேருந்து வசதிகளை மாநில அரசே கிராமப்புறக் குழந்தைகளின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடு செய்துள்ளது. 
 அரசுப் பேருந்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லையெனும் அளவுக்கு அரசு போக்குவரத்து வசதிகளைப் பெருக்கியுள்ளது. இலவசச் சைக்கிள்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
 இத்தனை வாய்ப்பு வசதிகளுக்குப் பிறகும் பதினெட்டு வயது நிரம்பாத பள்ளி மாணவர்கள் இரண்டு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அவசியமில்லாதது; தவறு. 
 இவ்வாறு வரும் மாணவர்களை அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனுமதிப்பது பள்ளிகளின் நிர்வாகத் தவறு; தலைமையாசிரியர், கல்வித் துறையின் உதாசீனப் போக்கு. பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்பையும் உறுதியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
 மக்களின் நுகர்வு கலாசாரத்துக்கும் பேராசைகளுக்கும் வலை விரிக்கும் நோக்கில் வாகன உற்பத்தியை எல்லையின்றித் தயார் செய்யும் தொழில் நிறுவனங்களை அரசே கட்டுப்படுத்த வேண்டும். ஆசையைத் திருப்தி செய்யப் பொருள் உற்பத்தி என்றிராமல், தேவையை நிறைவு செய்யும் அளவுக்கே பொருள் உற்பத்தி என்பது அமைய வேண்டும். 
 உற்பத்தியைப் பெருக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை வெளிநாடுகளின் ஏற்றுமதிக்குப் பயன்படுத்தட்டுமே. இதனால் அன்னியச் செலாவணி கிடைக்குமே. இது நாட்டின் பொருளாதார வளத்துக்கு நல்லது தானே! 
 சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் காவல் துறையினர், தனி மனிதர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கடுமையின்மை, விதிதளர்வு, பாரபட்சம் என்பதையெல்லாம் ஓரங்கட்டி கண்டிப்பைக் காட்டிடும் அரசு நிர்வாகம் நம்மிடம் தேவை.
 "உயர் மதிப்பெண்கள், உயர் பதவிகள், அதிகப்படியான ஊதியம், சொகுசு வாழ்க்கை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு இவை கிட்டுவதற்கான கற்பித்தல் மட்டுமே கல்விக் கூடங்களின் பணியன்று.
 உடல் ஆரோக்கியம், சமூகத்தோடு இசைவு, பணியில் பொறுப்புணர்வு, கடமையில் ஈடுபாடு, சட்டத்தையும் விதிகளையும் மதித்து நடத்தல், தேசத் தொண்டை விழையும் தியாக உணர்வு, பிறர்க்கு உதவும் மனோபாவம், பெரியோரை மதித்தல், தாய், தந்தையரையும் ஆசிரியர்களையும் போற்றி வணங்கி பண்புடன் நடத்தல், சக மாணவ, மாணவிகளை மதித்தல், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தகுந்த உதவியை அவர்களுக்கு அளித்தல், பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதெனும் எண்ணம், இவை தேவை, இவை தேவையற்றவை என உணர்ந்து விலக்கும் புரிதல் மனப்பான்மை'- இவையே பள்ளிகளில் கற்பித்தலில் முக்கியத்துவம் பெற வேண்டும்.
 எந்திரங்கள் போலும் சுயநல வாழ்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது கல்வியின் நோக்கமன்று.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024