Tuesday, February 2, 2016

குறள் இனிது: தன் இடம்... தனி பலம்....சோம.வீரப்பன்

THE HINDU TAMIL

சோம.வீரப்பன்

சந்தன வீரப்பனை எளிதில் மறக்க முடியுமா? தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என்று மூன்று மாநில அரசுகளும் பல ஆண்டுகளாகத் தேடின, தேடின, தேடிக்கொண்டே இருந்தன! தலைக்கு ரூ.5 கோடி என அறிவித்துப் பார்த்தார்கள். தனிப்படை அமைத்தும் தவித்தார்கள். இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, நெருங்குவதற்கு ஆன செலவு சுமார் ரூ. 700 கோடிக்கும் மேல் 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்தி வந்தது.

பின்னணியை விடுங்கள். அதன் வாதப்பிரதிவாதங்களை விடுங்கள். அரசியலை விட்டே விடுங்கள். ஆனால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். வேறு மாநிலத்திற்கு, ஏன் வேறு நாட்டிற்கே தப்பிச் செல்பவர்களைக்கூட (மனது வைத்தால்) தேடிக் கண்டுபிடித்து விடும் அரசுக்கு வீரப்பனை பிடிக்க இவ்வளவு காலம் ஆனது ஏன்? காரணம் ... அவன் மறைந்திருந்த இடம் காடு. அவனைத் தேடியவர்களுக்கு தெரிந்த இடமோ நாடு. அவன் இருந்த சத்தியமங்கலம் மலைப்பகுதியும், அதன் சுற்றியுள்ள காடுகள் அத்தனையும் அத்துப்படி.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கும் போகும் பொழுது பார்த்து இருப்பீர்கள். நாம் உயரத்தில் இருக்கும் பொழுது தூரத்தில் வரும் வண்டியின் சத்தம் கூட நன்றாகக் கேட்கும். வெகு தொலைவில் உள்ள மனித நடமாட்டத்தையும் சிறு பிம்பமாகப் பார்த்து விடலாம். ஆனால் அடிவாரத்தில் இருப்பவர்களுக்கு அப்படித் தெரியாது. அது தவிர வீரப்பனுக்கு பறவைகளின் மொழி தெரியுமென்றும், விலங்குகளின் நடமாட்டத்தை வைத்தே பலவற்றை ஊகித்து விடுவானென்றும் படித்திருப்பீர்கள். உள்ளுர் வாசிகள் உதவியது தனிக்கதை.

வீரப்பனிடம் பெரிய கோட்டை இருக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்ததைப் போல பல்லாயிரக்கணக்கான ஆள் பலம் இல்லை. ஆயுதங்களும் இல்லை. ஆனால் அந்த காட்டைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டான். நல்ல அரணும் மற்ற சிறப்பும் இல்லாதவரென்றாலும் எதிரியை அவர்கள் வாழும் இடத்தில் தாக்குவது கடினம் என்கிறார் வள்ளுவர்.

நண்பர்களே இதில் நாம் ஒரு நல்ல மேலாண்மைப் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். தனக்கேற்ற இடத்தில் இருப்பவனை வெளியிலிருந்து வருபவன் அதிக சக்தியுடன் வந்தாலும் வெற்றி கொள்வது கடினம் என்பது உண்மைதானே! நீங்களே சொல்லுங்கள். அல்வா என்றால் திருநெல்வேலியும் இருட்டுக்கடையும் தானே ஞாபகம் வருகின்றன. இட்லி என்றால் மதுரை, முகூர்த்தப்பட்டு என்றால் இன்றும் காஞ்சி பட்டு என்று விடாமல் படையெடுப்போரை திசை மாற்ற முடியுமா? இவர்கள் தமதாக்கிக் கொண்ட இடங்கள் அவரவர்கள் ஊர்கள் மட்டுமல்ல, தனித் தரமும், நற்பெயரும் தான். அப்படிப்பட்டவர்களை பெரும் விளம்பரங்கள், விலைக்குறைப்பு போன்றவைகளால் வெல்வது அரிது!


சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது (குறள் 499)

somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024