Monday, February 1, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 17: தற்கொலை எண்ணம் வருவது ஏன்? டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

நல்ல திடகாத்திரமான பயில்வானுக்கு வயிற்று வலி வந்தால் ‘ அவனுக்குத் தைரியம் இல்லை’ என்றோ, ‘நீ நினைச்சா வயிற்று வலியை நிறுத்திவிடலாம், முயற்சி செய்’ என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதைப்போல் மன அழுத்தமும் ஒரு நோய்தான். இது ஒரு நோய் நிலை என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், காலம் தாழ்த்துவதும் வளரிளம் பருவத்தினரை மேலும் பாதிப்பதுடன், தற்கொலைவரை இட்டுச் சென்றுவிடுகிறது.

சில நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றிய பின்னர்தான் இவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியவரும். அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரச்சினையாகத்தான் இன்னமும் இது உள்ளது. எனவே, ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மருந்துகளை உட்கொள்வது பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

தற்கொலையின் தூதன்

அப்பா திட்டியது முதல் காதல் தோல்வி வரை வளரிளம் பருவத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மன நோய்களைப் பொறுத்தவரை முதல் காரணம், மன அழுத்த நோய்தான். மன அழுத்தம் தீவிரமடையும்போது சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும்படி யாரோ காதில் பேசுவதுபோலக் குரல்களும் கேட்கும். இந்த மாயக் குரலுக்கு ‘ஹாலுசினேசன்’ (Hallucination) என்று பெயர்.

மன அழுத்த பாதிப்புகள் மட்டும் இருந்தால்கூடச் சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் இளசுகள், இப்படி ஒரு குரல் பேசுவதாகச் சொல்லிவிட்டால் பேயோட்டக் கண்டிப்பாகக் கூட்டிச் சென்றுவிடுவார்கள். ஆனால், மன அழுத்தம் மோசமடையும்போது குரல் பேசுவது போன்ற பிரச்சினை ஏற்படலாம். அதேநேரம் மருந்துகள் உட்கொண்ட ஓரிரு நாட்களில் தற்கொலை எண்ணங்கள் மறைந்து, இவர்கள் பழைய மனநிலைக்கு மாறுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

தாழ்வு மனப்பான்மையா?

பல நேரம் மன அழுத்தம் என்பது, தாழ்வு மனப்பான்மைக்கு ஈடான ஒன்றாகத் தவறாகக் கருதப்படுவதும் சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்துவதற்கு முக்கியக் காரணமாகிறது. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் குணாதிசயம்தான். ஆனால், மன அழுத்தம் என்பது ஒரு நோய். தாழ்வு மனப்பான்மை என்பது மன அழுத்த நோயின் மற்ற அறிகுறிகளுடன் ஒரு அறிகுறியாக வர வாய்ப்பு இருக்கிறதே தவிர, இரண்டும் ஒன்றல்ல.

இதனால் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினர் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாகப் பெற்றோரால் கருதப்பட்டுப் பல அறிவுரைகளுக்கும், மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான சிகிச்சைகளுக்கும், சிலவேளைகளில் தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதுதான்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்ததற்குச் சொன்ன காரணம் வித்தியாசமானது. “அட்வைஸ், அட்வைஸ். ஸ்கூல் போனா டீச்சர் அட்வைஸ், வீட்டுக்கு வந்தா அப்பா அட்வைஸ், வெளியே போனா சொந்தக்காரங்க அட்வைஸ். என் மனநிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான், தற்கொலை முயற்சிக்கு அவன் சொன்ன காரணம்.

தேவை விழிப்புணர்வு

புள்ளிவிவரங்களின்படி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்குச் சமம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, கவனத்துக்குரியதும்கூட. ஆனால், நிஜத்தில் சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற வருபவர்களுடன் ஒப்பிடும்போது, மன அழுத்தத்துக்குச் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியே வருபவர்களில் பலரும் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்துச் சிகிச்சைக்கு வரும் அளவுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பது வேதனைக்குரியது.

சில நேரம், மற்றப் பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்கள்கூட இதை ஒரு நோய்நிலையாக பார்க்காமல் காலம் தாழ்த்துவது மருத்துவக் கல்வி திட்டத்தில் மனநல மருத்துவத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அதிகரிக்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தான் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து மீண்டு வந்ததை வெளிப்படையாகக் கூறியது நல்ல எடுத்துக்காட்டு. உலகில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவதில் தற்போது முதலிடத்தில் உள்ள இதய நோயைப் பின்தள்ளிவிட்டு, 2020-ம் ஆண்டு முதல் முதலிடத்தை ஆக்கிரமிக்கப்போவது மன அழுத்த நோய் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பது அதற்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

தவறான எண்ணங்கள், ‘தவறான நம்பிக்கைகள்’

# இவர்கள் சோம்பேறிகள், பிரச்சினை களை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்.

# தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்.

# மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் மனதை உற்சாகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

# படிப்பில் ஆர்வம் இல்லாததால், வேண்டு மென்றே இப்படிச் செய்கிறார்கள்.

# பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற் கான ஒரு வழியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

# அவர்களுடைய குணம் சரியில்லை, மன அழுத்தத்திலிருந்து அவர் களாக முன்வந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

# மன அழுத்தத்துக்குச் சிகிச்சை இல்லை.

# மாத்திரைகள் சாப்பிட்டால் காலம் முழுக்க அதற்கு அடிமையாகி விடுவார்கள்.

மேற்கண்ட தவறான கருத்துகளைப் போல மனநல மருத்துவரிடம் சென்றால் தூங்க வைப்பதற்குத்தான் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்பதும் தவறான எண்ணமே. இதற்கான மாத்திரைகள் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, செரடோனின் என்ற வேதியல் பொருளைச் சமநிலைப்படுத்தவே கொடுக்கப் படுகிறது.

(அடுத்த வாரம்: இந்தப் பிரச்சினையும் வருமா?)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024