Thursday, February 11, 2016

மாணவி மோனிஷாவுக்கு என்ன நடந்தது? பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

vikatan.com
விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மோனிஷா தந்தையின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்குப்பிறகு இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதோடு பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவிகள் பிரியங்கா, சரண்யா ஆகியோரின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மோனிஷாவின் உடலை வாங்க மறுத்து விட்டார் அவரது தந்தை தமிழரசன்.

தொடர்ந்து மோனிஷாவின் உடலை மீண்டும் மறுபரிசோதனை சென்னையில் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தமிழரசன். இதற்கு நீதிமன்றமும் சம்மதித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதம் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மோனிஷாவின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில், "மோனிஷாவின் உடல் பரிசோதனையில் விழுப்புரத்துக்கும், சென்னைக்கும் உள்ள முடிவில் வித்தியாசங்கள் உள்ளன. அவர், தண்ணீரில் மூழ்கி சாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது கொலை என்றே கருதுகிறோம். அடுத்து, விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை அவரது பெற்றோரிடம் பெறவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விழுப்புரம் பிரேத பரிசோதனையில் 4 இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 15 இடங்களில் ரத்தக்காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக நீரில் மூழ்கி இறப்பவர்களின் வாயில் நுரை தள்ளும். ஆனால் கிணற்றிலிருந்து மோனிஷாவின் உடல் வெளியே எடுத்தவுடன் எடுத்த புகைப்படத்தில் அவரது வாயில் நுரையில்லை. எனவே அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மரணத்துக்கு முன்பு மோனிஷா தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடி இருக்கிறார். அவரது மூக்கு மற்றும் வாயை பொத்தியதற்கான அறிகுறிகள் முகத்தில் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது எதற்காக போராடினார் என்பது தெரியவில்லை. இன்னும் வரவுள்ள முடிவில் அதற்கான விடை தெரிந்து விடும். மேலும் இரண்டு மாணவிகளின் செல்போன் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை" என்றார்.

மோனிஷாவின் தந்தை தமிழரசன், "போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காகவே என்னுடைய மகள் உள்பட மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பள்ளி தாளாளர் வாசுகி பேசிய உரையாடலில் மூன்று மாணவிகளையும் கடுமையாக மிரட்டுவது தெரிகிறது. என்னிடம் 5 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி மோனிஷாவின் தமிழ், ஆங்கில கையெழுத்து, கல்வி சான்றிதழ்கள், சிடி உரையாடல் உள்ளிட்ட 25 ஆவணங்களை பெற்று சென்று இருக்கின்றனர். அரசு அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை இந்த வழக்கு முடிந்து தீர்ப்புக்கு பிறகே வாங்குவேன். அதுவரை வாங்குவதில்லை" என்றார்.

சரண்யாவின் தந்தை ஏழுமலை, "என்னுடைய மகளின் உடலையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே தெரியவரும். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மோனிஷாவின் உடலில் சில பாகங்கள் இல்லாததால் அவருடைய சாவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஆனால் சரண்யாவின் உடலில் எந்த பாகத்தையும் எடுக்கவில்லை. அதன் மூலம் இந்த வழக்கில் மறைந்துள்ள மர்மமுடிச்சுக்கள் அவிழ வாய்ப்புள்ளது. இதற்காகவே அவரது உடலை செய்யாறில் புதைத்தோம். மூன்று மாணவிகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன். அநியாயமாக என்னுடைய மகளை கொன்று விட்டார்களே" என்றார்.

-எஸ்.மகேஷ்

படங்கள்: 
சொ. பாலசுப்ரமணியன்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...