By நெல்லை சு. முத்து
First Published : 18 February 2016 01:49 AM IST
ஒரு முறை ஆமூர், ஆரம்பப் பள்ளி ஒன்றில் "நிலாப் பயணம்' குறித்து உரையாற்றியபோது, "நிலா நிலா ஓடிவா' என்ற பாடலை மாணவர்களுக்கு அடி எடுத்துக் கொடுத்தேன். அனைவரும் ஒரே குரலில் முழுப்பாடலையும் பாடினார்கள்.
அது சரி. அமர்ந்த இடத்தில் சோம்பலாய் உட்கார்ந்தபடி - நிலாவை நில்லாமல் ஓடி வா, "இண்டு இடுக்கு' எல்லாம் புகுந்து வா, மலை மீது ஏறி வா, மளிகைச் சாமான் வாங்கி வா என்கிறோமே. சிறுவயதில் "நிலவே உன்னிடம் நெருங்குகிறோம்' என்று அல்லவா பாடம் படிக்க வேண்டும்?
ஒரு துணைக்கேள்வியும் கேட்டேன். மல்லிகைப்பூ கொண்டு வரச் சொல்லி மாணவிகள் கேட்பது சரி. தலையில் சூடிக் கொள்ளலாம். மாணவர்களுக்கு எதற்கு பூ என்று வினவினேன். பளிச்சென்று ஒரு பதில். கிராமப்புற மாணவர். ஏழு வயது இருக்கலாம். முழங்காலைக் கட்டி, தரையில் அமர்ந்தபடியே, "சாமிக்குப் போட, சார்' என்றாரே பார்க்கலாம். அந்த சமயோசிதப் புத்தி நகர்ப்புறங்களில் சற்றுக் குறைவுதான்.
நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அறிவுத் தேடலில் சளைத்தவர்கள் அல்லர். பெர்முடா முக்கோணம், வேற்றுக்கிரகவாசிகள், கருந்துளை விண்மீன்கள், பறக்கும் தட்டுகள், மறுபிறவி, இரட்டை பிரபஞ்சம், புழுத்துளை அண்டங்கள் போன்ற அறிவியல் அதிசயங்களை ஆர்வமுடன் சந்தேகங்களாகக் கேட்கின்றனர். உயர்நிலைப் பள்ளி மாணவர்களோ விண்வெளி விஞ்ஞானி ஆவதற்கு என்ன படிக்க வேண்டும் என்று கேட்பதும் முறைதான்.
சமீபத்தில் கோவை, தனியார் கல்லூரி ஒன்றில் அறிவியல் கண்காட்சி விழா மேடையில் அறிவியல் நண்பர் ஒருவர் மாயாஜால வித்தைகளின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டிக் கொண்டு இருந்தார். மாயாஜாலம் நடத்துவோர் தங்கள் கைகளில் "சித்து வேலைகள்' தயார் ஆகும் வரை, பார்வையாளர்களிடம் வெறுமனே கேள்விகள் கேட்பது வழக்கம். அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் உத்தி இது.
அதற்காக, தமிழில் ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியிலும் அலைபரப்பாகும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் பெயர்களை நாள், நேரம் குறிப்பிட்டு ஒவ்வொன்றாக அடுக்கிக் கேட்டார். மாணவர்களோ கொஞ்சமும் அயராமல் "கோரஸாக' சரியான விடை அளித்தனர்.
அசந்து போனேன். மூளைக்குள் "இதையெல்லாம்' எவ்வளவு கருத்தாகப் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்? மாணவப் பருவத்தின் இந்த "தகவல்'களால் வாழ்வில் பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் கிடையாதே. இளைஞர்களின் அறிவுத் திறனுக்கும் இழுக்கு அல்லவா?
உள்ளபடியே கல்லூரி மாணவர்களில் நூற்றுக்கு நாற்பது பேர்தான் நம் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்கிறார்கள். எஞ்சியவர்கள் தங்கள் சார்புச் சித்தாந்தங்களையே விவாதப் பொருள் ஆக்குகின்றனர். உயர்நிலைப் பள்ளியிலோ 50-60% மாணவர்கள் அறிவியல் உரைகளால் சிந்திக்
கிறார்கள்.
நடுநிலைப் பள்ளிகளில் 60-70% பேர் அறிவியல் செய்தியையும் கிரகித்துக் கொள்கிறார்கள். ஆரம்பப் பள்ளியினரோ நூற்றுக்கு 90 பேர் அப்படியே உள்வாங்குகிறார்கள். அவர்களை விட பிஞ்சு மழலைகள்தாம் நூற்றுக்கு நூறு முழுமையாக மனதில் பதியம் இடுகிறார்கள்.
ஒருமுறை, மதுரையில் குடியரசு முன்னாள் தலைவர் கலாமை அரசு விருந்தினர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. அங்கு ஒரு தனியார் கல்லூரிக்கு அறிவியல் உரை நிகழ்த்த வந்ததைக் கூறினேன். "பள்ளிக்கூடங்களுக்கு எல்லாம் போங்க' என்றார். மூன்றே வார்த்தை. அவர் எனக்கு இட்ட இறுதிக் கட்டளை, இன்றும் நிறைவேற்றி வருகிறேன்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் மாணவர்களை நல்லவர்களாகச் செதுக்க முடியும். அதன் பிறகு சட்டம், சாத்தான், ஆண்டவன் எவராலும் ஒருவரின் இயல்பினைத் திருத்தவோ மாற்றவோ இயலாது என்று அடிக்கடி கூறுவார் கலாம். அதனால்தான் கலாம் குடியரசுத் தலைவரான ஒன்றிரண்டு மாதங்களுக்குள் "இந்தியா 2020' கருத்தாக்கத்தினை ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கும், பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கும் பயன்படும்படி இரண்டு விதமாக மொழிபெயர்க்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அந்நூல்கள் உரிய காலத்தில் அரங்கேறின.
2012-ஆம் ஆண்டு இலங்கை அரசு "மும்மொழித் திட்ட'த்தினை அறிவித்த தருணத்தில் அங்கு சென்றிருந்த கலாம், நெல்சன் மண்டேலாவின் வாக்கினை நினைவு கூர்ந்தார்; "எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.' உண்மைதானே.
முதல் தேவை ஆரம்பப் பள்ளியில் தாய்மொழிக் கல்வி. உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலக் கல்வி. கல்லூரிப் படிப்பில் இந்திய அல்லது அன்னிய மொழிகளில் ஏதேனும் புதிதாக ஒன்றை சேர்த்துப் படிக்கலாம்.
இந்த வகையிலும், கிராமப்புற மாணவர்கள்தாம் நகர்ப்புறங்களில் அமைதியாக சாதனைகள் படைத்து வருகிறார்கள். நகர்ப்புறப் பள்ளி, கல்லூரிகளோ தேர்ந்த மாணவர்களைத் "தயாரிக்க'ப் பாடுபடுகின்றன. அதிலும் தனியார் கல்விக் கூடங்கள், மாணவர் உற்பத்திச் சாலைகளாகவே மாறிவிட்டன. சாதி, மத, இன, மொழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு, தேர்விலும் "பாஸ் மார்க்' ஒதுக்கப்படவில்லை என்றால் தங்கள் "அடையாள'த்தைக் காட்டிப் போராட்டம் நிச்சயம். அதிலும் மாணவர்களிடையே மாநிலம் சார்ந்த குழுப்பிரச்னைகளும் உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.
சமீப காலத்தில் புதியதோர் அடையாளம் உதயம் ஆகி இருக்கிறது. அவர் உள்நாட்டவரா, அயல்நாட்டவரா என்று பார்த்தும் உசுப்பிவிடுவோம். போதாக்குறைக்கு, மாணவர்களும் வயதுக்கு ஒவ்வாத விமர்சனங்கள், தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் தர்க்கம் செய்கிறார்கள். "புரட்சி', "எழுச்சி', "மலர்ச்சி', "கிளர்ச்சி' என்று வெற்று அடைமொழி அட்டைகளைக் கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவானேன்?
மர்மமான முறையில் யார் இறந்தாலும், முதலில் அவர் எந்தக் கட்சிக்காரர் என்றுதான் பிரேதப் பரிசோதனை நடக்கிறது. சடலத்தின் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் ஆர்ப்பாட்டமே தொடங்கும். பிற்படுத்தப்பட்டவரையும் தாழ்த்தப்பட்டவர் என்றுதான் முழங்குவோம்.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எந்தப் பருவத்தினரின் சந்தேகச் சாவு என்றாலும் பிரேதத்தில், "பெண்மை' பறிபோனவரா என்று ஆராய்ச்சி நடத்துவோம். சிறுவர்களுக்கே கூட ஆண்மைப் பரிசோதனையில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இப்போது ஆண்மை-பெண்மை இவற்றுக்கு நடுவே இன்னொரு "இடைமை' ஆரம்பம் ஆகிவிட்டது. இந்திய மக்கள்தொகையில் 0.05% மூன்றாம் பாலினத்தவராம். இங்கிலாந்தின் மெக்காலே உருவாக்கிய மாதிரி, அங்குள்ள 6.5 கோடி மக்களில் 1.5 சதவீதத்தினர்க்கான சட்டம் போலவே தங்களுக்கும் இந்தியச் சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் சிலர் அடம்பிடிக்கிறார்கள்.
இனப்பெருக்க அங்கீகாரமோ, இல்லறமோ, நல்லறமோ? தனி அறைக்குள் ஒரே பாலினத்தார் இருவர் நட்பாகச் "சேர்ந்து' இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு அரசுப் பதிவாளர் கையொப்பத்தையும் எதிர்பார்ப்பது ஏனோ?
6500-8500 கிலோ மீட்டருக்கு அப்பால் மேலை உலகில் 1600-2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தேவ குமாரரும், அண்ணலும் சொன்ன உபதேசங்களை இங்கு ஏற்றுக் கொள்கிறோம். ஐரோப்பா, அரேபியா ஆகிய சொற்களின் ஹீப்ரு மூலச்சொற்கள் முறையே "இரெப்' (இரவு), "அரப்' (இருள்) என்பது யாருக்கேனும் தெரியுமா? வட மேற்கில் "சிக்கிய' குருவின் போதனையும் வாளேந்தி வரவேற்போம்.
அதுமட்டுமா, கீழைக் கண்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் வெடித்த சிந்தனைகளையும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். உலகின் மிகப்பெரும் பரப்பு கொண்ட நாட்டில் நகர்ப்புறத் தொழிலாளர்களை மேட்டுக்குடி வர்க்கத்தினர் ஒன்றிணைத்தனர். உலகில் மக்கள்தொகை மிகுந்த நாட்டில் "மூலதனம்' தந்தோரின் பெயரில் விவசாய வர்க்கத்தினர் இன்னொரு பக்கம். இடையில், ஒடுக்கப்பட்டோர் வடகிழக்கின் "புத்த'மதிகளையும் போற்றுகிறோம்.
புறப்பட்ட நாடுகளில் இந்த சித்தாந்தங்கள் காலாவதி ஆன பின்னர், பரிணாம வளர்ச்சியில் தீவிரவாதப் பிரிவுகள் ஆகிவிட்டன. அவை இந்தியாவில் தலைப் பாகத்திலும், தலைநகரிலும், தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கி ஆயிற்று.
பொதுநல ஆர்வலர்களும், மாணவரிடையே பரப்பும் எதிர்மறைச் சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவேண்டும். இளைஞர்கள் அரசியல் அமைப்புகளில் பங்கெடுப்பது மனித உரிமை ஆகலாம். அதுவே மாணவர் உரிமை என்றும் வாதாடலாமா?
மக்கள் வரிப்பணத்தில் படிக்கச் செல்வோருக்கு எது முக்கியம்? கல்விக்கூடங்களில் படிப்பதால் மட்டுமே அவர்களுக்கு மாணவர்கள் என்று பெயர்.
அதிலும், விடுதி மாணவர் வகுப்பிற்கே வரவில்லை என்றால் நிர்வாகத்தால் அவரைக் கண்டிக்கவும் இயலாது. பெற்றோரை வரவழைத்து எடுத்துச் சொல்வதிலும் சிக்கல். ""பல "லகரங்கள்' பணம் கட்டி "சீட்' வாங்கி ஆயிற்று. படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால் விடுதி அறைக்குள் "அசம்பாவிதம்' செய்து கொள்வேன்'' என்று மிரட்டும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்களாம்.
ஒருவகையில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் உடல் அல்லது வார்த்தை ரீதியிலான "ராக்கிங்'கிற்குத் தடை வந்துவிட்டது. படிப்பில் கவனம் செலுத்த விடாத செல்பேசிக்கும் தடை வந்தாயிற்று. மாணவரை அடிக்கக் கூடாது என்று ஆசிரியர்களுக்கே தடை விதிக்கப்பட்டு விட்டது.
அதுசரி, நோயாளிகள், உடல்நலம் பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள். மாணவர்களோ உடலும் உள்ளமும் நலம் பெறுவதற்காகக் கல்விக் கூடங்களுக்கு வருகிறார்கள். பள்ளி வளாகங்களில் பெற்றோர் வருகிறார்கள். இந்த உள்ளூர் அரசியல்வாதிகள் ஏன் பரிவாரங்களுடன் கும்பலாக வருகிறார்கள்?
"நான் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் - மாணவர்களது மலர்ந்த நெஞ்சங்களில் உங்கள் மனச் சலிப்புகளைக் கொட்டி அசுத்தப்படுத்தி விடாதீர்கள்' என்பார் கலாம். மாணவப் பருவத்தினரைப் படிக்க விடாமல், தற்கொலையைத் தூண்டும் அளவுக்கு ஒரு "மனச்சூழல்' தைரியம் தரும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இது பொருந்தும்.
"எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.'
No comments:
Post a Comment