தி.ஆனந்த்
சமீப காலங்களாக இயற்கை மரணங்களுக்கு நிகராகத் தற்கொலை மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வளரிளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
புள்ளி விவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி, மற்ற மாணவர்களைப் போல ஆங்கிலப் புலமை இல்லாததால் அங்கு சொல்லித் தரும் பாடங்கள் புரியவில்லை என்பதால் தற்கொலை என்ற செய்தி தொடங்கி, ஆந்திராவில் சாதியப் பாகுபாட்டால் ஒரு தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டது, அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயின்ற மூன்று நர்சிங் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதுவரை செய்திகள் சொல்லும் யதார்த்தம் இதுதான்... மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து கொண்டே வருகின்றன!
ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு 40 நொடிகளுக்கும், ஒரு தற்கொலை நடக்கிறது. அதில் 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன.
படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்திலிருப்பது கவலை தரும் செய்தி. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து இக்கால வளரிளம் பருவ மாணவர்களின் மனப்போக்கை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.
வளரிளம் பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மன அழுத்தம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பாலும் நிகழலாம்.
தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும். இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை நாட்டமும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே மேற்கண்ட நற்குணங்களைப் பெறாமல் ஒரு பொம்மைக் குழந்தைகளைப் போலத்தான் சமுதாயத்தில் வலம் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.
எல்லாப் பிரச்சனைகளுக்கும் தற்கொலைதான் தீர்வு என்ற முடிவைத் தற்கால இளைஞர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது?
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.
மேலும் முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள் வாழ்க்கையை வளமாக்கும். இயந்திரத்தனமாக வாழும் வளரிளம் பருவத்தினரும், குழந்தைகளும் வாரத்திற்கு ஒரு முறையாவது அதில் இருந்து விலகி, குடும்பத்தினரோடு கடற்கரைப் பகுதி, பூங்கா அல்லது உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசம். சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் மாணவர்களின் மனதில் புகுந்து விடாமல் ஒருவருடன் ஒருவர் நன்றாகப் பழகி சமூகத்தில் சிறந்த குடிமக்களாக வர வேண்டும் என்பதுதான் உறைவிடப் பள்ளிகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்.
ஆனால், இங்கும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி தனி அறைகள் ஒதுக்கப்படுகின்றன. நன்றாகப் பேசிப் பழகுவதற்கு வாய்ப்புள்ள விடுதிகளிலும் தனித்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். தற்கொலைகளுக்குத் தனிமையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
சரி, கூட்டாக இருந்தால் பிரச்சினை இல்லையா என்று கேட்டால், அதிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் பிரச்சினைகளை மீறி நண்பர்களின் ஆதரவு, ஆறுதல், அரவணைப்பு, பொழுதுபோக்கு, கலந்துரையாடலுக்கான வாய்ப்பு என நிறைய நன்மைகள் இருக்கின்றன.
தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் உலகத் திரைப்படங்களைத் திரையிடுவது, சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் விடுதிகளில் ஒரு புதிய சூழலை உருவாக்க முடியும். அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். பாதுகாப்பானதாகவும் இருக்கும்!
- கட்டுரையாளர், திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி எனும் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வந்த அந்த கிராமத்தில் பல விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டவர் இவர்.
தொடர்புக்கு: anandt.tanand@gmail.com
No comments:
Post a Comment