M.G.R. சிறை சென்றிருக்கிறார் என்பது பலர் அறிந்திராத செய்தி. இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்தபோது அதில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தது உண்டு. அந்த சமயத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்தார், அண்ணா மற்றும் திமுகவின் சம்மதத்தோடுதான்.
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்ட போராட்டத்தைத் தொடங்கி நடத்துவதற்கான ஆயத்தங்களில் 1960-ம் ஆண்டு முதலே திமுக ஈடுபட்டது. திமுக பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் இந்தி எதிர்ப்பு அறப்போராட்டக் குழு அமைக்கப்பட்டது. 1960 ஜூலை 15-ல் அறப்போராட்டக் குழு கூட்டம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் போராட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து மாணவர்கள், நடிகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
‘படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. திமுகவினர் மீது வழக்குகள் போடப் பட்டால் அவர்களுக்கு உதவ வழக்கறிஞர் கள் தேவை. உயிர் காக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. போராட்டத்தில் ஈடுபட்டு நம்முடைய கலைஞர்கள் சிறை செல்ல நேர்ந்தால் அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு கலைத்துறை நம் கையை விட்டுப் போய்விடும். எனவேதான் இவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதில் எம்.ஜி.ஆருக்கு கூட என் மீது கோபம்’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் 1960 ஜூலை 31-ம் தேதி நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா விளக்கம் அளித்தார்.
கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ளவில்லை. போராட்டம் தீவிர மாக இருந்ததால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியும், விழா கொண்டாடப்படவில்லை. நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக விழா கொண்டாடப்படவில்லை என்று நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
என்றாலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். சிறை சென்றிருக்கிறார். இதுபற்றி எம்.ஜி.ஆர். வெளியில் அதிகம் சொல்லிக் கொண்டதில்லை. 1958-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த நேரு சென்னை வந்தபோது அவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்ட தீர்மானிக்கப் பட்டது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிகர்களுக்கு உடைகள் தைப்பதற்காக இருந்த தையல் மெஷின்கள் மூலம் இரவு பகலாக கருப்பு கொடி தயாரிக்கும் பணி நடந்தது. போராட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது படலம் தொடங்கியது.
அப்போது, நள்ளிரவில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்பட்டார். மேலும், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வளையா பதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதலில் எம்.ஜி.ஆரை சைதாப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று காலையில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். எம்.ஜி.ஆர். 4 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேரு சென்னை வந்து சென்ற பின் எம்.ஜி.ஆர். விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது சிறைச்சாலை விதிகளை எம்.ஜி.ஆர். முழுமையாக கடை பிடித்தார். சிறையில் சிவப்பு அரிசிச் சோறுதான். மற்றவர்கள் சாப்பிட முடியாமல் சங்கடப் படுகையில் எம்.ஜி.ஆர். எந்த சலனமும் இன்றி சாப்பிட்டார். இரவில் சிறை அறைக்குள் அடைத்து விட்டு காலையில்தான் திறந்துவிடுவார்கள். தாகம் தீர்த்துக்கொள்ள மண் பானையில் தண்ணீர். அருகே தகர டப்பா. அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டும். அறையின் மூலையில் இரண்டு சட்டிகள். அதுதான் கழிப்பிட வசதி.
அப்போதே எம்.ஜி.ஆர். திரையுலகின் உச்ச நட்சத்திரம். வாய்ப்புகளும் வசதிகளும் வந்துவிட் டன. என்றாலும் சிறையில் இந்த அசவுகரியங்களை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவில்லை. இதை எல்லாம் முகமலர்ச்சியுடன் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சணையும் ஒன்றுதான், கட்டாந்தரையும் ஒன்றுதான்.
சிறைக்கு உள்ளேயும் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை வெளிப்பட்டது. எம்.ஜி.ஆர். சிறையில் இருக்கிறார் என்றதும் சட்டத்துக்கு உட்பட்டு அவருக்காக பழங்கள், உணவுப் பொருட்களை வெளியில் இருந்து கட்சியினரும், ரசிகர்களும், பொதுமக்களும் அனுப்பி வைத்தனர். அவற்றை சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு எல்லோருக்கும் கிடைத்ததை உறுதி செய்த பிறகே எம்.ஜி.ஆர் சாப்பிடுவார்.
கைதானவர்களில் பலரை சாதாரணமான ‘சி’ வகுப்பில் அடைத்தனர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் ‘பி’ வகுப்பு அளிக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால்தான் தானும் ‘பி’ வகுப்பில் இருக்க முடியும் என்று எம்.ஜி.ஆர். போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகே, அவருடன் கைதான பலர் ‘பி’ பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.
சிறைவாசம் அனுபவித்தவர் மட்டுமல்ல; சிறையிலும் தன்னைச் சேர்ந்தவர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் எம்.ஜி.ஆர்.
திரையுலகில் வி.சாந்தாராமை தனது ஆசான்களுள் ஒருவராக எம்.ஜி.ஆர் கருதினார். இந்தியில் ‘தோ ஆங்க்கே பாரா(ஹ்) ஹாத்’ என்ற பெயரில் வி. சாந்தாராம் தயாரித்து இயக்கிய படம்தான் தமிழில் உதயம் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படமான ‘பல்லாண்டு வாழ்க’ ஆனது.
சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்துவிட்டு தண்டனை அடைந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை விளக்கும் வகையில், கொடும் குற்றங்கள் செய்த கைதிகள் 6 பேரை மனம் திருந்தியவர்களாக மாற்றும் ‘ஜெயிலர் ராஜன்’ பாத்திரத்தில் அப்படத்தில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார்.
No comments:
Post a Comment