அலோபதி மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளில் ‘எண்டாஸ்கோப்பி'யின் (Endoscopy) வரவு மிக முக்கியமானது. அறுவை சிகிச்சை செய்யப்படாமல் உடலின் உள் நோய்களை மிக எளிதாகக் கண்டறிய உதவும் 'உள்நோக்கும் கருவி' இது. அதாவது, நம் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள துவாரங்கள் வழியாக (வாய், காது, மூக்கு, தொண்டை, ஆசனவாய், சிறுநீர்க்குழாய்) வயிறு மற்றும் உடலின் உள்உறுப்புகளைக் காண உதவும் கருவிக்குப் பொதுவான பெயர் எண்டாஸ்கோப்பி. 'எண்டோ' என்றால் ‘உள்ளே' என்று அர்த்தம். ‘ஸ்கோப்பி' என்றால் ‘நோக்குதல்' என்று அர்த்தம்.
இதில் பல வகை உண்டு:
# கேஸ்ட்ரோஸ்கோப்பி (Gastroscopy): தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# லெரிங்கோஸ்கோப்பி (Laryngoscopy): தொண்டை மற்றும் குரல்வளைப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# பிராங்கோஸ்கோப்பி (Bronchoscopy): சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல்களைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# கொலனோஸ்கோப்பி (Colonoscopy): ஆசனவாய் மற்றும் பெருங்குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# சிஸ்டாஸ்கோப்பி (Cystoscopy) : சிறுநீர்த் துளை வழியாகச் சிறுநீர்ப்பை, சிறுநீர் இறக்குக்குழாய், புராஸ்டேட் போன்ற பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# பிராக்டோஸ்கோப்பி (Proctoscopy): மலக்குடலைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# தொரக்கோஸ்கோப்பி (Thoracoscopy) : புளூரா எனும் நுரையீரல் உரை, பெரிகார்டியம் எனும் இதய உரை மற்றும் நெஞ்சுப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# கால்போஸ்கோப்பி (Colposcopy): பெண் பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
# லேப்ராஸ்கோப்பி (Laparoscopy): கல்லீரல், கணையம், பித்தப்பை, கரு வெளியேறும் குழாய், வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி .
# ஆர்த்தோஸ்கோப்பி (Arthoscopy) : எலும்பு மூட்டுகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.
இரைப்பை எண்டாஸ்கோப்பி
‘இரைப்பை எண்டாஸ்கோப்பி’(Gastro endoscopy) என்பது தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றைப் பரிசோதிக்க உதவும் கருவி. இதில் ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு ஃபைபர் குழாய் உள்ளது. இது வளைந்து நெளிந்து குறுகிச் செல்லக்கூடியது. இதைப் பயனாளியின் வாய் வழியாக இரைப்பைக்குள் செலுத்துகிறார்கள். உள்ளே சென்ற குழாயின் முனையில் வெளிச்சம் தரக்கூடிய பல்ப் இருக்கும். இதை வெளியிலிருந்தே இயக்கலாம். இக்குழாயின் வெளிமுனையில் லென்ஸ் இருக்கும். பல்பை எரியவிட்டு, வெளிமுனையில் உள்ள லென்ஸ் வழியாக மருத்துவர் பார்ப்பார்.
லென்ஸ் இரைப்பையின் பாகங்களைப் பன்மடங்காகப் பெரிதாக்கிக் காண்பிக்கும். அத்துடன் சுருங்கி இருக்கும் இரைப்பையை விரிவடையச் செய்யக் காற்றைச் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. உணவுக்குழாய் வால்வுப் பிரச்சினை, இரைப்பைப் புண், கட்டி, ரத்தக்கசிவு, புற்றுநோய் போன்றவற்றை இதன் மூலம் நேரில் காணமுடியும். பரிசோதனைக்கு உள்ளாகும் பகுதியில் புற்றுநோய் உள்ளது எனச் சந்தேகம் வந்தால், அந்தத் திசுவை ‘பயாப்சி’பரிசோதனைக்கு அனுப்ப, சிறிதளவு திசுவைக் கிள்ளி எடுக்கவும் இதில் வசதி உள்ளது. இரைப்பைச் சுரப்புகளை உறிஞ்சி எடுத்துப் பரிசோதிக்கவும் இது உதவுகிறது.
இந்தப் பரிசோதனையைச் செய்ய மயக்க மருந்து தேவையில்லை. குழாயை உள்ளே செலுத்தும்போது ஏற்படுகிற சிரமத்தைக் குறைக்க மதமதப்பை உண்டாக்கக்கூடிய ஜெல்லி மருந்தை வாயில் தடவுவார்கள்.
சிகிச்சையும் தரலாம்
இது பரிசோதனை கருவி மட்டுமல்ல. இதைப் பயன்படுத்திச் சில நோய்களுக்குச் சிகிச்சையும் தர முடியும். முக்கியமாக, கல்லீரல் சுருக்கநோய் மற்றும் குடல்புண் வந்தவர்களுக்கு ரத்தவாந்தியும் ரத்தக்கசிவும் ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு எண்டாஸ்கோப்பி மூலம் பேண்டிங், ஸ்கிலிரோதெரபி போன்ற சிகிச்சைகளை அளித்துக் குணப்படுத்த முடியும். உணவுக்குழாய் புற்றுநோய் வந்தவர்களுக்கு ERCP எண்டாஸ்கோப்பி மூலம் செயற்கை உணவுக்குழாயைப் பொருத்த முடியும். குழந்தைகள் தவறுதலாக நாணயம், ஊக்கு, குண்டூசி, கோலிக்குண்டு, கம்மல், ஹேர்பின் போன்றவற்றை விழுங்கிவிடுவார்கள். இவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டாஸ்கோப்பி மூலம் எளிதாக எடுத்துவிட முடியும்.
(அடுத்த வாரம்: எலும்பு வலுவிழப்பு நோய்க்கு என்ன பரிசோதனை?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
No comments:
Post a Comment