Wednesday, February 10, 2016

நகை வாங்க ‘பான் கார்டு’ எதற்கு?

logo


கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.2 லட்சத்துக்குமேல் நகை வாங்கும்போது, வருமானவரித்துறையிடம் விண்ணப்பம் செய்து பெற்ற நிரந்தர கணக்கு எனப்படும் ‘பான் கார்டு’ விவரத்தை கொடுக்கவேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து, இந்தியா முழுவதிலும் உள்ள நகைக்கடைக்காரர்கள் இன்று ஒருநாள் அடையாள கடை அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாடு முழுவதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள், 300 சங்கங்களின் கீழ் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இருக் கின்றன.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ‘பான் கார்டு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஒரு மாதத்திலேயே நகைக்கடைகளில் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக நகைக்கடை அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த விற்பனை வீழ்ச்சியால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய மற்ற வரிகளின் வருமானமும் நிச்சயமாக குறைந்து இருக்கும். நகைக்கடைகளில் தற்போது உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் உள்ள தங்க விற்பனையில் 50 சதவீதம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 2018–ம் ஆண்டில் இந்த விற்பனை ரூ.5 லட்சம் கோடிக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருமாதத்தில் 30 சதவீத விற்பனை குறைந்துவிட்டதால், தங்கத்தை யாரும் வாங்காமல் இருந்துவிட்டார்கள் என்று பொருளல்ல. ‘பான் கார்டு’ கேட்காத வியாபாரிகளிடம் வாங்கியிருப்பார்கள், அல்லது கிராமப்புறங்களில் உள்ள நகை தொழிலாளர்களிடம் வாங்கியிருப்பார்கள்.

இந்த திட்டத்தை நாட்டில் அனைவரும் ‘பான் கார்டு’ வாங்கியபிறகு, அல்லது வாங்க வைத்தபிறகு கொண்டுவந்து இருக்கலாம். ஏனெனில், இந்தியா முழுவதுமே இப்போது 22 கோடியே 30 லட்சம் பேர்களுக்குத்தான் ‘பான் கார்டு’ கொடுக்கப்பட்டுள்ளது. நகை வாங்க வருபவர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள்தான். பொதுவாக நகை வாங்க வருபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். அதுபோல, கிராமப்புறங்களில் இருந்தும், வீடுகளில் சுபகாரியங்களுக்கும், பெண்களுக்கு அணிகலன்களுக்காகவும் நகை வாங்க வருவார்கள். இதுமட்டுமல்லாமல், விவசாய வருமானத்துக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இவ்வளவு நாளும் ‘பான் கார்டு’க்கு அவசியமே இருந்திருக்காது. மேலும், தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று காலையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, ரூ.21 ஆயிரத்து 344–க்கு விற்பனை ஆனது. ரூ.2 லட்சம் என்றால், செய்கூலி, சேதாரம், கல் விலை எல்லாம் கணக்கிட்டால் 7 சவரன்தான் தேறும். இப்போது திருமண நேரம். இந்த நேரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 7 பவுன் என்பது சாதாரணம். மேலும், ரூ.2 லட்சம் என்பதை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி கொஞ்சம் கொஞ்சமாக ரொக்கமாகவே சேர்த்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் ‘பான் கார்டு’ கேட்டால், இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்று கேட்பார்கள், நோட்டீசு அனுப்புவார்கள், வருமானவரி வளையத்துக்குள் தேவை இல்லாமல் விழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற பயம் மக்களுக்கு இருக்கிறது.

பொதுமக்கள் வாங்கும் தங்கத்துக்கு நகைக்கடைகள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரியை கட்டுகிறார்கள். ஆகவே, வருமான இழப்பு என்பது இருக்காது. மேலும், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, தங்கம் வாங்கவரும்போது பணப்புழக்கம் அதிகரிக்கும். அது பொருளாதாரத்துக்கும் நல்லது. எனவே, தங்கம் வாங்குவதற்கு ‘பான் கார்டு’ தகவல் தரவேண்டும் என்பது உள்பட எந்தவித கட்டுப்பாடும் தங்கம் வாங்க வருபவர்களுக்கு, மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்படக்கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024