By வ.மு. முரளி
First Published : 16 February 2016 01:22 AM IST
முன்பின் தெரியாத பயணிக்காக தனது வாகனத்தை அடகுவைத்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதில் உங்களையே பெருமிதம் கொள்ளச் செய்யும் நிகழ்வு அது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கே.ரவிசந்திரன் (57), ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டுவது ஒன்றுதான் அவருக்கு வருமானம்.
இரு மாதங்களுக்கு முன் ராமாபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் அவரது ஆட்டோவில் பயணித்தார். அண்ணா சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக ஓட்டுநர் ரவிசந்திரன் அந்தப் பயணியை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். தவிர, பயணியின் மகனுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
அங்கு பயணியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இருதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், அவருக்கு அறுவைச்சிகிச்சை மூலம் இருதயத்தில் "பேஸ் மேக்கர்' சாதனத்தை உடனடியாகப் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதற்கு சுமார் ரூ. 47 ஆயிரம் செலவாகும் என்ற நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பயணியிடம் அந்த அளவு பணமில்லை. சென்னைக்கு விரைந்து வந்த மகனும் குறைந்த அளவு பணமே வைத்திருந்தார்.
அப்போது ரவிசந்திரன் சற்றும் யோசிக்காமல், தனது பிழைப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆட்டோவை அடமானம் வைத்து பணம் திரட்டி மருத்துவமனையில் கட்டிவிட்டார். அதையடுத்து, அந்தப் பயணிக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவரும் உடல்நலத்துடன் ஊர் திரும்பிவிட்டார்.
இதையறிந்த அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரனை பாராட்டி கெளரவித்தது. இந்தச் செய்தி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
அதன்பிறகு அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பல நல்லுள்ளங்கள் நிதியுதவி செய்ததால், தனது ஆட்டோவை அவர் மீட்டுவிட்டார் என்பது தனிக்கதை. ஆனால், முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்காக தனது ஆட்டோவை அடமானம் வைக்கும் பெருந்தன்மையும் காருண்யமும் யாருக்கு வரும்?
இதுபற்றி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1956-இல் இதே சென்னையில் நடந்த மற்றொரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
சென்னையின் ஜெமினி ஸ்டுடியோ முன்பு அதிகாலை வேளையில் ஒரு சாலைவிபத்து. இளைஞர் ஒருவர் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அனைவரும் அலுவலகத்துக்கு விரைந்துகொண்டிந்த நிலையில், யாருக்கும் காயமடைந்த இளைஞரைக் கவனிக்க நேரமில்லை.
அப்போது அந்த வழியே வந்த கூலிவேலை செய்யும் மூதாட்டி ஒருவர் அந்த இளைஞனைக் கண்டு பதைபதைத்தார். அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்து, அந்த இளைஞரை அதில் கிடத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அந்த மூதாட்டி.
சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அந்த இளைஞர் உயிர் பிழைத்தார். அதுமட்டுமல்ல, மயங்கிக் கடந்த அந்த இளைஞரின் சிகிச்சைக்காக, தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தார் அந்த ஏழைத் தாய்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த அந்த மூத்த பத்திரிகையாளர், எல்லாக் காலங்களிலும் இத்தகைய உத்தமமான மனிதர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் அறிவதில்லை என்றார்.
சிந்தித்துப் பாருங்கள். அறிமுகமில்லாத மேற்கு வங்கப் பயணிக்காக தனது வாழ்வாதாரமான ஆட்டோவை அடமானம் வைத்த ஆட்டோ ஓட்டுநரும், சாலையில் கிடந்த இளைஞனைக் காப்பதற்காக தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்த மூதாட்டியும் எதற்காக அவற்றைச் செய்தார்கள்?
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் இலக்கியத்தில் இடம்பெற்றார்கள். அவர்களின் பரம்பரை நீட்சியா இவர்கள்? எதுவாயினும், தங்கள் எதிர்காலத்தைவிட நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
இந்த இடத்தில் 20 அம்சக் கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும், அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் ஆசிரியர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களது செயலின் அர்த்தமின்மை புரியும்.
ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அவர்களின் போராட்டம் மக்கள்நலனைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது.
மக்கள் அளிக்கும் வரிப்பணத்தில்தான் தாங்கள் ஊதியம் பெறுகிறோம் என்பதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மறந்ததால், அரசுப் பணிகள் பல நாள்களாக முடங்கிக் கிடக்கின்றன. இது கடமை தவறுவது அல்லவா? கடமையை நிறைவேற்றுபவருக்கே உரிமைகள் உண்டு என்பார் மகாத்மா காந்தி. அதை நமது தமிழக அரசுப் பணியாளர்கள் மறந்தது ஏன்?
சாலையில் அடிபட்டுக் கிடந்தவரைக் கண்டு வாடிய மூதாட்டி அளித்த மூக்குத்திக்கு, நமது அரசு ஊழியர்கள் பெறப்போகும் லட்சக் கணக்கான ஓய்வூதியம் நிகராகுமா?
நிர்வாக இயந்திரத்தின் உறுப்புகளான அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் ஒரு சதவீதம் பேர் கூட இல்லை. ÷ஆனால், இந்த நாடு உயிர்ப்புடன் திகழ்வது, தன்னலமற்ற சேவைக்கு உதாரணமான ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன், யாரோ ஓர் இளைஞனைக் காப்பாற்ற தனது மூக்குத்தியைக் கழட்டிக் கொடுத்த ஏழை மூதாட்டி போன்றவர்களால் தான்.
இதைத்தான், "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்று ஒளவைப் பாட்டி மூதுரையில் கூறிச் சென்றாரோ?
No comments:
Post a Comment