Wednesday, February 17, 2016

அரசு ஊழியர் போராட்டம் தீவிரம் ஆகிறது

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தங்கள் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சேப்பாக்கம் அருகே எழிலகம் வளாகத்தில் நேற்று காலை யில் திரண்ட அரசு ஊழியர்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வளாகத்துக்கு உள்ளேயே பேரணியும் சென்றனர். நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஏதாவது அறிவிப்புகள் வெளி வரும் என்று அவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் எந்த அறிவிப்பும் வராததை தொடர்ந்து அவர்கள் எழிலகம் வளா கத்தை விட்டு வெளியேறி பேரணியாக தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட புறப்பட்டனர். ஆனால் பாதுகாப் புக்கு நின்றிருந்த போலீஸார் எழிலகத் தின் அனைத்து வாயில்களையும் அடைத்து, தடுப்பு ஏற்படுத்தி, அரசு ஊழியர்கள் வெளியேறாமல் சூழ்ந்து நின்று கொண்டனர்.

இதனால் போலீஸாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடுப்புகளை அகற்றிக் கொண்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர். அவர்களை போலீஸார் தடுக்க முயல, இரு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் சிலர் மயங்கினர். சிலர் காயம் அடைந்தனர்.

வெளியேறிய அரசு ஊழியர்கள் மெரினா கடற்கரை காமராஜர் சாலை யில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் காமராஜர் சாலை முழுவதும் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீ ஸார் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். நூற்றுக் கணக்கானவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி கூறிய தாவது:

போராட்டத்தை இன்றுமுதல் இன்னும் தீவிரப்படுத்த இருக்கிறோம். பட்டதாரி மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் உட்பட பல சங்கத்தினருடன் இணைந்து புதிய போராட்டக் குழுவை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். நீதித்துறை ஊழியர் சங்கத்தினர், டாக்டர்கள் சங்கத்தினர், செவிலியர் சங்கத்தினர் உட்பட அரசு சார்ந்த பல முக்கிய சங்கத்தினர் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

17-ம் தேதி (இன்று) முதல் அவர் களும் எங்களுடன் இணைந்து போராட இருக்கின்றனர். தாலுகா வாரியாக தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்செல்வி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024