Saturday, February 20, 2016

எம்ஜிஆர் 100 | 4 - எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage

எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.

‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.

கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.

விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.

அதற்கேற்ப, பாகவதர் தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்படியும் அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்பும் எம்.ஜி.ஆரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரைக் கட்டியணைத்து சமாதானப்படுத்தினாராம் பாகவதர். அந்த அளவுக்கு பாகவதர் மீது அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.

திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.

காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.

அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.

விழாவில் ஒரு சுவையான சம்பவம். காலையில் விழா நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். வருகையை எதிர்பார்த்து திருச்சி நகரமே அந்தப் பகுதியில் கூடியிருந்தது. 11.30 மணிக்கு விழா மேடைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். மலர்ந்த முகத்துடன் மக்களைப் பார்த்து கும்பிட்டார். அப்போது, பொருத்தமாக ‘சிவகவி’ படத்தில் இடம் பெற்ற ‘வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?’ பாடல் பாகவதரின் கம்பீரக் குரலில் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கிறது. புரிந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது.

மக்கள் கடலின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டே தனக்கு பிடித்த பாகவதரின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சந்திர பிம்பமாய், மலர்ந்த ரோஜாவாய் மேலும் மகிழ்ச்சியில் ஜொலித்தது. மக்களின் உற்சாக ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?




திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில் இருவரோடும் இணைந்து நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. பாகவதருடன் ‘அசோக்குமார்’, ‘ராஜமுக்தி’ ஆகிய படங்களிலும் பி.யூ.சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.

1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தார். அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024