இடிபாடுகளுக்கு இடையில்...
By ஆசிரியர் | Last Updated on : 04th November 2016 12:55 AM | அ+அ அ- |
சென்னை மெளலிவாக்கத்தில் புதன்கிழமை தகர்க்கப்பட்ட 11 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்ட பிறகு, அந்த நிலம் நீதிமன்ற உத்தரவின்படி, அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் நிறுவனத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தவறான இடத்தில் கட்டப்பட்டதால்தான் அந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டது. அந்த இடத்தை மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுநரிடம் கொடுப்பானேன்?
இரண்டு கேள்விகள் எழுகின்றன. இந்த இடம் நீர்நிலைப் பகுதிக்கு உட்பட்டது என்றால் இதனைக் கட்டுமான நிறுவனத்துக்கு ஏன் திரும்ப அளிக்க வேண்டும், அரசே எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே என்பது முதல் கேள்வி.
இந்த இடத்தை அரசு திரும்ப எடுத்துக்கொள்ள முடியாது என்கிற பட்சத்தில் இந்த இடத்தில் வீடு வாங்குவதற்காக ரூ.20 கோடி செலுத்திய 48 பேர் அத்தொகையை திரும்பப் பெற முடியாத நிலையில், இந்த இடத்தை கட்டுமான நிறுவனத்துக்கு திரும்ப அளிக்காமல் அரசே விற்பதன் மூலம், இந்த 48 பேருக்கு இழப்பீடு வழங்கலாகாதா என்பது அடுத்த கேள்வி.
மெளலிவாக்கத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் இறந்த சம்பவத்தில் விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி தனது அறிக்கையை ஆகஸ்ட் 2015-இல் அளித்தபோது, அந்த நிறுவனத்தில் வீடு வாங்கப் பணம் செலுத்தியவர்களுக்கும், கட்டடம் சரிந்தபோது பாதிப்படைந்தவர்களுக்கும் நியாயமான இழப்பீடு வழங்க, ஒரு குழுவை அமைக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார். இன்னும் அத்தகைய ஒரு குழு அமைக்கப்படவில்லை. ஒருவேளை, இனி அமைக்கப்படக்கூடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீதிபதி ரகுபதி தனது பரிந்துரையில் முக்கியமானதாக, கட்டுநர், வீடு வாங்குவோர், வங்கி மூன்று தரப்பினரும் இணைந்ததான ஒரு காப்பீட்டு முறை ஏற்படுவதற்கு தற்போதைய சட்டத்தை வலுப்படுத்த அல்லது புதிய சட்டத்தை பிறப்பிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டாக வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மனைவணிக ஒழுங்காற்றுச் சட்டத்திலும்கூட இதுபற்றிய தெளிவு காணப்படவில்லை.
மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக ஏழ்மை ஒழிப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி, வீடு கட்டுநர் மற்றும் வீடு வாங்குபவர் செய்துகொள்ள வேண்டிய விற்பனை ஒப்பந்த விதிமுறைகளை (அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் ச்ர்ழ் ள்ஹப்ங் தன்ப்ங்ள் 2016) வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்த விதிமுறையில், கட்டுநர் அல்லது வீடு வாங்குபவர் இருவரில் யார் வேண்டுமானாலும், வாக்கு தவறும் நிலையில் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடியும். வீடு வாங்குபவர் தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்பாவிட்டால், கட்டுமான நிறுவனம் அவருக்கு வீட்டைக் கட்டி ஒப்படைக்கும்வரை வட்டிப் பணம் அளிக்க வேண்டும். ஆனால், கட்டுநரின் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால், அதாவது போர், வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றால் ஒரு கட்டடம் கட்டுவதற்கு தாமதமானால், இந்த விதி பொருந்தாது. அவர் வீடு வாங்குபவருக்கு காலதாமதத்துக்காக எந்தத் தொகையும் தர வேண்டியதில்லை என்கிறது அந்த விதிமுறை.
கட்டுநரின் ச
க்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால் தாமதமானால் அவருக்கு எந்தப் பொறுப்பேற்பும் கிடையாது. ஆனால் காலதாமதமாகும் ஆண்டுகளுக்கு வீடு வாங்குபவர் வங்கியில் வட்டிப் பணம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது எந்த வகையில் சரி? வங்கிகளால் கட்டுநர்களுக்குத் தரப்படும் அதே விதிமுறைத் தளர்வு கடன் பெற்றவர்களுக்கும் தரப்படுவதுதானே நியாயம்?
மத்திய அரசு குறிப்பிடும் இந்த விற்பனை ஒப்பந்த விதிமுறைகள், வீடு வாங்குபவருக்கு கடன் வழங்கும் வங்கிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் நீதிபதி ரகுபதி விசாரணைக் கமிஷன் தனது பரிந்துரையில் வங்கியையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்கிறது. இதுவே சரியான அணுகுமுறை என்பது தற்போது மெளலிவாக்கம் விவகாரத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது.
மெளலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தில் சிருஷ்டி ஹவுஸிங் பிரைவேட் லிட். நிறுவனக் கணக்கில் வீடுவாங்கியவர்கள் கோரிய கடன் தொகையை நேரடியாக வங்கியே காசோலை அல்லது பணப்பரிமாற்றம் மூலம் வழங்கியுள்ளது. கடன் வாங்கியவர் அந்தத் தொகையை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டார் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
2014 ஜூன் மாதம், இரு கட்டடங்களில் ஒன்று இடிந்து விழுந்தவுடன் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இருந்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, வீடு வாங்க பணம் செலுத்தியோர் அனைவரும் அவர்கள் வாங்காத பணத்துக்கான வட்டியை, எந்தப் பயனுமின்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் வீடு வாங்கிய 48 பேருக்கும் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு அளிக்கும் என்பது தெரியாது. எத்தகைய இழப்பீடு கிடைக்கும் என்பதும் தெரியாது. இந்நிலையில், இந்த இடத்தில் வீடு வாங்கக் கடன் பெற்ற அனைவருக்கும், நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை, வட்டி விலக்கு அளிக்கும் குறைந்தபட்ச சலுகையையாவது வங்கிகள் வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்பது உறுதி. ஆனால், 48 வீடுகளுக்கு பணம் செலுத்தியவர்கள் நிலை என்ன? இவர்களுக்கான இழப்பீடாக, குறைந்தது 50% தொகையை அளித்து, மீதித் தொகையை நீதிமன்றத் தீர்ப்பின் முடிவில் கணக்குப் பார்ப்பதுதான் மனிதாபிமான செயல்பாடாக இருக்கும்!