Thursday, November 3, 2016

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்

மதுபோதையும் ஈகோவும் மிக மோசமான இணைகள்! உண்பது, உறங்குவது போன்ற அத்தியாவசிய கடமைகளில் ஒன்றாகவே குடிப்பதும் மாறி விடுகிறது மது மனிதர்களுக்கு. குடிக்காமல் கட்டுப்பாடாக இருப்பது என்பது இவர்களைப் பொறுத்த வரையில் மிகவும் சிரமமான விஷயமே. இருப்பினும் சில ஆலோசனைகள் அல்லது இணைந்த செயல்பாடுகள் மூலமாக மதுவைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். உதாரணமாக...இரவில் மட்டும் குடிக்கிறவர்களே பெரும்பாலும் அதிக அளவு இருக்கிறார்கள். நல்ல வேளை. இவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படும் வகையில் திட்டமிட வேண்டும்.

இரவில் கோயில் போன்ற மது வாசம் அற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கம் ஆக்கலாம். அலுவலகப் பணியாளர்களில் இப்படி ஒரு குழுவே உண்டு. 6 மணி அடித்ததும் சக ஊழியர்களுடன் ஆர்வத்தோடு கிளம்பிப் போய் உற்சாக பானம் அருந்திய பின்பே வீடு நோக்குவார்கள். ஆரம்பத்தில் சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவே தொடங்கும் இப்பழக்கம் காலத்தின் கோலத்தில் அடிமை நிலைக்கு அழைத்துச் சென்று விடும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக அக்குழுவிலிருந்து விலகி, மாலை நேர மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
திரைப்படங்கள் பார்க்கவோ, விளையாட்டுகளில் ஈடுபடவோ அந்த மாலையைப் பயன்படுத்தலாம்.

சிலர் குடிப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், சில நண்பர்களோடு மட்டும் எல்லை இல்லாமல் குடித்துத் திளைப்பார்கள். அந்த நண்பர்களை தவிர்ப்பதுதான் நல்வழி. மன அழுத்தம் ஏற்படும்போது மதுவை நாடுவது சிலருக்கு வாடிக்கை. ‘ரொம்ப ஸ்டெரெஸா இருக்கு’,‘மேனேஜர் திட்டிட்டாரு’ என இவர்கள் சொல்லத் தொடங்கினாலே, அடுத்து வண்டியை நிறுத்துவது டாஸ்மாக் வாசலில்தான். மன அழுத்தத்தைப் போக்க மது ஒரு மருந்து அல்ல என்கிற உண்மையை உணர்ந்து கொள்வது அவசியம்.

மன அழுத்தத்துக்குக் காரணமான பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்றே பார்க்க வேண்டும். குடித்தாலும் மன அழுத்தம் ஒருபோதும் குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். யோகா, தியானம், மனநல ஆலோசனை போன்றவையே பலன் தரும். சிலர் தனியாக இருக்கும்போது மட்டும் குடிப்பார்கள். ’தனிமை’, ’போர் அடிக்குது’ என இவர்களுக்குக் காரணங்கள் கிட்டக்கூடும். தனிமையை தவிர்ப்பதே இவர்களுக்கு முதல் மருந்து. குடும்பத்தோடும், குடிப்பழக்கம் இல்லாத நண்பர்களோடும் அதிக நேரம் செலவிட வேண்டும்.

‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ போன்ற குடிப்பழக்கத்தை கைவிட உதவும் அமைப்புகளில் இணையலாம். ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ என்கிற மது அருந்தாதவர்கள் குழு, 1935ம் ஆண்டு முதல், உலக அளவில் செயல்படும் ஓர் அமைப்பு. மதுவைத் தவிர்க்க இங்கு ஆலோசனைகள் வழங்கப்படும்... அனுபவங்கள் பகிரப்படும்... ஆதரவு அளிக்கப்படும். 1957 முதல், இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்படும் இவ்வமைப்பு, தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், அருப்புக் கோட்டை, கோவை, கூடலூர் (நீலகிரி), மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் பங்காற்றுகிறது.

தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்களை www.aagsoindia.org என்ற இணையதளத்தில் காணலாம்.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதோ’ என்கிற மனப்புலம்பலுக்கு ஆளாகிறவர்களும் எளிதில் மதுவின் போதைக்குள் விழுகிறார்கள். வாழ்வின் சிரம கட்டங்களுக்கு இது ஆறுதல் அளிப்பதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. முறையான வழிமுறைகளில் பிரச்னைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக மதுவை நாடுகிறார்கள். காலப்போக்கில் அப்பிரச்னை மறந்தோ, மறைந்தோ போகும். மதுவே பிரச்னையாகி நிற்கும்.

உறவுகள் மற்றும் நட்பு வட்டத்தை பேணுவது பிரச்னைகளைச் சமாளிக்க கை கொடுக்கும். மதுவினால் ஏற்படும் உறவுச்சிக்கல்களை சரிசெய்யவும் மது விடுதலே ஒரே வழி. ஓய்வாக இருக்கும் போதும், விடுமுறை நாட்களிலும் மது ஆசை தூண்டப்படக்கூடும். கிடைத்ததற்கரிய அந்த நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவழிப்பது எனச் சிந்தியுங்கள். நல்ல பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுவது மாயையிலிருந்து விடுபட உதவும். குழந்தைகளோடு நேரம் செலவிடுவதைப் போல மகத்தான மாற்று வேறில்லை.

எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்னைக்குப் பயந்து மதுவை நாடுவதால் பயன் ஏதும் இல்லை என்கிற கசப்பு உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். குடி என்பது குடிப்பவரைத் தாண்டி குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் குடுகுடு தாத்தா வரை அத்தனை பேரையும் பாதிக்கிறது என்பது அறிந்ததே. ஒரு குடும்பத்தில் கணவனோ, மகனோ குடிப்பதற்கு மனைவியோ, தாயோ நிச்சயமாகக் காரணமாக இருக்க முடியாது.

அதனால் குடும்ப உறுப்பினர்கள் தங்களை ஒரு குறையாக எண்ண வேண்டிய அவசியம் இல்லை. குடியின் காரணமாக அவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே யதார்த்தம். ஆண்மைக்குறைவு போன்ற குடிநோய் காரணமான இயலாமைகள் ஒரு பக்கம், குடும்ப வன்முறை, பலாத்காரம் போன்ற விருப்பமில்லா உறவுப் பிரச்னைகள் இன்னொரு பக்கம் என எத்திசை சிக்கலுக்கும் குடி காரணமாகிறது. இதனால் குடும்பத்தினருக்கு பதற்றமும் மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மன அழுத்தமோ மிக அதிகமாகிறது. தொடர்ச்சியாக மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். அது மட்டுமல்ல... குழந்தைகள் உள்பட எல்லோருக்குமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மது சார் சிக்கல்களுக்கு மது அருந்துபவரே தீர்வை நாடுவதுதான் முழுமையாக இருக்கும். எனினும் அவருக்கு குடும்பத்தினர் உதவ முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர் / நண்பர் அபாய கட்டத்தில் இருக்கிறாரா? உடல், மனம், சமூகம் இம்மூன்றுக்கும் குழப்பம் விளைவிக்கும் அளவுக்கு ஒருவர் மது அருந்துகிறார் எனில், அவர் அபாய கட்டத்தில் இருக்கிறார் என்றே பொருள்.

அடிக்கடி வாய்ப்புண் அல்லது வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகிறாரா? அதற்குக் குடியே காரணமாக இருக்கலாம். காயங்கள், வயிற்றில் ரத்தக்கசிவு, மஞ்சள் காமாலை, பாலுறவுத் தொற்று போன்றவற்றுக்கும் அதீத குடி காரணமாகலாம். குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறவர்கள், மனைவி விருப்பமின்றி உறவுப் பலாத்காரத்தில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் குடியால் பாதிக்கப்பட்டவர்களே. மனநலம் குன்றிய நிலையில் இருக்கிறவர்களுக்கும் மது காரணமாக இருக்கக்கூடும்.

எப்படி உதவ முடியும்? கோபம், எரிச்சல் போன்றவை உதவாது. ஆறுதலாக இருப்பதன் மூலமே, குடியிலிருந்து விடுபடச் செய்ய முடியும். ஆகவே, அவரது தனிமையை தவிர்க்கும் வகையிலும் செயல்படுங்கள். சிலர் உணவுக்குப் பின் மது அருந்த மாட்டார்கள். அதனால் கூடிய மட்டிலும் சீக்கிரமாகவே அவரை உணவருந்தச் செய்து விடுங்கள். குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் செல்லும்போது, நீங்களும் உடன் செல்லுங்கள்.

டாக்டரிடம் இது பற்றி கூறுங்கள். உண்மை நிலை அறிந்தால் மட்டுமே சரியான சிகிச்சையை பெற முடியும். குடும்பத்தினரின் ஆதரவு, மனநல ஆலோசனை, போதை நிறுத்தப் பின் விளைவுக்குச் சிகிச்சை, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்ற ஆதரவுக் குழுக்களில் இணையச் செய்தல் ஆகியவை நிச்சயம் பலன் தரும்.

அதிர்ச்சி டேட்டா

மது மற்றும் புகையிலையை தவிர்ப்பதன் மூலமாகவே 30 சதவிகித கேன்சர் நோய்களை தவிர்க்க முடியும். 2013ம் ஆண்டு வரை ரஷ்யாவில் பியர் என்பது மதுபானமாகவே கருதப்படவில்லை. அங்கு மட்டுமே ஆண்டுக்கு 5 லட்சம் உயிர்கள் மதுசார் நோய்கள் மற்றும் பிரச்னைகளால் மடிகின்றன. ஆல்கஹால் விஷமாவதால், அமெரிக்காவில் தினமும் 6 பேர் இறக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024