Thursday, November 3, 2016

இடிக்கப்பட்டது மெளலிவாக்கம்.... மிச்சமிருக்கும் கட்டடங்கள் எத்தனை...? என்ன சொல்கிறது சட்டம்?



விதிமீறல்... அத்துமீறல்... முறைகேடுகள்... இவற்றின் பின்னணியில்தான், சென்னை மாநகர், கான்கிரீட் காடாக வளர்ந்து நிற்கிறது. அதிகாரம், அரசியல் வியாபாரத்தோடு சென்னையில் சொந்தமாக இடமும், கட்டடமும் வைத்துள்ள சாதாரண குடிமகன்களும் கூட்டுச்சேர்ந்து அரங்கேற்றிய அராஜகத்தின் அடையாளங்களே, மாநகரம் முழுவதும் ஓங்கி உயர்ந்து நிற்கும் வரைமுறையற்ற கட்டடங்கள். சென்னை மாநரின் கடும் போக்குவரத்து நெரிசல், சுகாதாரக்கேடு, மிக காஸ்ட்லியான ஏரியாக்கள்கூட இரண்டு நாட்கள் மழையில் மூழ்கிப்போகும் நிலை என்று மாநகரின் இன்றைய மூச்சுத்திணறலுக்கு இந்த வரைமுறையற்ற கட்டடங்களே காரணம். 1990-களுக்குப் பிறகு சென்னைக்கு ஏற்பட்ட இந்த நிலை, 2000-த்துக்குப் பிறகு தமிழகத்தின் முக்கிய மாநகரங்களுக்கு நேர்ந்தது.

இதை மிகமிகத் தாமதமாக உணர்ந்துகொண்ட தமிழக அரசாங்கம் 1999-ம் ஆண்டு, ‘வரைமுறையற்ற கட்டடங்கள் மறுவரையறை’ என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் விதிமுறைகளை மீறிக் கட்டி... அதில் சிக்கியவர்கள், இந்தச் சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “சட்டம் சரிதான்... ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் ஓர் ஒழுங்குமுறை வேண்டும்” என்று சொல்லி சில வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தச் சொன்னது. அதன்படி, ‘சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டியின் கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

தமிழக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. அதையடுத்து, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், அதன் கூட்டம் மாதம் ஒருமுறை நடக்கவில்லை என்று அந்தக் கமிட்டி உறுப்பினரான தேவசகாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதுபோல, தமிழகத்தில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக நகரமைப்புச் சட்டம் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. அது செல்லாது என்று ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்துப் புதிய விதிகளைப் பரிந்துரைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அந்தக் குழுவும் புதிய விதிகளை வகுத்துத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்த வழக்கும், சென்னை தி.நகர் பகுதியில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பான வழக்கும் கடந்த நவம்பர் 1-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்த, இந்த நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், அவை எதுவும் பின்பற்றப்படவில்லை.

அசம்பாவித சம்பவங்கள் நடந்தபின்பே நடவடிக்கை எடுப்போம் என்ற மனநிலையில் அரசு அதிகாரிகள் இருக்கின்றனர். ஒருபுறம், அரசாங்கம் கொள்கைரீதியாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. மறுபுறம், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் பின்பற்றுவதில்லை. விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது சி.எம்.டி.ஏ., எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர். அதன்பிறகு, “நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கூட்ட வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத சி.எம்.டி.ஏ-வின் உறுப்பினர் செயலர், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்



தீயணைப்பு வசதிகள் இல்லாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவைப் பொறுத்தமட்டில், தீ தடுப்புப் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் குறித்து ஆய்வுசெய்து, அந்த விதமான வசதிகள் இல்லாத கட்டடங்கள் பாதுகாப்பற்ற கட்டடங்கள் என்பதற்கான எச்சரிக்கை நோட்டீஸை ஒட்டவேண்டும். அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்குத் தள்ளி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டத்தின் சந்துபொந்துகள்... மவுலிவாக்கம் ஒரு சாட்சி!

தமிழகம் முழுவதும் உள்ள விதிமுறை மீறிய கட்டடங்களை வரைமுறைப்படுத்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், அதையே 17 ஆண்டுகளாகத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லையா? அதுவும் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதைச் செய்ய முடியவில்லையா என்று ஆச்சர்யப்படுவதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், நம்முடைய சிஸ்டம் அப்படி. மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து 61 பேர் இறந்தபிறகும்கூட, பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டடத்தை இடிக்க 2 ஆண்டுகள் ஆகியிருக்கிறது தமிழக அரசுக்கு. அரசின் மெத்தனம் ஒருபக்கம் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் வாய்தாக்களும் நிலுவையில் இருந்தது மற்றொரு காரணம்.

தமிழகத்தில் உள்ள விதிமீறிய கட்டடங்களை நெறிப்படுத்த, சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் இழுத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், மவுலிவாக்கம் கட்டட விபத்து ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் அருகருகே, கட்டப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு கட்டடங்களில் ஓன்று பூமிக்குள் புதைந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 61 பேர் மரணமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், வட இந்திய கட்டடத் தொழிலாளிகள். இதையடுத்து, நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் கொஞ்சம் சீரியஸாகக் கையில் எடுத்தது. மவுலிவாக்கம் கட்டடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு கட்டடத்தை இடிக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவை எதிர்த்து, கட்டட உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனார் கட்டட உரிமையாளர். அங்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, ‘இறுதியில் கலெக்டரின் உத்தரவும், அதை உறுதிப்படுத்திய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் சரியே என்று சொல்லி, கட்டடத்தை இடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதற்கே இரண்டரை ஆண்டுகள் இழுத்துவிட்டன. ஒரு கட்டடத்தை இடிக்கவே இத்தனை ஆண்டுகள் என்றால், தமிழகம் முழுவதும் உள்ள விதிமுறைகளை மீறிய கட்டடங்களை வரைமுறைப்படுத்துவது என்றால், அது சாதாரண காரியமா? ஏனென்றால், நம்முடைய சிஸ்டம் அப்படி!


ஜோ.ஸ்டாலின்

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods