Thursday, November 3, 2016

துப்பாக்கி ரவைகள் நெஞ்சைத் துளைக்கும் முன்' இந்திராவின் ஆசை!



“இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது. என்னைச் சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்துவிட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.”






முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள், 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு,அன்றிரவு ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமாக தன் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசத்தொடங்கினாலும், இறுதியாக அதிலிருந்து விலகி, புதிதாகப் பேசிய உணர்ச்சிமயமான வார்த்தைகள் இவை.

இந்திரா காந்தி இவ்வாறு பேசியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாநில கவர்னர், “வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்” என்று இந்திராவிடம் கூறியபோது, “நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்” என்று இந்திரா காந்தி பதிலளித்தார்.

மறுநாள். நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கொடூரமான இரண்டாவது படுகொலையாக, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி, அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு, இந்திரா காந்தி மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறையின் இயக்குநர் கருத்து தெரிவித்திருந்தும், அவர் அதை ஏற்கவில்லை.




1984 அக்டோபர் 31-ம் தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்துக்குச் செல்ல இடையில் இருந்த தூரம் சுமார் 300 அடி. அதைக் காரிலேயே கடந்திருக்க முடியும் என்றாலும், வந்திருந்தவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி நடந்தே சென்றார். அப்போது, புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங், சத்வந்த்சிங் ஆகியோர் நின்றிருந்தனர்.

பியாந்த்சிங் தன் கைத்துப் பாக்கியால், இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டார். அதே நேரத்தில், சத்வந்த்சிங் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன.

ரத்தம் பெருக்கெடுக்க உயிரிழந்த இந்திரா காந்தி, பிறப்பு முதலே சிறப்புப் பெற்றவர். அப்போது, முதல் உலகப் போர் முடிந்திருந்த சமயம். இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியிருந்த காலம். ஜவஹர்லால் நேரு - கமலா நேரு தம்பதியின் மகளாக, புகழ்பெற்ற குடும்பத்தில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத்தில், 1917 நவம்பர் 19ல் பிறந்தார் இந்திரா பிரியதர்ஷினி.

பெரும் பணமும் புகழும் கொண்ட குடும்பம் என்றாலும் தாத்தா, அப்பா, அம்மா என இந்திராவின் குடும்பத்தினர் அனைவருமே சுதந்திரச் சிந்தனைகளோடு வாழ்ந்தவர்கள். அதனால், அதிக காலத்தை சிறையிலேயே அவர்கள் கழித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தின் மற்ற பெண்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் தங்கிய அனுபவம், இந்திரா காந்தியின் இளைமைக் காலத்தில் அவரை வாட்டியது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மகாத்மா காந்தி, இந்திராவின் குடும்பத்துடன் சுதந்திரப் போராட்டம் குறித்து அடிக்கடி பேசிவந்ததும், போராட்ட காலத்தில் மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாகப் பார்த்துவந்ததும், இந்திராவின் நெஞ்சில் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எழுப்பின.

ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திராவோடு இருந்து அவருக்குக் கல்வி அறிவூட்ட முடியவில்லை என்றாலும், சிறையில் இருந்துகொண்டே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளையும், உயிர்களின் தோற்றம், கண்டங்கள் பிறப்பு, பேரரசுகள், உலகப் போர், அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகில் குறிப்பிடத்தக்க மனிதர்கள், தொழிற் புரட்சி, பொருளாதாரம், இயற்கை வளம் என எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித்தர முடியாத விஷயங்களைத் தன் கடிதங்களின் மூலம் தன் மகளுக்குக் கற்பித்தார். லால் பகதூர் சாஸ்திரியின் மந்திரி சபையில் அமைச்சராக இருந்து, தன் அரசியல் பணியைச் சிறப்பாக்கினார், இந்திரா. தன் தந்தையுடன் பல நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவற்றையெல்லாம் பிற்காலத்தில், தன் அரசியல் ஸ்திரத்தன்மை வெளிப்பாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டார்.

கோடிகளைக் குவிக்கும் அரசியல் செய்யவில்லை இந்திரா காந்தி. தன்னை, தன் குடும்பத்தையே நாட்டுக்காகத் தியாகம் செய்தவர். அதனால்தான், நேருவின் மறைவுக்குப் பின் இந்திராவை பிரதமராக்கினார், கர்மவீரர் காமராஜர்.

தேசிய ஒருமைப்பாட்டை நேசித்தவர் இந்திரா காந்தி. தன் ஆட்சிக்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், ஏழை எளிய மக்களின் நிலை உயரவும் பாடுபட்டார். நம்மை எதிரியாக நினைத்த நாடுகளையோ, உள்நாட்டிலே தன்னை எதிர்த்தவர்களைக் கண்டோ, ஒருபோதும் அஞ்சாதவர்.

இந்திரா சராசரி அரசியல்வாதி அல்ல. இந்தியாவின் வரலாறும் அன்னை இந்திராவின் வரலாறும் ஒன்று கலந்தது. வரலாறாக நிலைத்த நெஞ்சுரம் மிக்க அன்னையை நினைவில் வைப்போம்!

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods