Thursday, November 3, 2016

தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம்


சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் நேற்று மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உள்ள தூண்களில் துளையிடப்பட்டு வெடிமருந்துகள் வைக்கப்பட்டன. இதற்காக திருப்பூரில் இருந்து மேக்லிங்க் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டடத்தை இடிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அதிகாரிகள் முன்னிலையில் செய்தனர். இடிப்பதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியவுடன் 5வது தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. அடுத்த சில நொடிகளிலேயே முதல்தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து அந்த பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்து.

கட்டடம் இடிக்கும் பணி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இது குறித்து கட்டடம் இடிப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறுகையில், "இந்த கட்டடத்தின் வரைபடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சில நாட்களாக ஆய்வு செய்தோம். எந்த தூண்களின் பிடிமானத்தில் கட்டடத்தை தாங்கும் சக்தியை கண்டறிந்தோம். அடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடத்தை அப்படியே சீட்டுக்கட்டு சரிவது போல இடிக்க ஏற்பாடு செய்தோம். இதனால் அருகில் உள்ள எந்த கட்டடங்களுக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். கண்மூடி கண்திறக்கும் நொடிக்குள் 11 மாடி கட்டடமும் இடித்துத் தள்ளப்பட்டது" என்றார்.

3 நொடிகளுக்குள் 11 மாடி அடுக்குமாடி கட்டடமும் இடிக்கப்பட்டது. கட்டடம் தகர்க்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு மேலாக, அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் காணப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்த மக்கள், கட்டடம் தகர்க்கப்பட்டதற்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அதிகாரிகள், மற்றும் போலீசார் இரவு முழுவது, அந்தப் பகுதியிலேயே முகாம் இட்டிருந்தனர்.


எஸ்.மகேஷ், ந.பா.சேதுராமன்
வீடியோ/படம்: ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024