Friday, November 4, 2016

பியூன் அம்மாவின் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கலெக்டர், டாக்டர், எஞ்சினியர் மகன்கள்!

By DIN  |   Last Updated on : 03rd November 2016 

ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கார்க் நகரில் பியூனாகப் பணியாற்றி பணி நிறைவு பெறவிருந்த சுமித்ரா தேவியின் வாழ்வில் கடந்த திங்கள் (1.10.2016) ஒரு உன்னதமான நாளாகி விட்டது. பணி நிறைவு பெறுவதென்பது அரசுத் துறை, தனியார் துறை எனும் வேறுபாடுகளின்றி எல்லோருக்கும் பொதுவான விசயம் தானே! இதிலென்ன உன்னதம் வந்தது? என்று கேட்கலாம். சுமித்ரா தேவியால் மட்டும் தான் அந்த நாளின் பரிபூரணத்துவத்தை முற்றிலுமாக உணர முடியும். ஏனெனில் சுமித்ரா ஏனைய பியூன்களைப் போல சாதரணமானவர் அல்லவே! பியூனாக ஒரு பெண் பணி நிறைவு பெறுவதென்பது மிக மிகச் சாதாரணமான விசயம் தான்.

ஆனால் கடின உழைப்பும், போராட்ட வாழ்வும் கொண்ட சுமித்ராவை நன்கறிந்த ராம்கார்க் வாசிகளுக்கு அது ஒரு சாதாரண நாளாகத் தெரியவில்லை தான். ஏனெனில் அந்த நாள் அந்தத் தாயின் பல வருடக் கனவு நனவான தருணம் ஆயிற்றே! பியூன் சுமித்ராவின் மூன்று மகன்களும் கலெக்டராகவும், டாக்டராகவும், எஞ்சினியராகவும் வெற்றிகரமாகப் படித்துப் பட்டம் பெற்று பணி புரிவதோடு, தங்களது தாயின் பணி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அம்மாவைக் கவுரவப் படுத்தி இருக்கிறார்கள்.

மூத்த மகன் வீரேந்திரக் குமார் ரயில்வே எஞ்சினியர்., இரண்டாவது மகன் தீரேந்திர குமார் ஒரு டாக்டர், கடைக்குட்டி மகேந்திர குமார் பிகார் சிவான் மாவட்ட கலெக்டர். மகன்கள் இப்படி குரூப் ஒன் அலுவலர்களாக கடின உழைப்பில் கலக்கிக் கொண்டிருந்த போதும் சுமித்ரா தேவி தனது பியூன் உத்யோகத்தை கைவிடவில்லை. பணி நிறைவு பெறும் கடைசி நாள் வரை பொறுப்பாகவும், பொறுமையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து பிற பெண்களுக்கு நல்ல முன்மாதிரியாகவே செயல்பட்டுள்ளார் என ’டைனிக் ஜகரான்’ ஹிந்தி தினசரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கள் அன்று தனது மூன்று மகன்களும் கலந்து கொண்டு சிறப்பித்த பணி நிறைவு விழாவில் சுமித்ரா தேவி மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். அம்மாவுக்கு பொன்னாடை போர்த்தி மலர் செண்டு அளித்து பாராட்டிப் பேசிய மூத்த மகன் வீரேந்திர குமார், ‘தனது தாயின் கடின உழைப்புக்கும், போராட்ட குணத்துக்கும் கிடைத்த வெற்றியே தங்களது சிறப்பான கல்வி மற்றும் உயர்பதவிகள்’ என்று குறிப்பிட்டார். மேலும் தங்களது தாயாரின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்த்து தான் மகன்களான தாங்கள் மூவரும் குடும்ப நிலையை உணர்ந்து கொண்டதாகவும், அந்த உணர்வுகளே தங்களது சிறப்பான கல்விக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மனித வாழ்வில் செய்ய முடியாத கடுமையான வேலை என்று எதுவும் இல்லையென்றும், முயற்சியும் தொடர்ந்த பயிற்சியும் இருந்தால் எல்லாமே எளிதான வேலை தான். இதை உணர்ந்து செயல்பட்டதே தங்களது குடும்பத்தின் வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods