Friday, November 4, 2016


கெளரவப் பிரச்னை!
By ஆசிரியர் | Last Updated on : 03rd November 2016 12:48 AM | அ+அ அ- |


டாடா குழும நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி திடீரென அகற்றப்பட்டது, கார்ப்பரேட் உலகில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சாமானிய நடுத்தர வர்க்கத்தினர்கூடப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது வழக்கமாகிவிட்ட சூழலில், இந்தியாவின் தலைசிறந்த, கெளரவமான மூத்த கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இதன் பின்னணியில், மிகப்பெரிய நிர்வாகக் குழப்பமோ, சைரஸ் மிஸ்திரியின் செயல்பாட்டில் குறைபாடோ காரணமாக இருப்பதாகத் தெரியவில்லை. டாடா குழுமத்தின் தலைவர் என்கிற முறையில், எதிர்பார்த்ததுபோல செயல்படாத சில குழும நிறுவனங்களைக் கைகழுவிவிடலாம் என்கிற சைரஸ் மிஸ்திரியின் சிந்தனைதான் அவரைப் பதவியிலிருந்து அகற்றும் முடிவுக்கு முன்னாள் தலைவரும் "டாடா' குடும்பத்து வாரிசுமான ரத்தன் டாடாவைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. தனது கெளரவப் பிரச்னையாக அதை அவர் எடுத்துக் கொண்டார் என்றும், குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் லாபத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற சைரஸ் மிஸ்திரியின் கொள்கையில் அவர் உடன்படவில்லை என்றும் தெரிகிறது.

பழைய இரும்புகளைத் தெருத் தெருவாகச் சென்று வாங்கி விற்றுக் கொண்டிருந்த ஜாம்ஷெட்ஜி டாடாவால் 1868-இல் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம், தனது 148 ஆண்டு பயணத்தில் அடைந்திருக்கும் அபார வளர்ச்சியைப் பார்த்து மேலைநாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களே ஆச்சரியப்படுகின்றன. சர்வதேச அளவில் முதன்மையான இடத்தை வகிக்கும் இந்தியப் பன்னாட்டு வணிகக் குழுமமாக டாடா நிறுவனம்தான் இருந்து வருகிறது.

கடந்த நிதியாண்டின் புள்ளிவிவரப்படி டாடா நிறுவனத்தின் மொத்த வியாபார அளவு 103 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி). ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் டாடா நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். நூற்றுக்கும் அதிகமான நாடுகள், ஆறு கண்டங்கள் என்று வியாபித்திருக்கும் இந்தியாவின் பெருமைக்குரிய டாடா நிறுவனம், இப்போதும் டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

டாடா குழும நிறுவனங்கள் அனைத்தின் உடைமையும் டாடா சன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 66% தர்ம அறக்கட்டளைகளைச் சார்ந்தவை. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் தனித்தனி இயக்குநர்கள் குழுவால் சுதந்திரமாக நிர்வகிக்கப்படுகின்றன. 29 நிறுவனங்களை உள்ளடக்கியதுதான் டாடா குழுமம். டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா பவர், டாடா கெமிகல்ஸ், டாடா க்ளோபல் பெவரேஜஸ், டாடா டெலி சர்வீசஸ், டைட்டன் வாட்ச், டாடா கம்யூனிகேஷன்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் என்று இந்தக் குழும நிறுவனங்களின் பட்டியல் நீளுகிறது.

டாடா கம்யூனிகேஷன்ஸ்தான் உலக அளவிலான முதன்மையான "வாய்ஸ் ப்ரொவைடர்'; டாடா மோட்டார்ஸ், உலகின் முதல் பத்து சரக்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று; உலகின் 15 சிறந்த இரும்பு உருக்குத் தயாரிப்புகளில் டாடா ஸ்டீல்ஸ் ஒன்று; லாப அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்; டாடா க்ளோபல் பெவரேஜஸ்தான் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை தயாரிப்பாளர்கள்; மனித வாழ்வில் எந்தவொரு செயல்பாட்டை எடுத்துக் கொண்டாலும் அதில் டாடா நிறுவனத்தின் முத்திரை இல்லாமல் இருக்காது என்கிற அளவில் புகழ்பெற்ற நிறுவனம் டாடா குழுமம்.
ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது எடுத்த சில முடிவுகள் லாபகரமாக இல்லை என்பதுதான் உண்மை. அதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கமும் ஒரு காரணம். பிரிட்டிஷ்காரர்களே அதிர்ச்சி அடையும் விதத்தில் ஜாக்குவார் லாண்ட்ரோவர் மோட்டார் நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து சர்வதேச இரும்பு உருக்கு நிறுவனமான "கோரஸ்' நிறுவனத்தையும் கைப்பற்றியது. இந்த இரண்டாவது முடிவு லாபகரமானதாக இல்லை. அதேபோல, மிகப்பெரிய விளம்பரத்துடன் உருவாக்கப்பட்ட லட்சம் ரூபாய் கார்களான "நானோ' வெற்றி பெறவும் இல்லை, லட்ச ரூபாயில் தயாரிக்கவும் இயலவில்லை.

இதன் பின்னணியில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. 2008-க்கு முன்பு வெளிநாடுகளில் தங்களது நிறுவனங்களை ஏற்படுத்திப் பன்னாட்டு நிறுவனங்களாக முற்பட்ட "டாடா'வைப் போன்ற பல முக்கிய நிறுவனங்களும், சர்வதேச பொருளாதாரத் தேக்கத்தாலும், பின்னடைவாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சைரஸ் மிஸ்திரி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களைக் கை கழுவ முற்பட்டதும், அது "டாடா' குழுமத்தின் கெளரவத்தை பாதிக்கும் என்பதால் ரத்தன் டாடா அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியதும் நிகழ்ந்திருக்கிறது.
லட்சக்கணக்கானவர்களின் பங்குகள் முதலீடாக இருப்பதால், கார்ப்பரேட் நிறுவன நிகழ்வுகளைத் தனியார் நிறுவன நிகழ்வுகளாக நாம் ஒதுக்கிவிட முடியாது. இதில் சராசரி இந்தியனின் சேமிப்பு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. "டாடா' குழுமத்தின் பிரச்னைகள் பொது வெளியில் விவாதமாகாமல் பாதுகாத்துத் தலைமை மாற்றம் நிகழ வேண்டும். இந்தப் பிரச்னை தெருச் சண்டையாகவோ, நீதிமன்ற வழக்காகவோ மாறாமல் இருப்பதுதான் முதலீட்டாளர்களுக்கு நல்லது!

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods