Friday, November 4, 2016

அழைப்பு வாகன ஆபத்து

By எஸ். ரவீந்திரன் 

அண்மைக்காலமாக வாடகைக் கார்களை இயக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்தனை அழைப்பு வாகனச் சேவை நிறுவனங்கள் இல்லை. இப்போதுதான் அவை பெருகியுள்ளன.
போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் பண்ணும் களேபரம் ஏராளம். கிலோமீட்டருக்கு ரூ.7 முதல் ரூ.10 வரையில் வரம்பு வைத்துக் கொண்டு வரம்பு மீறிச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.
அழைத்த சில நிமிடங்களில் இவர்களின் வாகனங்கள் வந்துவிடும் என்பதால் தற்போது சொந்த வாகனங்கள் வைத்திருக்கும் பலர்கூட இவர்களை அணுகுகின்றனர்.

இப்படி வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள அழைப்பு வாகனச் சேவை நிறுவனங்களின் குளறுபடிகள் அவற்றின் மீது நம்பிக்கை இழக்க வைக்கின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் இது போன்ற அழைப்பு வாகனங்களை நம்பி பயணிப்பதை பெரும்பாலோர் தவிர்த்து வருகின்றனர். காரணம் தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் அழைப்பு வாகன ஓட்டுநர்கள் சிலர், பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதுதான்.

ஒரு சிறந்த நிறுவனத்தின் வாகனத்தை இயக்குபவர்கள் முழு நம்பிக்கையுடனும், பயணிகளின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும். ஆனால் இதை மறந்து விட்டு தவறான வழிகளைப் பின்பற்றி இத் தொழிலுக்கே கேடு விளைவித்து வருகின்றனர்.
சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்வதற்காக இந்த நிறுவன வாகனத்தைத் தொடர்புகொண்ட பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவத்தை முகநூலில் பதிவிட்டார்.

அதன்பிறகே வாகன ஓட்டுநர்களின் வக்கிரபுத்தி பற்றி ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன. இதேபோல பல சம்பவங்கள் கவனத்துக்கு வராமலேயே நடந்துள்ளன.

பொதுவாக வாடகைக்கு வாகனங்களை அமர்த்துவது என்பது ரொம்பவும் கவனமாகக் கையாளவேண்டிய விஷயமாகும். கிராமப்புறங்களில் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பார்கள். கோயில் விழாக்கள், சுற்றுலா செல்லும்போது பாதுகாப்பு அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வார்கள்.
தமக்கு வரும் ஓட்டுநர் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

பொதுவாக தனியார் வாடகை வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள் தமக்கென பிரத்யேக வாடிக்கையாளர்களை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு சிறந்த முறையில் சேவை அளித்து நற்பெயரைச் சம்பாதித்திருப்பார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது எனலாம். இத்தனைக்கும் ஊழியர்களின் பின்புலம், செயல்பாட்டை நன்கு அறிந்த பின்பே நிர்வாகம் அவர்களை வேலைக்கு அமர்த்துகிறது. அப்படி இருந்தும் இது போன்ற தவறுகள் நிகழ்கின்றன.

மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வாகன விதிகளை மீறல்,விபத்துகளை ஏற்படுத்தல் போன்றவற்றை மனதில் வைத்தே இந் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

வாடகைக்கு வாகனங்களை ஓட்டும் நபர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவ்வப்போது மாட்டிக் கொள்கின்றனர். போதை மருந்து, மது வகைகள் கடத்துதல், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றுக்கும் இவ்வாகனங்களை சிலர் பயன்படுத்தி அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டிருப்பதையும் காண்கிறோம்.

இது ஒருபுறமிருக்க சவாரிக்கு அழைத்துச் செல்லப்படும் வாகனங்கள் கடத்தப்படுவதும், ஓட்டுநரை கொலை செய்வதும் நடந்து வருகின்றன. எனவே இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதிரடி நடவடிக்கைகள் அவசியம்.
இரவில் சவாரிக்குச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை. இதற்காக நவீன கருவிகள் வந்துள்ளன. அதை கட்டாயம் வாகனத்தில் பொருத்துவதுடன் பயணி இறங்கும் வரையில் திரையில் நடவடிக்கைகளை கண்காணிப்பதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கலாம்.

மேலும் அவசர அழைப்புக்காக வாகனத்திலேயே வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆளில்லாமலே வாகனங்கள் இயக்கப்படும் இக் காலகட்டத்தில் இவையெல்லாம் சாதாரண விஷயங்கள்தான்.
வாகனம் ஓட்டுபவருடன் ஒரு உதவியாளரையும் நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். வாகனங்கள் செல்லும் இடம், நபர்களின் விவரத்தை மின்அஞ்சல் வழியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இரவில் அழைப்பு வாகனங்களை நம்பி நீண்ட தொலைவு பயணிப்பதையும், தனியாக செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வேறு வழியின்றி அவசரமாக செல்ல நேரிட்டால் காவல்துறை உதவியை நாடுவதும் நலமே.
வாகனத்தை இயக்குவோர் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதை மறு பரிசீலனை செய்யலாம். அழைப்பு வாகனச் சேவை மூலம் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024