சென்னை:
அவர் உலகின் மிக மெதுவான கேஷியர் இல்லை - ஒரு வைரல் வீடியோவின் உண்மை முகம்!
'உலகின் மிக மெதுவான கேஷியர்' என்ற பெயருடன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றின் பின் உள்ள நெஞ்சை உருக்கும் நிஜம் வெளிவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் அண்மையில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. அந்த வீடியோவில் வங்கி பெண் ஊழியர் ஒருவர் மிகவும் மெதுவாக வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய இணைய தளத்தில் கருத்து தெரிவித்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன் மிக கடுமையான வசைச் சொற்களைக்கொண்டு அப்பெண்ணை விமர்சித்திருந்தார். ஜெயமோகனின் இந்த கருத்துக்கு சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து அந்த கருத்தை தம்முடைய இணையப் பக்கத்தில் இருந்து ஜெயமோகன் நீக்கி விட்டார். மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதனிடையே அந்த வீடியோவில் இடம் பெற்ற வங்கி ஊழியரின் உண்மை நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவத்சவா தம்முடைய முகநூல் பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ளதாவது:
வீடியோவில் மெதுவாக வேலை செய்யும் ஊழியர் பெயர் பிரேம்லதா ஷிண்டே. புனேவில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார். கணவரை இழந்த அவர் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார். அவரது மகன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். பிரேம்லதா ஷிண்டேவுக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. ஒருமுறை பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டவர். வீடியோவில் இடம்பெற்று காட்சியானது சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய நாட்களில் எடுக்கப்பட்டது. இத்தனைக்கும் பிரேம்லதா ஷிண்டேவுக்கு பணிக்கு வராமலேயே முழு சம்பளத்தையும் பெரும் அளவுக்கு மருத்துவ விடுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது வீட்டில் இருந்து கொண்டே அவர் ஊதியத்தைப் பெற முடியும். ஆனால் பிரேம்லதா ஷிண்டேவோ ஆனால் அதை விடுத்து ஓய்வு பெறும்போது கண்ணியத்துடனும் நேர்மையுடனும் ஓய்வு பெற நினைத்ததால் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வேலைக்கு திரும்பியிருக்கிறார்.
தம்முடைய சிகிச்சைக்கான பணத்தை தாமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட லட்சக்கணக்கான பெண்களில் ஒருவராகத்தான் பிரேம்லதா ஷிண்டே இருக்கிறார். அவரை விமர்சித்து, கேலி செய்யும் பதிவு போட்டதற்கு பதிலாக அவரது உண்மை நிலையை சொல்லி பாராட்டும் வீடியோவை நாம் போட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு குந்தன் ஸ்ரீவத்சவாவின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment