Tuesday, November 1, 2016


பெண்மைக்கு இழுக்கு!

By ஆசிரியர் | Last Updated on : 01st November 2016 01:25 AM

இந்தியாவில் ஏதாவது ஒன்றுக்காக நாம் மகிழ்ச்சி அடையும்போது, அதன் மறுபக்கம் சோகத்தை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. கடந்த மாதம் உலக மக்கள்தொகை குறித்த உலக வங்கியின் அறிக்கை ஒன்று, நாம் ஆறுதல் அடையும் செய்தியை வெளியிட்டிருந்தது. கடந்த 40 ஆண்டுகளாக அரசு மேற்கொண்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றியடைந்திருப்பதுதான் அந்த ஆறுதலான செய்தி.
இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. அவசரநிலைக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு, 1977 முதல் சுகாதார ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மட்டுமே கடந்த 40 ஆண்டுகளாகக் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும்கூட, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் தங்களது குடும்பத்தை அமைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.

ஆனால், அது மட்டுமே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறதே தவிர, குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்வது கணவனா, மனைவியா என்பதைப் பார்க்கும்போது, அந்தத் தகவல் பெருமை சேர்ப்பதாக இல்லை. உலக வங்கியின் அறிக்கையைப் பார்த்த பிறகு, நமது மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிப்படுகின்றன.

தங்களைக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொள்பவர்களில் 98 விழுக்காட்டினர் பெண்களே தவிர ஆண்கள் அல்ல. 2015-16 நிதியாண்டில் இந்தியாவில் 41,41,502 குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 40,61,462 அறுவை சிகிச்சைகள் பெண்களுக்கு செய்யப்படும் "டியூபக்டமி' அறுவை சிகிச்சைகளாகும்.
பெண்களுக்கான "டியூபக்டமி'யைவிட, ஆண்களுக்கு செய்யப்படும் "வாசக்டமி' என்கிற கருத்தடை சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் இல்லாதது, பத்திரமானது. அதனால் ஆணுடைய இயல்பான இல்லற வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவும் செய்யாது. ஆனாலும், "வாசக்டமி' செய்து கொள்வதால் தங்களது ஆண்மைத்தனம் குறைந்துவிடுமோ என்கிற பயத்தில் ஆண்கள், தங்களது மனைவியரை பக்கவிளைவுகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடிய "டியூபக்டமி' கருத்தடை சிகிச்சைக்கு உட்படுத்திவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.
வழக்கம்போல, இந்திய ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்கள் இதற்கான விலையைத் தரவேண்டி இருக்கிறது. பல பெண்கள் "டியூபக்டமி' அறுவை சிகிச்சையில் மரணமடைந்திருக்கிறார்கள். 2014-இல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அரசு நடத்திய கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் 15 பெண்கள் இறந்த சம்பவத்திற்குப் பிறகும்கூட, நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்ட
தாகத் தெரியவில்லை. இதுபோன்ற அறுவை சிகிச்சை முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள்கூட இருப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை.
அதுமட்டுமல்ல, ஆண்களுக்கு செய்யப்படும் "வாசக்டமி' போல, பெண்களுக்கு செய்யப்படும் "டியூபக்டமி' அறுவை சிகிச்சை பாதுகாப்பனதும், வெற்றிகரமானதும் அல்ல. பல நிகழ்வுகளில், "டியூபக்டமி' அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பெண்கள் கருத்தரித்திருக்கிறார்கள். அவர்கள் கருக்கலைப்புக்குத் தங்களை உட்படுத்திக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். இதன் பக்க விளைவுகளும், அதனால் ஏற்படும் மன உளைச்சலும் பெண்களைக் கடுமையாக பாதிப்பதாகப் பல சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.கருத்தடை அறு
வை சிகிச்சை முகாம் என்பது போன்ற அவமானகரமான நிகழ்வு வேறு எதுவுமே இருக்க முடியாது. இதைவிடக் கேவலமாக மகளிரை அவமானப்படுத்த முடியாது. குறிப்பாக, ஏழை எளிய, படிப்பறிவு இல்லாத பெண்கள், வரிசையில் நிறுத்தப்பட்டு பதிவு செய்து கொள்ளும் அநாகரிகத்தை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. ஏதோ மிருகங்களுக்கு செய்யப்படுவதுபோல அவசர அவசரமாக அவர்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. பல நிகழ்வுகளில் அவர்களது ஒப்புதல் இல்லாமலேகூட அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை மகளிர் அமைப்புகள் தாக்கல் செய்தன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதுபோன்ற கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்துவதை அரசு முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுபோன்ற வற்புறுத்தல்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் இருத்தல் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
மகளிர் உரிமையையும், அவர்களது கெளரவத்தையும் பாதுகாத்து, சுகாதார ஊழியர்கள் மூலம் பெண்களுக்கு கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறுவை சிகிச்சை இல்லாமலே குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்குவதுதான் சரியாக இருக்கும். பெண் சுகாதார ஊழியர்களைப் போல, ஆண் சுகாதார ஊழியர்கள் மூலம் ஆண்கள் மத்தியில் "வாசக்டமி' குறித்த தேவையற்ற அச்சத்தை அகற்றி, கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அவர்களை உட்படுத்துவதில் அரசு முனைப்புக் காட்டுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
மக்கள்தொகைப் பெருக்க விகிதம் குறைவது மகிழ்ச்சியை அளித்தாலும், பெண்கள் மட்டுமே இதற்குக் காரணமாக இருப்பதும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை மாற்றியாக வேண்டும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024