Tuesday, November 1, 2016


கொண்டாடவா? சிந்திக்கவா?
By கே.எஸ். இராதாகிருஷ்ணன் | Last Updated on : 01st November 2016 01:25 AM +அ

தமிழ்நாடு மாநிலம் அமைந்து இன்று (நவம்பர் 1) 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா துக்கமா என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம்.
சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளையொட்டி ஆண்டுதோறும் அந்தந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்உலகம்' என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லையை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயர் வங்க தேசத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் இச்சூழ்நிலையை கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில், ஐக்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவ கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952 அக்டோபர் 13-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15 அன்று அவருடைய மரணத்தில் முடிந்தது. இது ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இதன் விளைவாக கர்நூலைத் தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான திருப்பதியை தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், "மெட்ராஸ் மனதே' என்ற கோஷம் எழுப்பி அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.

சென்னை மாகாணம், தமிழகம் உருவானதற்கு பின்னால் பலரின் தியாகங்கள் உள்ளன.
தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியையும், திருப்பதியையும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன.

வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி., கொ.மோ. ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ. தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி. சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரசார பணியையும் மேற்கொண்டார்.

மங்களங்கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று புகை வண்டி மூலமாக வட எல்லைப் பகுதியான திருப்பதிக்கு பயணப்பட்டார். ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தனர். கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் "வேங்கடத்தை விட மாட்டோம்' என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார்.

ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்னை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகளை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953 முதல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் நடைபெற்றன. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றினார். இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ம.பொ.சி. 1953 ஜூலை 3-ஆம் தேதி தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக அன்றைய தமிழக - ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்னை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக, தமிழக - ஆந்திர சட்டப்பேரவைகளில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ். மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறந்தது. மணிக்கு ம.பொ.சி.யின் ஆதரவு கிடைத்தது.
1954 ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரசாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச்சமயத்தில் திருவிதாங்கூர் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1950-இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து அன்றைய கொச்சி முதல்-அமைச்சரும் தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசி முடிவு எடுத்தனர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் நாங்கள் தயார் இல்லை எனவும் தெரிவித்தார்.
குஞ்சன் நாடார் போன்ற போராட்டத் தளபதிகள் இப்பிரச்னையில் அணிவகுத்தனர். குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீஸாரால் பிடிக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர்.

இதுபோன்று போராட்டங்களை நடத்தி வந்த சட்டநாத கரையாளர் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.

இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் - கொச்சி பகுதிகளை உள்ளடக்கிய கேரள முதல் - அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனனும் பேசியபின் தேவிக்குளம் - பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது.
அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கன்னியாகுமரி - செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

1956 நவம்பர் 1-ஆம் தேதி நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவில் செங்கோட்டையில் சி. சுப்பிரமணியன் பங்கேற்றார்.
நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ். மணியை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை பங்கேற்க வைத்து குமரி மாவட்ட இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். ஈ.வெ.ரா. பெரியார், அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.
தட்சணப்பிரதேசம் என்ற பெயரில் தக்கண பீடபூமி மாநிலங்களை ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கை எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் அமைச்சரான காமராஜரிடம் இருந்து எழுந்தது.
மொழிவாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். பெரியார், அண்ணா ஆகியோரின் குரல்கள் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.

கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ளன.
கொள்ளேகால், பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் நாம் இழந்து உள்ளோம். 1956-இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை கேரளத்தோடு முறைகேடாக சேர்த்துவிட்டனர்.ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி பகுதிகளை இழந்துவிட்டோம்.
இந்த நாள் கொண்டாடவா சிந்திக்கவா என்று புரியவில்லை.

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.










No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024