Monday, October 31, 2016

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா

By இரா. இராஜாராம்  |   Last Updated on : 31st October 2016 02:06 AM  |   
சுதந்திரமாக ஓடி விளையாடித்திரிய வேண்டிய இளவயது குழந்தைகளை காலுறை போட்டு இறுக்கமான ஷூ அணிவித்துக், கழுத்தை இறுக்கி டை கட்டிக் கனமான புத்தக மூட்டையை முதுகிலேற்றி ஆங்கில வழிப்பள்ளிக்கு அனுப்புவதே இன்றைய நாகரிகமாகிவிட்டது.
காலை எட்டு மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் குழந்தை மாலை வரை வகுப்பறையில் அடைபட்டு, ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு உடலும், மனமும் சோர்ந்து போய் வீடு திரும்புகிறது.
வீட்டிற்கு வந்த குழந்தைகளுக்கு பெற்றோர் தின்பண்டங்கள் ஏதாவது உண்ணக்கொடுத்து ட்யூஷனுக்கு அனுப்பி
விடுவது அல்லது வீட்டில் உட்காரவைத்துச் சலிப்பூட்டும் வீட்டுப் பாடங்களைச் செய்ய வைப்பது எனக் குழந்தைகள் வாழ்வு குதூகலமின்றி நெருக்கடிக்குள்ளாகிறது. பெரும்பாலான குழந்தைகளை மாலை நேரத்தில் கூட விளையாட அனுமதிப்பதில்லை.
அவர்களைப் புத்தகப் புழுவாக, மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக ஆக்கிடவே பெற்றோர்கள் பெரிதும் விரும்புகின்றனர். நகரங்களில் மட்டுமே இருந்த இந்த நிலை இப்போது கிராமங்களையும் தொற்றிக்கொண்டது.
ஐந்து வயது முடிந்த பின்பே பள்ளியில் சேர்ப்பது என்ற நடைமுறை இருக்கிறது. அதுவரையாவது குழந்தைகள் இயல்பாகச் சுற்றித்திரிந்து தன்னம்பிக்கையுடன் விளையாடி மகிழும்.
ஆனால் ஆங்கில மோகமும், பகட்டுக்கல்வியும் பச்சிளங் குழந்தைகைளக்கூட பள்ளியில் சேர்த்து விடும் அவல நிலைக்குத்தள்ளிவிட்டது. எந்தப்பள்ளியில் சேர்த்தாலும் ஐந்து வயது நிறைவடைந்த பின்புதான் சேர்த்திட வேண்டும் என்ற நடைமுறையை அரசு கொண்டு வரவேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளிலெல்லாம் ஐந்து வயது வரை புத்தகச் சுமையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக விளையாடி மகிழ்ந்திட வாய்ப்பளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் மிகுதியோ அதனைச் செய்திட வாய்ப்புகள் தரப்படுகின்றன.
படிப்படியாகக் கற்பதில் ஆர்வம் வரும்வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுக் கற்றலில் இனிமை ஏற்படுத்தப்படுகிறது. அதனால் அக்குழந்தைகள் கல்வியிலும், விளையாட்டிலும், சிறந்தோங்குவதோடு தன்னம்பிக்கையும், செயல்திறனும், மிக்கவர்களாகவும் உருவாக முடிகிறது.
பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு மைதானம் போதுமான அளவில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விளையாட்டினால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதோடு, இரவில் நல்ல உறக்கமும் வந்திடும்.
தன்னம்பிக்கையும், நட்புறவும் வளர்கிறது. ஒழுக்கக்கேடான பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கே உண்டு.
மெக்ஸிக்கோவிற்கு அருகில் உள்ள மிகச் சிறிய நாடு கவுதமாலா. இது போதைப்பொருட்கள் கடத்தல் மையமாக இருந்து வந்தது. அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த கம்டன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் விளையாட்டை அறிமுகம் செய்து அங்குள்ளவர்களை விளையாடும்படிச் செய்தனர்.
அதன்பிறகு அங்குப் பெருமளவில் குற்றங்கள் குறையத் தொடங்கி விட்டதையும் கண்டறிந்தனர். இதே கம்டன் கிரிக்கெட் கிளப் அமெரிக்காவிலும் போதைக்கு அடிமையானவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி நல்ல பலன் கண்டுள்ளது.
கபடி, கோகோ, போன்ற விளையாட்டுகள் நம் நாட்டின் கிராமப்பகுதிகளில் பரவலாக விளையாடப்படுகிறது. நகரங்களில் ஆங்காங்கு உள்ள மைதானங்களிலும், கிடைக்கும் இடங்களிலும் கிரிக்கெட், வாலிபால், பேட்மிண்டன், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தனர்.
தொலைக்காட்சி, செல்லிடப்பேசியின் வருகைக்குப் பின்பு வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவது பெருமளவில் குறைந்து, உட்கார்ந்த இடத்திலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், செல்லிடப்பேசியில் வீடியோ கேம் விளையாடுவதிலுமே தங்களை முடக்கிக்கொண்டு விடுகின்றனர்.
சிறுவர் முதல் பெரியவர் வரை தங்களுக்கேற்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து நாளும் விளையாடிடலாம். குறிப்பாகப் பள்ளி ஆசிரியர்கள் மாலையில் பள்ளி முடிந்து விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுடனும், சக ஆசிரியர்களுடனும் விளையாடிப் புத்துணர்வு பெறலாம். இதில் இரட்டைப்பலன் கிடைக்கின்றது.
காலை முதல் மாலை வரை வகுப்பறையிலேயே பாடம் நடத்திக் களைப்புற்ற ஆசிரியர்களுக்கு மைதானத்தில் விளையாடிச் சோர்வு நீங்கப்பெறுவதோடு, சக ஆசிரியர்களுடனான நட்புறவும் வளர்கின்றது.
மாணவர்களுடன் மைதானத்தில் விளையாடும் போது தங்களுடன் ஆசிரியர்கள் விளையாடுவதைப் பெருமையாகக்கருதி மாணவர்கள் பெருமிதம் அடைவர்.
அலுவலகங்களில், கணினியோடு தொடர்புடைய பணிகள் புரிவோர், சற்று இடம் கிடைத்தாலும் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந் து தினமும் விளையாடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் வேண்டாத பழக்கங்களுக்கு அடிமையாவது தடுக்கப்படும். தேவையின்றி எதையாவது நினைத்து வருத்திக்கொண்டிருப்
பவர்கள் தினமும் விளையாடினால் மனம் வளம் பெற்று ஆக்கச்சிந்தனைகள்
வளரும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அனைவருமே சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் காட்டியவர்களே. அவர்களுடைய நாடு அவர்களுக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்திப் பயிற்சித் தந்ததே ஒலிம்பிக் வெற்றிக்குக் காரண
மாகியது.
குழந்தைகள் விளையாடச் சென்றால் படிப்பு பாதிக்கும் என்ற தவறான எண்ணத்தைப் பெற்றோர்கள் விடுத்து, அவர்களின் நலன் கருதி விளையாட அனுமதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024