Wednesday, October 19, 2016

சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை

இரா.பிரேமா

‘பெண் பிறப்பு ஆணுக்கானது’என்பது எழுதப்படாத சமூகச் சட்டம். அதனால், பெண்ணின் பிறப்பு திருமணத்தில்தான் நிறைவு பெறுகிறது என இந்தச் சமூகம் நம்புகிறது. ‘ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பது’, ‘இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறவள்தானே’, ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன்’, ‘எப்படா கட்டிக் கொடுத்துச் சுமையை இறக்கப் போறேனோ’போன்ற சொல்லாடல்கள், பெண்ணை அடுத்த வீட்டுக்குரிய வளாகவே வளர்க்கும் பெற்றோர்களின் மனப் பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


குழந்தை வளர்ப்பில் உணவு, உடை, வாய்ப்பு, அந்தஸ்து, அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு முதலிடம், பெண்ணுக்கு இரண்டாம் இடம். ஆண், பெண் என இரு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பொருளாதார நலிவு இருக்கும்பட்சத்தில், ஒப்பீட்டளவில் ஆண் குழந்தைக்கு உணவு, உடை, கல்வி ஆகியவை தரத்திலும் அளவிலும் கூடுதலாகத் தரப்படுகின்றன. அதன் காரணமாக அவன் உரிய பருவத்தில் அந்தஸ்து உடையவனாகவும் அதிகாரம் உடையவனாகவும் உருவாகிறான். பெண் குழந்தை இந்த வாய்ப்பு கிடைக்கப் பெறாததால், எல்லா விதத்திலும் பின்தங்கிவிடுகிறாள்.

மேலும், குடும்பத் தளத்தில் பெண்ணுக்குச் சமையல், குழந்தைப் பராமரிப்பு, வீட்டுப் பராமரிப்பு போன்றவை விதிக்கப்பட்ட பொறுப்புகள். ஆணின் மீது இந்தப் பொறுப்புகள் சுமத்தப்படுவதில்லை. காலம் காலமாக, தலைமுறை தலைமுறைகளாகப் பெண்களுக்கான பணிகளாக இவை பாவிக்கப் படுவதால்,பெண்ணுக்கு இல்லம் சுமையாகிப் போய்விடுகிறது. இதனால், குழந்தையை மட்டுமல்ல, குடும்பத்தையும் சுமக்கிறாள் பெண்.

ஆணுக்கு வீட்டு வேலைகளிலிருந்து முழுமையான விடுதலை என்பதால் அவன் பொருளாதார ரீதியாகக் குடும்பத்தைப் பராமரிக்க விதிக்கப்பட்டான். ஆனால், இன்று பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்களும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர் என்றாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட வீட்டுப் பராமரிப்புப் பணிகளிலிருந்து விடுதலை இல்லை. அதனால் பெண்கள் இன்று இரட்டைச் சுமைகளில் அல்லாடுகிறார்கள்.

வீட்டு வேலை என்பது குறிப்பிட்ட நேரத்தோடு முடிந்துவிடுவதல்ல. விடுமுறை இல்லாத வேலையும்கூட. இதைத்தான் தமிழ்க் கவிஞர் ஒருவர்,

நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை

என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே மாதிரியான வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது உண்டு. தலைமுறை தலைமுறையாக பெண்கள் வீட்டு வேலை செய்துவருவதால் எந்தப் பெண்ணும் அதை மறுப்பதில்லை, ஏன் என்று கேள்வி கேட்பதும் இல்லை.

பாட்டிக்குப் பிறந்த அம்மாவும்
அம்மாவுக்குப் பிறந்த தங்கையும்
பாட்டியைப் போலவும்
அம்மாவைப் போலவும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
போலவே வாழாமல்
புதிதாக வாழ வேண்டும்

என்று ஒரு கவிஞர், பாலினப் பாகுபாடுகள் எந்தவொரு கேள்விக்கும் உட்படுத்தப்படுத்தப்படாது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். சமூக மதிப்பில்லாத வீட்டு வேலைக்கு ஒவ்வொரு பெண்ணும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம்வரை செலவிடுகிறார். பெண்ணின் பெரும்பாலான பொழுதுகள் குடும்பப் பொறுப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் கழிந்து விடுவதால் பெண்கள் சமூகக் கடமையாற்றுவதும், சமூகப் பணி செய்வதும் இயலாமல் போய்விடுகிறது. இனிவரும் தலைமுறைகளாவது வீட்டு வேலை என்ற இடைவிடாத பணியிலிருந்து விடுபட்டுச் சிறக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவத்தில், மனிதாபிமானமும் இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

- கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024