Sunday, October 30, 2016

பண்டிகை நிறைவு; பட்டாசு சத்தம் குறைவு...தித்தித்தது தீபாவளி! தீ விபத்தின்றி இனிதாக கழிந்ததால் மகிழ்ச்சி!
கடந்த சில ஆண்டுகளை விட, இந்த ஆண்டு தீபாவளி கூடுதல் உற்சாகத்துடன் கோவை மக்களால் கொண்டாடப்பட்டது; ஆனால், பட்டாசு வெடிப்பது குறைந்து, தீ விபத்துக்களும் இல்லாமல் இனிதே நிறைவு பெற்றது பண்டிகை.
வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டில், கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து கழகம் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் முன்கூட்டியே வழங்கப்பட்டது. இதனால், தீபாவளி 'பர்சேஸ்' மிக விரைவாகவே துவங்கியது. துணிக்கடை, ஸ்வீட் கடை, எலக்ட்ரானிக் கடைகளில் மக்கள் கூட்டம், அலை அலையாய்த் திரண்டது.
விடிய விடிய கூட்டம்!வியாழக்கிழமை இரவிலிருந்தே, தீபாவளி உற்சாகம், நகரில் களை கட்டத்துவங்கி விட்டது. வெள்ளிக்கிழமை இரவையும் பகலாக்கும் வகையில், வீடுகள் தோறும் வெடி வெடித்தும், வண்ண மயமான பட்டாசுகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். இரவு முழுக்க நகருக்குள், மக்கள் நடமாட்டம் இருந்தது. வெளியூர் செல்லும் மக்களின் கூட்டம், வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் குறையவில்லை.
தீபாவளி பண்டிகையான நேற்று, காலை புத்தாடை அணிந்து, குடும்பம் சகிதமாக கோவில்களுக்கு சென்றனர். கிராமங்களில், கோவில் மற்றும் பொது மைதானங்களில் வெடி வெடித்து ஆரவாரமாய் பண்டிகை கொண்டாடினர். வீட்டில் தயாரித்த இனிப்பு, காரம் வகைகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பக்கத்து வீட்டாருக்கும் பரிமாறி பண்டிகை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடைத்தெருக்களில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. பேக்கரி, ஓட்டல்கள் செயல்பட்டன. பெரும்பாலான ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டதால், குட்டீஸ்கள் ரோட்டில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இணைந்த நட்பும், இனிய உறவும்!ஈச்சனாரி விநாயகர், மகாலட்சுமி மந்திர், மருதமலை, புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், சித்தாபுதுார் ஐயப்பன், ராம் நகர் ராமர் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மன் கோவில், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில்களில் வழிபாட்டுக்காக மக்கள் குவிந்தனர். இதனால், இந்தப் பகுதிகளில் மட்டும், வாகன போக்குவரத்து நேற்று அதிகமாக இருந்தது.
ஆன்மிக பயணம், உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு பயணம், சினிமா காட்சிகளுக்கு படையெடுப்பு என, குடும்பத்துடன் கிளம்பியதால், ரோடுகளில் வாகன ஓட்டம் ஓயவில்லை. ஆனால், பெரும்பாலான முக்கியச் சாலைகள், பரபரப்பின்றி படு அமைதியாகக் காட்சியளித்தன.

தீ விபத்தில்லா தீபாவளி!கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் பட்டாசு சத்தம் சற்று குறைவாகத் தெரிந்தது. கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீ விபத்தில்லா தீபாவளியாக இருந்தது. இந்தாண்டு, தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தீ விபத்தை தவிர்க்க மாவட்டம் முழுவதும், 24 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருந்தன. ஆனால், இரு நாட்களில் தீ விபத்து ஏதும் இல்லை. அதனால், இந்தாண்டும், தீ விபத்தில்லா தீபாவளியானது.

பசுமைக்கு பச்சைக்கம்பளம்!கோவை மாநகராட்சி சார்பில், பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்று அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை இயற்கை சூழலுடன் இணைந்து கொண்டாடும் வகையில், மரக்கன்று நட்டு அதனை போட்டோ, வீடியோ எடுத்து, 81900 00200 என்ற எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' அனுப்புமாறு, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை (31ம் தேதி) இரவு வரையிலும், பசுமை தீபாவளி கொண்டாட்ட படங்களை அனுப்பலாம். இத்திட்டத்தில் பங்கேற்போருக்கு பரிசு வழங்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்து, மரக்கன்று நடுவதையும், பட்டாசு குப்பையை தனியாக குவித்து, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிப்பதையும் 'செல்பி' படம் எடுத்து, அனுப்பியுள்ளனர்.
காலையிலேயே 'கலக்கிய' வியாபாரம்!பண்டிகை கொண்டாட்டத்தால், இறைச்சிக்கடைகளில் நேற்று காலை முதலே கூட்டம் அலை மோதியது. ஆட்டிறைச்சி, பிராய்லர் மற்றும் மீன் கடைகளில் மக்கள் அணிவகுத்து நின்று, குடும்பத்தினருக்கு பிடித்த இறைச்சியை வாங்கிச்சென்றனர்.
அதேபோன்று, சினிமா தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டம் அள்ளியது. தீபாவளிக்கு வெளியான புதுப்படங்களை முன்பதிவு செய்தவர்களும், காட்சி நேரத்துக்கு சென்று டிக்கெட் எடுப்பவர்கள் என, நாள் முழுக்க கூட்ட நெரிசலாகவே காணப்பட்டது. திரையரங்குகளிலும் காட்சிகள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தனர்.

பண்டிகை கால கூட்டத்தை போன்று, நேற்று 'டாஸ்மாக்' கடைகள் திறப்பதற்கு முன்பே கூட்டம் கூடி நின்றது. கடை நிறந்ததும் பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 'குடி' பிரியர்களை குறி வைத்து, காலை முதலே, பார்களில் 'சரக்கு' விற்பனை சட்ட விரோதமாக கொடி கட்டிப்பறந்தது. போதையில் தள்ளாடி ரோட்டோரத்தில் சரிந்தவர்களும் ஏராளம்.

-நமது நிருபர்-

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...