Sunday, October 9, 2016

செல்போன் டவர் சந்தேகம் தீரவேண்டும்

தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் என்றாலும், நீதிபதிகள் என்றாலும் சரி, கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓய்வுபெறும் நாளன்றுகூட, தங்கள் பணியை திறம்பட முடித்துவிட்டுத்தான் செல்வார்கள் என்ற நற்பெயர் இந்தியா முழுவதிலும் உண்டு. ஓய்வுபெற்ற தமிழக அரசு உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, மயிலாடுதுறையில் வருவாய்கோட்ட அதிகாரியாக பணியாற்றியபோது, ‘‘தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காட்டைச் சேர்ந்த எஸ்.ராமஜெயம் என்ற துணைகலெக்டர் ஓய்வுபெறும் நாளன்று இரவு 7 மணிவரை நெல் கொள்முதலுக்கான பணிகளில் அந்த மாவட்டம் முழுவதும் சுற்றி அலைந்தார். அவரது வழியனுப்பு விழாவே இரவில்தான் நடந்தது. ஒரு அதிகாரி எப்படி பணிபுரியவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்’’ என்று பெருமையாக பேசுவார். அதேபோலத்தான் உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி, கடந்த திங்கட்கிழமை ஓய்வுபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.நாகப்பனின் பணியும் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.நாகப்பன் மாவட்ட நீதிபதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்று பணியாற்றி, கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

ஓய்வுபெறும் நாளன்று கடைசியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சி.நாகப்பன், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் கொண்ட பெஞ்சு, மக்களுக்கு செல்போன் டவர் மீதுள்ள அச்சத்தை நீக்குவதற்கு ஒரு நல்ல வழியைக்காட்டி தீர்ப்பளித்துச்சென்றிருக்கிறது. இந்தத்தீர்ப்பின் முடிவு எதிர்காலத்தில், ‘செல்போன் டவர் மீது கொண்டுள்ள கதிர்வீச்சு அபாய அச்சம் சரியானதுதானா?, தேவையில்லையா?’ என்பதற்கு ஒரு சரியான விளக்கத்தைத்தரும். 1995–ம் ஆண்டு ஜூலை 31–ந் தேதி அன்று முதல் செல்போன் பயன்பாட்டை அப்போதைய மேற்குவங்காள முதல்–மந்திரி ஜோதிபாசு, மத்திய தகவல் தொடர்பு மந்திரியாக இருந்த சுக்ராமுடன் பேசி தொடங்கிவைத்தார். அப்போது ஒரு நிமிடத்திற்கு செல்போன் கட்டணம் ரூ.16 ஆக இருந்தது. அப்படியிருந்த செல்போன் இன்று பரம ஏழைகளுக்குக்கூட அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. இந்தியாவில் இப்போது 103 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் புழக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடியே 13 லட்சத்து 42 ஆயிரத்து 122 செல்போன்கள் இருக்கிறது.

இந்த நேரத்தில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மூளையில்கட்டி, நரம்புக்கோளாறுகள், மார்பக புற்றுநோய், கருச்சிதைவு, இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த கதிர்வீச்சின் பாதிப்பால்தான் சிட்டுக்குருவிகள், அணில் போன்ற சின்னஞ்சிறு பிராணிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்று ஒரு அபாயகரமான தகவல் நாடு முழுவதும் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்டும் வகையில், நீதிபதி சி.நாகப்பன் இடம்பெற்றுள்ள அந்த பெஞ்சு இந்தப்பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கம் வருகிற 17–ந் தேதி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையில், ‘செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளால் மனிதகுலத்திற்கோ, பறவைகளுக்கோ, அல்லது மற்ற பிராணிகளுக்கோ, ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து அறிவியல் பூர்வ ஆய்வு எதுவும் நடத்தப்பட்டுள்ளதா?, அப்படி நடத்தப்பட்டுள்ளது என்றால், அந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் என்ன?, கதிர்வீச்சு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று செல்போன் டவருக்கு, ஏதாவது அளவை மத்திய அரசாங்கம் வகுத்துள்ளதா?, மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இந்தியாவில் கதிர்வீச்சின் அளவு எந்தளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?, ஏதாவது அந்த அளவுமீறல் நடந்துள்ளதா?, அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, சாதாரண மனிதர்களுக்கு, தங்கள் வீட்டின் அருகிலுள்ள செல்போன் டவரில் கதிர்வீச்சு எந்தளவு இருக்கிறது?, நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருக்கிறதா? என்பதை கொஞ்சம் கட்டணம் செலுத்தியே அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா?’ என்பதையெல்லாம் தெரிவிக்கவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக, வரும் 17–ந் தேதி மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் அறிக்கையில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் மக்களுக்கும், பறவைகளுக்கும் அபாயம் இருக்கிறதா?, இல்லையா? என்ற பெரிய கேள்விக்கு நிச்சயம் விடைக்கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024