Friday, October 14, 2016

சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்


சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்

சமூக வலைதளங்கள் பலதரப்பட்ட மக்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலானோர் நினைவுகளையும் நனவுகளையும் பகிர்கின்றனர். ஆனால், அங்கே இயங்குபவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான மனநிலையில் இருப்பதில்லை. வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலானவற்றைப் பயன்படுத்துபவர்களில் சுவாரசியமான பயனர்கள் பலர் உண்டு. அவர்களைப் பற்றிய சிறு - குறு தகவல் குறிப்புகள் இவை:


புகைப்பட பிரபலங்கள்:

நின்றால் புகைப்படம், நடந்தால் புகைப்படம், அமர்ந்தால், ஊர் சுற்றினால் படம் என்று புகைப்படங்களாகப் போட்டு பிரபலம் ஆனவர்கள் இவர்கள். அவர்களின் புகைப்படத்துக்கு குவிந்திருக்கும் லைக், கமெண்டுகளைப் பார்க்கும்போதுதான் நமக்கு காதில் புகை வரும். சரி பிரபலமானவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்ஃபியைப் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரைத் தூக்கத்தில் ஒரு செல்ஃபி, தூங்கி எழுந்தவுடன் செல்ஃபி, பல் விளக்கும்போது செல்ஃபி என்று இவர்களின் செல்ஃபி பட்டியல் சென்று கொண்டே இருக்கிறது. ஆணாதிக்கம் நசுக்கப்படுவதும் இங்கேதான். ஆம், இந்த வகைப் பிரபலங்களில் பெண்களுக்கே அதிக மவுசு.

'வணக்க' வல்லுநர்கள்:

இவர்களின் தினசரி வேலைகளில் முக்கியமானது வணக்கம் என்று சொ(கொ)ல்லும் நிலைத்தகவலை மறக்காமல் பதிவேற்றுவது!

காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாரதியார் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஃபேஸ்புக்கைப் படிப்பார்கள். அதோடு மறக்காமல் 'காலை வணக்கம்' என்று ஸ்டேட்டஸ் போட்டுவிடுவார்கள். மதிய வேளையில் 'மதிய வணக்கம்' என்ற ஸ்டேட்டஸும், இரவில் 'இரவு வணக்கம் நண்பர்களே, உறவுகளே, சொந்தங்களே!' ஸ்டேட்டஸும் போடப்படும். வணக்கம் சொல்லியே வதக்கி எடுப்பவர்கள் இவர்கள்.

புரியாத புதிர்கள்:

இந்த வகை ஆட்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாது. தமிழில் புதிதாக சில வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு வந்து, பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி, (படிப்பது ஃபேஸ்புக் நண்பர்களின் கடமை என அவதானிப்பவர்கள்!) சாமான்ய ரசிகர்களைத் திணறடித்தே பிரபலமானவர்கள் இவர்கள்.

ரசிக பிரபலங்கள்:

எப்படியாவது பிரபலம் ஆக வேண்டும் என்று நினைத்து, பிரபலங்களுடன் அடிக்கடி கமெண்டில் கதைப்பது, அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துத் தன் பக்கத்தில் பதிவது, அவர்களின் எல்லாப் பதிவுகளுக்கும் சூப்பர், செம்ம சொல்லிக் கொண்டே இருப்பது போன்ற காரியங்களில் கர்மசிரத்தையாய் இருப்பவர்கள்.

ஃபீலிங்ஸ் பறவைகள்:

காதல் மற்றும் காதல் சார்ந்த இடங்களில் / தளங்களில் மட்டும் ஈடுபாட்டுடன் இயங்குபவர்கள்; காதல், பிரிவு ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.

'புஜ்ஜிமா'க்கள்:

இவர்கள் எப்போதும் குழந்தைப் படங்கள், பூக்கள், இயற்கை ஆகியவற்றை மட்டுமே ஷேருபவர்கள்; லைக்குபவர்கள். அடுத்தவர்கள், அழகான குழந்தைப் படங்களைப் பதிவேற்றினால் மட்டும்தான் ச்ச்சோ ஸ்வீட், லவ்லி, கியூட் சொல்வார்கள்.

தொழில் முறை பதிவர்கள்:

மாதக்கணக்காக அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்தும் வேலை வந்துவிட்டால் மட்டும், தீயாய் வேலை செய்வார்கள்.

கடவுள் பற்றாளர்கள்:

பண்டிகைக் காலங்கள், விழாக் காலங்களில் மட்டும் சுறுசுறுப்பாக கடவுள்களின் வரலாறு, தோற்றம், விழாக்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

காப்பி பேஸ்டாளர்கள்:

நன்றாக இருக்கும் பதிவுகளை, காப்பியடித்து தன் பக்கத்தில் போட்டு, 'அட, இந்தப் பையனுக்குள்ள இம்புட்டு அறிவா?!' என்று புருவம் உயர்த்த வைக்கும் காப்பி பேஸ்டாளர்கள். இந்தப் பதிவுகளில் பெரும்பாலானவை பத்திரிகைகளில் தொகுக்கப்படுவதும் கவனிக்கத்தக்க கொடுமை.

ஃபேக் ஐடி பிரபலங்கள்:

தன் சுய அடையாளம் மறைத்து, பெயர் விடுத்து, நச் கருத்துகளைப் போட்டே பிரபலம் ஆனவர்கள்.

ஜென் நிலையாளர்கள்:

24 மணி நேரமும் ஆன்லைனில் இருந்துகொண்டே / பார்த்துக்கொண்டே / படித்துக்கொண்டே, யாருடைய பதிவுக்கும், லைக்கோ, கமெண்டோ போடாமல் ஜென் நிலையிலேயே வாழ்பவர்கள்.

தகவல் சொல்லிகள்:

2 நிமிடத்தில் சமைப்பது எப்படி, அழகாவது எப்படி, இயற்கை விவசாயம் செய்வது எப்படி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைக் கையாள்வது எப்படி என்று தடுக்கி விழுந்தால் கூட தகவல் சொல்லிக் கொண்டே இருப்பது இவர்களின் ஸ்பெஷாலிட்டி. எப்படிங்க இப்படி?

'கோட்'டீஸ்வரர்கள்:

கருத்து சொல்லி, கைகாலை புண்ணாக்கிக் கொள்ளாமல், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பேர் வாங்குபவர்கள். தெளிவாக தத்துவங்களை (மற்றவர்களின்) மட்டுமே பகிர்வார்கள். பிரபல கோட்ஸ் சைட்டுகளின் கோட் இமேஜ்களைப் பகிர்ந்து உலகத்துக்கு ஏதாவது சொல்லிக்கொண்டு தங்கள் இருப்பை நிலை நிறுத்துபவர்கள்.

சமூக சேவையாளர்கள்:

சமூக ஊடகங்களை, சமூக சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் குறைந்த லைக்குகளுக்கு சொந்தக்காரர்கள்.

சினிமா ஆர்வக்கோளாறாய்ச்சியாளர்கள்:

வெள்ளிக்கிழமை படம் ரிலீஸுக்கு முன்பே டீசர் ரிவியூ பகிர்ந்து பகீரிடச் செய்வார்கள். படம் தொடங்கி அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அனுபவத்தைப் பகிர்வார்கள். இடைவேளையில் முக்கால் விமர்சனமும், முடிந்தவுடன் முழு விமர்சனமும், படத்துக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பொருத்து முழுமையான அலசல்களையும் வெளியிட்டு தங்கள் சினிமா அறிவை பறைசாற்றுவார்கள். உலக சினிமாவை உள்ளூருக்குக் கொண்டு வந்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

மீம் மக்கள்:

சினிமா, அரசியல், விளையாட்டு என்று எந்த துறையாக இருந்தாலும் கவலையே படாமல், இல்லாத மூளையைப் போட்டுக் கசக்கி ஸ்டேட்டஸ் யோசிக்காமல், அழகாய் ஒரு படத்தையும், அதற்கேற்ற பன்ச்சையும் சேர்த்துப் போட்டு, பெயர் வாங்குபவர்கள். ஒரே படத்தை வெவ்வேறு மீம்களுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள். ஆகவே என்னதான் சுட்டாலும் மீம் மக்கள், மீம் மக்களே!

ஃபேஸ்புக் போராளிகள்:

முழுமையான செய்திக்கு முந்தைய நியூஸ் ஃபளாஷ் வந்த அடுத்த நொடியில் தங்கள் உக்கிரக் கருத்துகளைப் பகிர்ந்து லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளுவார்கள். ஆர்வமிகுதியில் தப்பான செய்திக்கு ரைட்டான கருத்துச் சொல்லிவிட்டு, பின்னர் அந்தச் செய்தியே தப்பு என்று உணரும்போது பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயங்காத மானஸ்தர்கள்.

இவர்களுக்கு நாட்டில் என்ன நடந்தாலும் கருத்து சொல்லியே ஆகவேண்டும். தக்காளி விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். தங்கம் விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். சிந்தாதிரிப்பேட்டை முதல் சிரியா வரை இவர்களின் கருத்துக்கு சிக்காத இடங்களே உலக வரைபடத்தில் இல்லை. கருத்து சொல்வது குறித்தும் கருத்து சொல்வதுதான் ஹைலைட். மார்க் ஸக்கர்பெர்க்குக்கு பேஜ்வியூஸ் வாங்கித் தருவதில் முன்னிலை வகிப்பதே இந்தப் போராளிகள்தான் என்றால் அது நகையில்லை.

கடைசியாக... தல - தளபதி ரசிகர்கள் படை:

இவர்களுக்கு அறிமுகக் குறிப்பு தேவையில்லை.

சரி... நீங்கள் எந்த வகை?




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024