Wednesday, October 12, 2016

ரெயிலில் 2-ம் வகுப்பு பெட்டியில் பயணித்த முன்னாள் முதல்வர்


தமிழகத்தில் முன்னாள் முதல்வரும் சாகும்போது 150 ரூபாயக்கு சொந்தக்காரராக இருந்த காமராசர், குடிசையில் வாழ்ந்த அமைச்சர் ராமையா, இரண்டு சட்டையை மாறி மாறி துவைத்து அணிந்த கடையநல்லூர் மஜ்ஜித், கக்கன் ஆகியோருக்கு பின் ஆடம்பரத்தை விரும்பாத அரசியல்வாதிகளையும், எளிமையான அரசியல்வாழ்க்கையை வாழ்ந்தவர்களையும் இப்போதுள்ள நடைமுறை வாழ்க்கையில்  பார்ப்பது அரிதாகிவிட்டது.
ஆனால், கேரளாவில் ஆட்சியில் இருக்கும்போதும் சரி, அரியணையை விட்டு இறங்கிபின்பும் சரி என்றும் சாமானியன் தான் என்று சொல்லை கடைபிடிக்கும் ஒரு சில அரசியல் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, மிக எளிமையாக ரெயிலில் 2-ம் வகுப்பு சாதாரன பெட்டியில் பயணம் செய்து, கையை தலைக்கு வைத்து தூங்கிய சம்பவம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பதவியும், அதிகாரமும் உள்ள போதிலும் சரி அல்லது ஆட்சியில் இல்லாத  போதிலும் சரி தங்களது ‘கெத்தை’ விட்டுக்கொடுக்காமல் தோரணையாக விமானத்திலும், ரெயிலில் முதல்வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எளிமையை விரும்பும் இதுபோன்ற தலைவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
 முன்னாள் முதல்வர் உம்மண்சாண்டி நேற்றுமுன்தினம் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்றார். இதற்காக கட்சியினரின் எந்தவிதமான ஆர்ப்பரிப்பு, கூச்சல், கோஷம் ஏதும் இன்றிரெயலில் 2-ம் வகுப்பு பெட்டியில் எளிமையான முறையில்,  பயணம் செய்தார். அப்போதுதான் இந்த  புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளமான பேஸ்புக்கில் பகிரப்பட்டவுடன்ஏராளமானோர் லைக் செய்தனர்.
இது குறித்து உம்மன் சாண்டியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, “ நீண்ட தொலைவு பயணம் செய்யும் போது ரெயிலில் கூட்டம் இல்லாவிட்டால், 2-ம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதையே அதிகம் விரும்புவேன். நான் எப்போதும் மக்களுடன் கலந்து இருப்பதையே விரும்புகிறேன். அப்படி இல்லாவிட்டால் தனித்துவிடப்பட்டது போல் உணர்கிறேன். எனக்கு எப்போதும் வி.ஐ.பி. போல் என்னை நடத்துவது பிடிக்காது விரும்புவதும் இல்லை'' எனத் தெரிவித்தார்.
பெரும்பாலும் இதுபோன்ற எளிமையான, வித்தியாசமான காட்சிகளை கேரளாவில் மட்டுமே பார்க்க முடியும்.  உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தது.
முதல்வர் பதவி போன அடுத்த சில வாரங்களில், திருவனந்தபுரத்தில் நடக்க இருந்த ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ள உம்மன்சாண்டி திட்டமிட்டு இருந்தார். ஆனால், ரெயிலிலும் டிக்கெட் கிடைக்கவில்லை.  உடனே கொல்லத்தில்  இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்துக்கு  பஸ்ஸில் பயணம் செய்து உம்மன்சாண்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 
அதுமட்டுமல்லாமல், ஒருமுறை முதல்வராக இருக்கும் போது உம்மன்சாண்டி தேவாலயத்துக்கு செல்லதிட்டமிட்டார். அப்போது, தான் பயணித்த கார் சாலையில் திடீரென பழுதாகவே, உடனே ஒரு ஆட்டோ பிடித்து, தேவாலயத்துக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது முதல்வர் எளிமையான முறையில் தேவாலயத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றது மக்களை வியக்கவைத்தது. 
முதல்வராக உம்மன்சாண்டி பதவி வகிக்கும் போது கூட, ரெயிலில் பயணத்துக்குபின், கீழே இறங்கி தனது அதிகாரப்பூர்வ வாகனம் நோக்கி நடந்தே செல்வார். சில நேரம் வாகனம் வருகைக்காக காத்திருந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது.
இதுபோன்ற எளிமையான வித்தியாசமான அரசியல்வாதிகளை கேரளாவில் மட்டுமே இப்போது  பார்க்க முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024