கொடுங்குற்றம் புரிந்தாலும் சிறார்களுக்கு கடும் தண்டனை கூடாது: தில்லி உயர் நீதிமன்றம்
By DIN | Last Updated on : 14th October 2016 12:42 PM
கொடுங்குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், சிறார் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையை எக்காரணம் கொண்டும் பறிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொலைக் குற்றத்தில் தொடர்புடைய ஒரு சிறுவனை தில்லி போலீஸார் கடந்த 2007-ஆம் ஆண்டு கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ஆனால், குற்றச் செயலில் ஈடுபட்டபோது தனக்கு 18 வயது நிரம்பவில்லை என்றும், எனவே சிறார் குற்றவியல் சட்டப்படியே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், இதுதொடர்பாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, நீதிபதிகள் கீதா மிட்டல், பி.எஸ்.தேஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சிறார்கள் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று சட்ட விதிகள் கூறுகின்றன. சிறை என்றால் மற்ற கைதிகளைப் போல அவர்களைக் கொட்டடியில் அடைக்கக் கூடாது. சிறார் குற்றவாளிகளுக்கான கூர்நோக்கு இல்லத்தில்தான் அவர்களை வைத்திருக்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிறுத்தியும் சிறார்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவோ அல்லது அவற்றில் சமரசம் செய்துகொள்ளவோ கூடாது.
மனுதாரர் கைது செய்யப்படும்போது சிறுவனாக இருந்துள்ளார். அதைக் கருத்தில்கொண்டு பார்த்தால், அவரை 9 ஆண்டுகள் சிறையில் அடைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இத்தகைய வழக்குகளைக் கையாளும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிய பயிற்சியளிப்பது அவசியம். சிறார் குற்றவியல் சட்டம் தொடர்பான சரியான பார்வை அவர்களுக்கு இருந்தால் உயர் நீதிமன்றங்களின் நேரம் விரயமாகாது. எனவே, கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய வழக்குகளைக் கையாளுவது தொடர்பான பயிற்சியளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment