Monday, October 17, 2016

மனைவி தனியுரிமை கோருவது கணவர் மீதான கொடுமை அல்ல: தில்லி உயர் நீதிமன்றம்


திருமணமான ஒரு பெண், தன்னுடைய புகுந்த வீட்டில் தனியுரிமையை (பிரைவசி) கோருவதை, கணவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. எனவே இதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2003-இல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் மனைவி கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாததால் தனிக் குடித்தனம் நடத்த வற்புறுத்துவதாகவும் அதற்காக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி தில்லி கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 2010-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, தனிமை என்பது அவரவரது அடிப்படை உரிமை என்பதால் தனிக் குடித்தனம் செல்ல மனைவி கோரியது நியாயமற்றதாக தெரியவில்லை என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கீழமை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து பெண்ணின் கணவர், தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது:
தனிக் குடித்தனத்துக்கு அழைத்து அவ்வப்போது தன்னை தன் மனைவி கொடுமைப்படுத்துவதாகவும், அதுமட்டுமல்லாது, கடந்த 12 ஆண்டுகளாக இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாலும், இனி ஒன்று சேர வாய்ப்பில்லாததாலும், "மீண்டும் இணைய முடியாத திருமண முறிவு' என்ற அடிப்படையில் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தீபா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: திருமணமாகி தங்கள் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு மணமகன் வீட்டார் தனியுரிமைகளை வழங்க வேண்டியது அவர்களது கடமை. இந்த வழக்கைப் பொறுத்தவரை அதுபோன்று வழங்கியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. மேலும் இந்த விவாகரத்து வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே.மேலும் ஹிந்து திருமணச் சட்டத்தில் "மீண்டும் இணைய முடியாத திருமண முறிவு' என்ற சட்டத் திருத்தத்தை இதுவரை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...