முன்பெல்லாம் வீட்டுக்குப் பெரியவர்கள் வந்தால் குழந்தைகள் இரு கரம் கூப்பி, வாய் நிறைய வணக்கம் என்று உறவுமுறையுடன் அழைப்பது கேட்பதற்கே இனிமையாக இருக்கும். நல்ல நாள், பெரிய நாள் என்றால் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அப்பா, அம்மாவை எதிர்த்துப் பேசியதாகவோ, கேலி செய்ததாகவோ நினைவில்லை!
ஆனால் இன்றைய நிலையை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. தப்பித் தவறி வணக்கம் சொல்லும் குழந்தைகள் நூறில் ஒன்றுகூட தேறாது. சட்டென்று ஹாய், ஹலோதான் வந்து விழுகிறது. அதுவும் கையில் அலைபேசியோ, மடிக்கணினியோ இருந்தால் கண்கள் அவற்றிலிருந்து அகல்வதே கடினம்தான். தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று சொல்லிப் பாருங்கள். எகத்தாளமாக நம்மை ஒரு பார்வை பார்த்தபடி நழுவி விடுவார்கள்.
சர்வ சாதாரணமாகப் பிள்ளைகள் அப்பாக்களை, ‘லூசாப்பா நீ?’ என்கிறார்கள். அறிவுரை சொல்லும் அம்மாக்களை, ‘மொக்கை போடாதம்மா’ என்று எளிதாகத் தட்டிக்கழித்துச் செல்கிறார்கள். சாலையில் போகும் பெரியவரை தாத்தா என்று அழைக்காமல் பெருசு என்று அழைக்கும் பள்ளி மாணவனைப் பார்க்க, கவலையாக இருக்கிறது. திரைப்படங்களின் எதிர்மறைத் தாக்கம். திரையில் கதாநாயகனும் நண்பனும் அடிக்கும் கூத்தையெல்லாம் தங்களுக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ளும் பேரார்வம்.
பல நேரங்களில் ஆயாசமாகத்தான் இருக்கிறது. எங்கு தவறுகிறோம் என்பது புரிபடுவதில்லை. நிச்சயமாக குழந்தைகள் மீது தவறில்லை. அவர்கள் நாம் பிடிக்கும் களிமண். கூட்டுக் குடும்பமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை இத்தகைய சமயங்களில் தவிர்க்க இயலாது.
அதற்காகப் பிள்ளைகள் பெற்றோருக்கு அடிமையாக இருக்க வேண்டுமா? அவர்களுக்கென்று எந்த சுதந்திரமும் இல்லையா? என்று சிலர் கேட்கமால். பெற்றோரிடம் தோழமை உணர்வோடு பழகுவதில் தவறில்லை. ஆனால் ஆங்கே மருந்துக்குக்கூட மரியாதை உணர்வு இல்லை என்பதுதான் வருத்தத்தைக் கூட்டுகிறது.
சிறு வயதிலேயே பெற்றோர்களைத் தூக்கியெறிந்து பேசிப் பழகும் பிள்ளைகளின் குணம் பின்னாட்களில் மட்டும் எப்படி மாறும்? பழக்கமே செயலாகும். செயலே குணமாகும். சிறு வயது முதலே பெரியவர்களையும், பெற்றோர்களையும் மதித்து நடப்பது மிக முக்கியம் என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். முன்பு பள்ளிகளில் இருந்த நன்னெறி வகுப்புகள் இத்தகைய ஒழுக்கங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் பெருந்துணையாக இருந்தன. இன்றைய நிலையில் பள்ளிகளில் மீண்டும் அந்தப் பாடத் திட்டங்களைச் சேர்ப்பது அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.
- இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி.
No comments:
Post a Comment