Thursday, October 27, 2016

விதிமீறல்களும் ஒலிமீறல்களும்!

விதிமீறல்களும் ஒலிமீறல்களும்!

By ஆசிரியர்  |   Last Updated on : 27th October 2016 06:04 AM  |   
அண்மையில் சிவகாசி பட்டாசுக் கடை தீவிபத்தின்போது, தனியார் ஸ்கேன் மையத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியபோது நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர்: "பட்டாசுக் கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்படும்போது அந்தக் கடைகளை ஆய்வு செய்வதுண்டா?'
"விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிமம் புதுப்பிக்கப்படுகிறது. தீபாவளி காலங்களில் வேலைப் பளு காரணமாக அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய முடிவதில்லை' என்பதுதான் இதற்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை இணை தலைமை அலுவலர் நேரில் அளித்த பதில், தமிழகத்தில் 5,530 தாற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,039 தாற்காலிக பட்டாசுக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை, வருவாய் துறை, காவல்துறை ஆகியவற்றின் தடையில்லா சான்று பெறாமல் இந்த அனுமதி கிடைக்காது. அவர்கள் ஆய்வு செய்தோம் என்று கூறுவார்கள். விபத்தும் உயிரிழப்புகளும் நேரிடும்போதுதான், இவர்கள் தங்களின் பணிபளு பற்றி மெல்ல எடுத்துரைப்பார்கள். தீபாவளி நெருக்கத்தில்தான் இந்த உரிமங்கள், அவசரஅவசரமாக வழங்கப்பட வேண்டுமா? நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே, இத்தகைய விண்ணப்பங்களைப் பெற்று, பணிபளு இல்லாதபோது முறையான ஆய்வுகள் நடத்தி வழங்கப்படலாகாதா?
பெரும்பாலான பட்டாசுக் கடைகளுக்கான உரிமங்கள் என்பது வெறும் கையூட்டு அடிப்படையில், இருக்கையில் இருந்தபடியே அனுமதிக்கப்படும் நடைமுறைதான் என்பது அனைத்து வணிகர்களுக்கும் தெரியும். தீபாவளி காலத்தில் ஒரு வாரம் பட்டாசு விற்பனைக்கு தாற்காலிக அனுமதி கிடைத்தாலும், போட்ட முதலீட்டைவிட அதிக லாபம் பார்த்துவிட முடியும் என்ற நடைமுறை உண்மையால், கையூட்டு கொடுத்து அனுமதி பெற விழைகின்றனர் வணிகர்கள். இதற்குக் காரணம் பட்டாசுக்கான விலையைக் கடைக்காரர்கள் தீர்மானிப்பதுதான். அவர்களையும் சொல்லிக் குற்றமில்லை. அத்தனை காவல்துறையினருக்கும், உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இலவசமாகப் பட்டாசுகள் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறதே.
உரிமம் அல்லது தாற்காலிக அனுமதி அளிக்கப்படும் பட்டாசுக் கடைகள் எத்தகைய பட்டாசுகளை விற்பனை செய்யலாம் என்பதிலும், அந்தக் கடையில் எந்த அளவுக்கு பட்டாசுகள் கையிருப்பு வைக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்த வரைமுறையும் இல்லை. அவர்களது விற்பனை விதி குறித்து எந்தவிதக் கட்டுப்பாடும் வெளிப்படைத்தன்மையும் இல்லை.
ஒரு பட்டாசு வெடிக்கும்போது, நான்கு மீட்டர் தொலைவில் அதன் ஒலி 125 டெஸிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வெடிமருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒரு விதிமுறை வைத்துள்ளது. இந்த விதியின்படி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என்கின்ற கண்காணிப்பு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. தாற்காலிக உரிமம் பெறும் கடைகளில் விற்கப்படும் பட்டாசுகள் இந்த அளவுக்கு மிகாமல் இருக்கும் வெடிகளா என்ற கண்காணிப்பும் இல்லை.
பெருஞ்சத்தம் ஏற்படுத்தும் வெடிகளை பொதுஇடத்தில் வெடிப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு வெடி வைத்து ஒலி மாசு ஏற்படுத்தியவர்களை கைது செய்யலாம். ஆனால் இந்த விதிமுறை எந்த இடத்திலும், உற்பத்தி, விற்பனை, தெருவில் கொண்டாட்டம் என எங்குமே மீறப்படுவதாகவே இருக்கிறது.
தாற்காலிக கடைகள் உரிமம் புதுப்பிக்கப்படும்போது, கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட அதே இடம்தானே என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது. அந்த இடத்துக்கு அருகே இந்த ஆண்டு புதிதாக ஒரு முதியோர் இல்லமோ அல்லது தனியார் மருத்துவமனையோ தொடங்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. அத்தகைய அலட்சியம்தான் சிவகாசி விபத்தில் தனியார் ஸ்கேன் மையத்தில் பட்டாசு விபத்துப் புகையால் ஒன்பது பேர் மூச்சுத்திணறி இறக்கக் காரணம்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சொல்கிறது. மீறினால் தண்டனை என்கிறது. உரிமம் புதுப்பிக்கப்படும் கடைகளுக்கும், தாற்காலிக விற்பனை கடைகளுக்கும் சென்று பார்க்கவே பணிபளு இருக்கும் அதிகாரிகள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை எவ்வாறு கண்காணிப்பார்கள்? பட்டாசு வெடிப்பது தவறில்லை. எத்தகைய பட்டாசு என்பதிலும் அவை ஏற்படுத்தும் காற்று மாசும், ஒலிமாசும்தான் கவனிக்கப்பட வேண்டியவை.
பட்டாசுக் கடைக்கு உரிமங்கள் வழங்குதல், புதுப்பித்தல், தாற்காலிகக் கடை அனுமதி எல்லாமும் ஒவ்வொரு ஆண்டும் நேரில் ஆய்வு நடத்திய பிறகே வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், அதிக ஒலி தரும் வெடிகளை தயாரிக்க, விற்க தடை விதித்து, அத்தகைய பட்டாசுகளை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு வெடியிலும், இந்த வெடியின் ஒலி, 125 டெஸிபல் அளவுக்குட்பட்டது என்ற உத்தரவாதம் எழுத்தால் பதிவு செய்யப்படும் நிலைமை உருவாகவேண்டும்.
மத்தாப்பு போன்ற ஆபத்தில்லாத சிலவற்றை வீட்டில் கொளுத்தவும், வெடிகளை ஊர் மைதானத்தில் அல்லது விளையாட்டுத் திடலில் வெடித்துக் கொண்டாடவுமான நிலைமை உருவாக வேண்டும். அதுதான் பாதுகாப்பான தீபாவளிக்கு வழிவகுக்கும். பட்டாசுக்கடை விதிமீறல்களுக்கும் பட்டாசு ஒலிமீறல்களுக்கும் காரணம் பணிபளு அல்ல, கையூட்டு பளுவே!

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...