காவு வாங்கும் கலப்பட எண்ணெய்கள்! எந்த எண்ணெயும் நல்ல எண்ணெய் இல்லை!
ஆரோக்கிய அச்சுறுத்தல்
ஏற்கனவே நாம் பல குழப்பத்தில் இருக்கிறோம்… இதில் ஒவ்வொருவரும் டாக்டராக மாறி ஆலோசனை என்ற பெயரில் நம் குழப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் சமையல் எண்ணெய் பற்றி வெளிவரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் அநியாய குழப்பம். ‘சந்தையில் விற்பனையாகும் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் உங்கள் இதயத்தில் மெழுகு படியும். எங்கள் எண்ணெயில் அது கிடையாது’ என்று சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
எல்லா எண்ணெயிலுமே பிரச்னை என்றால் எந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துவது என்று இதய சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் கேட்டோம்…‘‘எண்ணெய் கலப்படம் என்பது சாதாரணமாகிவிட்டது. காஸ்மெட்டிக் ஆயில் என்கிற தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் செய்கிற கலப்படத்தால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவதில்லை. சருமத்தில் அலர்ஜி, எரிச்சல், காயம் போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள்தான் ஏற்படும். அரிதாக சில பெரிய பிரச்னைகள் உண்டாகலாம். ஆனால், சமையல் எண்ணெயில் நடக்கும் Adulteration என்கிற கலப்படம்தான் நம் உடனடி கவனத்துக்குரியது.
சில விளம்பரங்களில் சொல்லப்படுவது போல சமையல் எண்ணெய் கலப்படங்கள் ரத்த நாளங்களில் படியாது. கொழுப்பு மட்டும்தான் அப்படிப் படிந்துகொள்ளும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பாக வரும் வாய்ப்பும் கலப்பட எண்ணெய்களால் இல்லை. கொழுப்பு எண்ணெய்கள் சூடான நிலையில் உருகி திரவ வடிவத்துக்கு மாறும். குளிர்ந்த நிலையில் உறைந்துவிடும். அதுபோல இந்த கலப்பட எண்ணெய்கள் மாறுவதில்லை. கலப்பட எண்ணெய்க்கு ஒரே தன்மைதான் உண்டு. அது எப்போதும் திரவ வடிவில்தான் இருக்கும்.
அதேபோல, இந்த கலப்பட எண்ணெய்களால் இதயம் நேரடியாகப் பாதிக்கப்படுவதும் இல்லை. இதயத்தின் மின் திறன் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். அதாவது, இதயத் துடிப்பின் விகிதம், ரத்தத்தை உள்வாங்கி வெளியேற்றும் தன்மை போன்றவை பாதிப்புக்குள்ளாகும். இந்த உண்மை சில ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி கலப்பட எண்ணெய்களால் ஏற்படும் முக்கியமான பிரச்னை கல்லீரல் பாதிப்பு. நாம் சாப்பிடும் உணவு குடலிலிருந்து முதலில் கல்லீரலில் சென்றுதான் சேர்கிறது.
அங்குதான் கார்போஹைட்ரேட், புரதம் என உணவு உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கிறது. அதனால், கலப்பட எண்ணெய்களால் கல்லீரலே பெரிதும் பாதிக்கப்படும். இந்த எண்ணெய்கள் கார்சினோஜெனிக் என்கிற புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டவை. அதனால் கல்லீரல் புற்றுநோய் வரும் அபாயமே இதில் அதிகம். கல்லீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு. கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் காஸ்ட்லியான அறுவை சிகிச்சையும் கூட. எல்லோராலும் செய்துகொள்ளவும் முடியாது. இதில் இன்னும் ஒரு அபாயமும் உண்டு.
கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டால் மாற்று சிகிச்சை செய்து கொண்டு தப்பித்துவிடலாம். இந்த புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சையும் கைகொடுக்காது;6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்துக்குள் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம். அதனால், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை எல்லோரும் உணர வேண்டும். மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டில் இடம்பிடித்திருக்கும் எண்ணெய் கலப்படத்தை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கலப்படம் செய்கிறவர்களை சமூக விரோதிகளாகத்தான் கருத வேண்டும். அரசாங்கம் இவர்கள் மேல் தீவிரமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்யும் உரிமை உண்டு. தங்கள் தயாரிப்பின் பெருமைகளைச் சொல்லவும் உரிமை உண்டு. ஆனால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான விளம்பரங்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இது தார்மீக ரீதியாகவும் பெரும் தவறு’’என்கிறார் ஜாய் தாமஸ்.
சமையல் எண்ணெயில் மெழுகு ஏன் கலக்கிறார்கள் என்ற நம் கேள்விக்கு நுகர்வோர் ஒருங்கிணைப்பு அலுவலரான சோமசுந்தரம் விளக்கமளிக்கிறார்.‘‘இந்த கிரீமை பூசிக் கொண்டால் சிவப்பாகிவிடலாம் என்று சில விளம்பரங்கள் வருகின்றன. அதுபோலத்தான் எண்ணெயில் வாக்ஸ் கலப்படம் என்பதும். இது ஒரு விற்பனைத் தந்திரம். ஏனெனில், மெழுகை எண்ணெயில் கலக்க முடியாது. மெழுகின் குணமே வேறு. சமையல் செய்து முடித்தபிறகு பாத்திரத்தில் படியும் எண்ணெய் கறையைத்தான் Wax என்று குறிப்பிடுகிறார்கள்.
எந்த எண்ணெயில் சமையல் செய்தாலும் கறை படியத்தான் செய்யும். ஆனால், வாக்ஸ் என்றவுடன் மெழுகை எண்ணெயில் கலக்கிறார்கள் போல என்று மக்கள் நினைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மக்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பும் விளம்பரம் இது. குறைவான விலையில் அரசாங்கமே விற்கிற பாமாயில் பற்றியும் இப்படித்தான் தவறான அபிப்பிராயத்தை மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்
கெடுதல் என்ற நம்பிக்கையையும் இப்படித்தான் உருவாக்கினார்கள்.
இதுபோன்ற விளம்பரங்களைப் பற்றி Advertisement Standards Council of India என்ற அமைப்பில் புகார் செய்யலாம். மும்பையில் இருக்கும் இந்த அமைப்பு பற்றிய விவரங்களை இணைய தளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதேபோல ஒரு எண்ணெய் நிறுவனம் கலப்படம் செய்கிறது என்று சந்தேகப்பட்டால் குறிப்பிட்ட எண்ணெயின் மாதிரியை எடுத்து அரசாங்கத்தின் பகுப்பாய்வுக்கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 500 ரூபாயிலேயே இந்த பரிசோதனை செய்துவிடலாம். உணவுப் பாதுகாப்புத்துறையிடமும் புகார் அளிக்கலாம். தவறு உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
தனிமனிதராக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதபட்சத்தில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ எங்களைப் போன்ற நுகர்வோர் அமைப்பிடமோ உதவிகளைக் கேட்கலாம். நாங்கள் தேவையான உதவிகளைச் செய்வோம். இதையும் விட முக்கியமான விஷயம், நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் எப்போதுமே பாதுகாப்பானவை. நம் ஊரின் வெப்பநிலைக்கும், நம் வாழ்க்கைமுறைக்கும் இந்த 3 எண்ணெய்கள்தான் ஆரோக்கியமானவையும் கூட. இதைத்தாண்டி இன்று சந்தையில் விற்பனையாகி வரும் எல்லா எண்ணெய்களுமே பிரச்னைகளுக்குரியவைதான்’’ என்கிறார்.
எந்த எண்ணெயைத்தான் வாங்குவது?
Refine, Bleach, Deodorised இந்த மூன்று விஷயங்களும் ஒரு எண்ணெயில் இருக்கக் கூடாது. எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் அது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கெட்டுப் போய்விடும். அதனால் ஒரு பொருளின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக செய்யப்படும் வேதிவினைதான் Refine. அடுத்து Bleach என்பது எண்ணெயை சுத்தமாகத் தண்ணீர் போல காட்டு வதற்காக செய்யப்படும் வேதிவினை.
அடுத்து எண்ணெய் நமக்குப் பிடித்த வாசனையில் இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயின் நிஜமான மணத்தை மாற்றி வேதிப்பொருட்களைக் கலக்கும் முறை. தரமான எண்ணெய் கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும். தண்ணீர் போல இருக்காது. பளிச்சென்று சுத்தமாகவும் இருக்காது. கடலை எண்ணெய் என்றால் அதன் வாசனை கொஞ்சமாவது இருக்கும். வித்தியாசமான நறுமணம் எதுவும் இருக்காது.
இந்த 3 விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எல்லாப் பொருட்களுக்குமே இது பொருந்தும். எண்ணெயைப் பொறுத்தவரை குடும்ப நல மருத்துவரிடமோ, இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை கேட்டுத் தேர்ந்தெடுப்பது இன்னும் பாதுகாப்பானது.
எண்ணெய் பயன்பாட்டிலும் பேலன்ஸ்டாக இருங்கள்!
கொஞ்சம் தானிய உணவு, கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள் என்று உணவில் சரிவிகிதத்தை மருத்துவர்கள் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். அந்த பேலன்ஸ்டு டயட் முறை எண்ணெய் பயன்பாட்டிலும் அவசியம். வீட்டுக்கு மாதம் 2 லிட்டர் எண்ணெய் சமையலுக்குத் தேவை என்றால் ஒரே எண்ணெயை மட்டுமே 2 லிட்டர் வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு வகையான சத்துகள் உண்டு. இதை Essential fatty acid என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என பல எண்ணெய்களை மாறி மாறிப் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் பலன் கிடைக்கும். அதேபோல, சிலர் எண்ணெய் என்றாலே ஆபத்து என்று அலர்ஜியாவார்கள். அப்படி முற்றிலும் எண்ணெயைத் தவிர்ப்பதும் தேவையற்றது. எண்ணெயில் இருக்கும் சத்துகளும் நமக்குத் தேவை. நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் எண்ணெயை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம், எந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத்தான்.
ஞானதேசிகன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்
No comments:
Post a Comment