Friday, October 21, 2016

கண்ணிருந்தும் குருடராய்...

By ஆசிரியர்  |   Last Updated on : 20th October 2016 01:32 AM 

மருத்துவமனைகளே அடுமனைகளாக மாறும் அவலம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தீயில் கருகி இறப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது பரபரப்பாகப் பேசப்படுவதும், எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படுவதும் மிக இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது. இந்த முறை, ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள எஸ்.யு.எம். தனியார் மருத்துவமனை, உலைக்களனாக மாறிப் பலரை பலி கொண்டிருக்கிறது.

அக்டோபர் 17-ஆம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 24 பேர் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வழக்கம்போல், இந்த நிகழ்வுக்கும் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புவனேசுவரம் எஸ்.யு.எம். மருத்துவமனையில் 2013-ஆம் ஆண்டிலேயே தீத்தடுப்பு பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், அந்த மருத்துவமனையில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியதாகவும் தீயணைப்புத்துறை உயரதிகாரிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கிறார்கள். தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள்மீது மருத்துவமனை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத போதிலும் அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்கு பதியவோ, வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவ்வளவு பெரிய மருத்துவமனை தங்கள் அறிவுறுத்தலை அலட்சியம் செய்து வருகிறது என்பதைப் பத்திரிகைகளுக்குச் சொல்லி, அழுத்தம் கொடுத்திருக்கலாமே, அதை ஏன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் செய்யவில்லை?
காயமடைந்தோரைப் பார்க்க வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, மாநில அமைச்சர்கள் எல்லாரும் மருத்துவமனையில் தீத்தடுப்பு நடவடிக்கைகளில் குறைபாடு இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஏன் அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை? எதற்காக அந்த மருத்துவமனை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது?

இவை யாவற்றையும் விஞ்சும் அவலம், தீ விபத்து நேரிட்டவுடன் பதறி அடித்து வெளியேறியது நோயாளிகளோ, உறவினர்களோ அல்ல, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள்தான். நோயாளிகள் படுக்கையில் கிடக்கிறார்கள். அவர்களை விட்டு ஓட மனமில்லாமல் அவர்களின் உறவினர்கள் அல்லாடுகிறார்கள். போதுமான சக்கர நாற்காலிகள் இல்லை. தள்ளுபடுக்கைகள் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளை அகற்ற உறவினர்களும் உள்ளே இல்லை. இதனால் மருத்துவமனைக்கு உள்ளேயே நீண்டநேரம் அல்லாடி, கருகியதைக் காட்டிலும் புகையில் மூச்சுத் திணறி இறந்தவர்களே அதிகம்.

இந்தத் தீ விபத்தின் போதுதான், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற தீ விபத்தில் 90 பேர் இறந்ததும், அதில் இறந்தவர் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் இருப்பதும் தெரியவருகிறது. இந்த விபத்தோடு அதைப்பற்றியும் பேசுகிறார்கள். இப்போதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.

சென்னையில் 10 படுக்கை வசதிகள் கொண்டவை முதல் 1000 படுக்கை வசதிகள் கொண்டவை வரை, 1000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் எத்தனை மருத்துவமனைகளில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளன? இந்த மருத்துவமனைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்குப் பயிற்சி உண்டா? இதுகுறித்து உடனடியாக ஆய்வு நடத்தியாக வேண்டும்.

கடந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஒரு தனியார் மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதற்குக் காரணம், வெள்ளத்தால் மின்வெட்டு. மருத்துவமனையின் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்ததால் ஜெனரேட்டர்களை இயக்க முடியவில்லை. நோயாளிகளை பிற மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்ல முடியாதபடி சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுவிட்டன. அது இயற்கைப் பேரிடர். ஆனால் ஒரு வளாகத்தில் தீ விபத்து என்பது அவ்வாறானது அல்லவே.

அரசு மருத்துவமனைகள் தவிர, தனியார் மருத்துவமனைகள் பலவற்றிலும் கட்டடத்தின் அடித்தளம் வாகன நிறுத்தம் மற்றும் ஜெனரேட்டர், பயனிழந்த பொருள்களின் அறை என்பதாக மாற்றப்படுகின்றன. கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலிருந்தும் இரண்டு அல்லது மூன்று வழிகளில் வெளியேறவும், கீழே இறங்க அல்லது மேலே ஏறிச்செல்லவுமான வாசல்கள் இருப்பதில்லை. எப்படி இதற்கெல்லாம் அனுமதி அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மருத்துவமனைகளைவிட, மிக மோசமான தீ விபத்தை எதிர்நோக்கி இருப்பவை வணிக வளாகங்கள்தான். பல ஆயிரம் பேர் பல தளங்களிலும் குவிந்து கிடக்கும்போது, அவர்கள் வெளியேற கீழ்த்தளம் தவிர வேறு வாசலே கிடையாது. அங்குள்ள ஊழியர்களுக்கு தீ விபத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த பயிற்சியும் கிடையாது. இரண்டு மூன்று விபத்துகள் நடந்தபிறகும் சென்னை ரங்கநாதன் தெரு போன்ற பகுதிகளில் வணிக வளாகங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுகுறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாய் இப்படி எத்தனைக் காலம்தான் பொறுப்பில்லாமல் நாம் இருக்கப் போகிறோமோ தெரியவில்லை!


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024