Sunday, October 16, 2016

சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!


நன்றி குங்குமம் தோழி

இனிது இனிது வாழ்தல் இனிது  பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்

உங்கள் திருமண உறவு அற்புதமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய வேண்டுமா? அப்போது சண்டை போடுங்கள்! என்ன இது? சந்தோஷமாக வாழ சண்டையைத் தவிருங்கள் என்றுதானே அறிவுறுத்துவார்கள்? சண்டை போடச் சொன்னால்?  ஏனென்றால், Sometimes a fight saves a relationship என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

கணவனும் மனைவியும் சண்டையே போடாமல் வாழ்வதென்பது சாத்தியமும் இல்லை. சண்டைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்களும் இருக்காது. சண்டை போடும்போது சில விதிமுறைகளை மட்டும் கவனத்தில் கொண்டால், அந்தச் சண்டை நல்ல பலனைத் தரும் என்பதே எங்கள் கோரிக்கை.

இருவருக்கும் இடையில் உருவாகும் சண்டைக்கான பொறுப்பை ஏற்கத் தவறாதீர்கள். சண்டைக்கான காரணத்தைத் துணையின் மீது போட்டுவிட்டு நீங்கள் தப்பிக்க நினைக்காதீர்கள்.

கோபம் உச்சத்தில் இருக்கும் போது சண்டையைத் தவிருங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு, ரிலாக்ஸ் செய்து, சண்டையின் வேகத்தைக் குறையுங்கள். கோபமான, வேகமான பேச்சு, சண்டையின் போது நீங்கள் முன் வைக்கிற வாதத்தைக் காணாமல் போகச் செய்து, துணையைக் காயப்படுத்தும்.

நீங்கள் போடுகிற சண்டை அர்த்தமுள்ளதாக  இருக்கட்டும். ஆக்கபூர்வமான விஷயங்களுக்காக இருக்கட்டும். சண்டையின் போக்கு அழிவை நோக்கிப் போவதாக இல்லாமல் கவனமாகக் கையாளுங்கள்.

சண்டையின் போது துணையிடம் கடுமையாக நடந்து கொள்ள, தகாத வார்த்தைகளை உபயோகிக்க, அவமானப்படுத்த, மோசமாக  நடத்த காரணங்களைத் தேடாதீர்கள். அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதே நாகரிகம்.

கோபத்தையும் சண்டையின் தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? துணையிடம் எக்ஸ்கியூஸ் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தைவிட்டுத் தற்காலிகமாக  நகருங்கள். இருவருக்குமான சண்டைகள் ஒரு எல்லையைத் தாண்டும்போது, இருவரில் ஒருவரோ, இருவருமோ இப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது என்பதை ஒரு
ஒப்பந்தமாகவே பின்பற்றுங்கள்.

சில வேளைகளில் உங்களையும் அறியாமல் சண்டை எக்கச்சக்க சூடுபிடிக்கும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற மாதிரி அந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாமல் போகும். எனவே, கோபம் கொப்பளிக்கிற போது, அதைச் சற்றே தணியச் செய்யுங்கள். இன்றைய சண்டையை நாளைக்கு ஒத்தி வைக்கலாம். தவறில்லை.

துணையை முட்டாள் என்பது மாதிரி மட்டம் தட்டிப் பேசுவது, பட்டப் பெயர் சொல்லித் திட்டுவது, நல்லாவே
இருக்கமாட்டே... நாசமாப் போயிடுவே’ என்கிற மாதிரி சாபம் விடுவது, அவமானப்படுத்துவது போன்றவற்றைச் சண்டையின் போது செய்யவே கூடாது.

சண்டையின் போது உங்கள் துணை பேசும்போது குறுக்கிடாதீர்கள். அவரை முழுமையாகப் பேசவிட்டுக் கேளுங்கள்.

பொதுவாக நாம் யாருமே எதிராளியின் பேச்சை 18 நொடிகளுக்கு மேல் பொறுமையாகக் கேட்பதில்லை என்பதுதான் உண்மை. துணையின் வாதத்தைக் கேட்டாலே அவரது கொந்தளிப்பு சற்று தணியும்.

சண்டையின் போது உங்களை முன்னிலைப்படுத்தி சுயநலமாகப் பேசுவதைத் தவிர்த்து, துணையையும் அவரது உணர்வுகளையும் முன்னிலைப்படுத்திப் பேசுங்கள்.

நான் பேசறது தப்பா இருக்கலாம். ஆனா, நான் இப்படித்தான் ஃபீல் பண்றேன்... இந்தப் பிரச்னையை நான் இப்படித்தான் பார்க்கறேன்’எனப் பேசுங்கள். அதாவது, உங்கள் மீது தவறு இருக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைத் துணைக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் சண்டையின் நோக்கம் உங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை  எப்படி  முடிக்கலாம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

சண்டையின்போது எக்காரணம் கொண்டும் குரலை உயர்த்திப் பேசக்கூடாது. என்னதான் கோபம் தலைக்கேறினாலும் அமைதியாக, குரலை உயர்த்தாமல் சண்டையிடுவதை ஒரு கொள்கையாகவே கடைபிடியுங்கள்.

உங்கள் துணையின் மனதைப் படிக்க முயற்சிக்க வேண்டாம். அவர் என்ன நினைத்திருப்பார்... அவரது
வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இதுதான் அர்த்தமாக இருக்க வேண்டும் என்கிற மாதிரியான தீர்மானங்களை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.

துணையின் செயல்களுக்கு நீங்களாக நெகட்டிவ் சாயம் பூசாதீர்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படித் தோன்றினால் துணையிடமே அதைச் சொல்லுங்கள். நீ பண்றது எனக்கு இப்படி நினைக்க வைக்குது? அது சரியா?’ எனக் கேட்டுத் தெளிவு பெறுங்கள். துணையின் உடல் மொழிகளுக்கும் நீங்களாக ஒரு அர்த்தம் கற்பிக்காதீர்கள்.

துணை, மிகவும் மூர்க்கத்தனத்துடன், நெகட்டிவாக பேசினால், உங்கள் சண்டைக்கு சட்டென ஒரு பிரேக் விடுங்கள்.

அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் எனக் காரணம் கேளுங்கள். கோபத்தின் வீரியம் சற்றே அடங்கியதும், அவரது பேச்சு முறையில் மாற்றம் இருக்கலாம் என்றும், உடல்மொழியைக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றும் சொல்லுங்கள்.

சண்டையின் போது அப்போதைய மனத்தாங்கலுக்கான விஷயத்தைப் பற்றி மட்டுமே விவாதியுங்கள். கடந்த கால சண்டைகளையும் பிரச்னைகளையும் சுமந்து கொண்டு வந்து தற்போதைய சண்டையில் சேர்க்காதீர்கள்.

அவர்/அவள் எப்போதுமே இப்படித்தான்... மோசமாத்தான் நடந்துப்பார்(ள்)’என்கிற மாதிரியான வார்த்தைகளையும், பழசை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன்...’என்பது போன்றும் பேசாதீர்கள். அவை ஆரோக்கியமான சண்டையை திசைத் திருப்பி விடும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து சண்டை போடுங்கள். சந்தோஷமான தருணங்களில் பழைய மனஸ்தாபத்துக்குக் காரணமான ஏதோ ஒரு விஷயத்தைக் கிளற வேண்டாம்.

இருவரில் ஒருவருக்கு ஒரு விஷயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இன்னொருவருக்கும் அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். 'இதெல்லாம் ஒரு மேட்டரா..?’என்கிற மாதிரி துணையின் பார்வையை அணுகாதீர்கள்.

சண்டையின்போது உங்கள் துணை, தவறான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் வைத்துக் கொண்டு பேசலாம். முதலில் அவரது பேச்சுக்கு மதிப்பளியுங்கள். பிறகு அவரது தகவல்களை சரிசெய்யுங்கள். மாறாக அவரது உணர்வுகளை சரி செய்ய முனையாதீர்கள்.

(வாழ்வோம்!)

எழுத்து வடிவம்: மனஸ்வினி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024